2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி தமிழகத்தின் முதல் அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, 4 ஆண்டு ஆட்சியை முழுமையாக நிறைவு செய்திருக்கிறார். அவரின் இந்த நான்கு ஆண்டு ஆட்சிக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை முன்வைப்பவர்கள் கூட, எந்த அரசியல் பின்புலனும் இல்லாத எடப்பாடி பழனிசாமி, நான்கு ஆண்டுகள் ஆட்சியைத் தொடர்ந்தது, மாபெரும் சாதனை என்று தான் புகழ்ந்து கூறுகிறார்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை அவர் மீது நம்பிக்கையில்லாத அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கூட, கொரோனோ காலத்தில் அவரின் செயல்பாடுகள், மாவட்டந்தோறும் ஆய்வுக் கூட்டங்கள், பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதற்கு முன்பாக இ.பி.எஸ். தொடங்கிய தேர்தல் பரப்புரை போன்றவற்றால், அவரின் தலைமையில் தேர்தலை சந்தித்தால், அ.தி.மு.க.வுக்கு மீண்டும் ஒருவேளை வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்து வருகிறார்கள்.
தி.மு.க.வுக்கு எதிரான வலுவான பிரசாரத்தை தொடங்கிய முதல்வர் இ.பி.எஸ்., சசிகலா விவகாரத்தில் கோட்டை விட்டுவிட்டாரே? 2017 காலகட்டத்தில் தர்மயுத்த நாயகரின் குடைச்சல், தி.மு.க.வின் நெருக்கடிகள், டி.டி.வி.தினகரனின் பழிவாங்கும் நடவடிக்கைகள், மத்திய பா.ஜ.க.அரசின் இடர்பாடுகள் என எவ்வளவோ சதிராட்டங்களை எல்லாம் சமாளித்து, அ.தி.மு.க. அரசை காப்பாற்றி, குறுகிய காலத்தில் மிகச் சிறந்த ராஜதந்திரி என்று பெயர் எடுத்த எடப்பாடி பழனிசாமி, சசிகலா ஆடிய ஒருநாள் ஆட்டத்திலேயே ஃப்பூனாக மாறிவிட்டாரே என்று வேதனைப்படுகிறார்கள் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள். நமக்கு மிகவும் நெருக்கமான தலைமைக் கழக நிர்வாகி மனமுடைந்து தன்னுடைய அதிருப்தியை கொட்டினார்.
முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி அ.தி.மு.க. தொடங்கிய தேர்தல் பிரசாரம், பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அவர் சார்ந்த சமூக மக்கள் நிறைந்துள்ள கொங்கு மண்டலத்தில் மட்டுமின்றி, வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள் என ஒட்டுமொத்த தமிழகத்திலும், எடப்பாடி பழனிசாமியின் பெயர் கிராம மக்களின் மனங்களில் கூட பதிந்துவிட்டது.
அம்மா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க. ஆட்சி நீடிக்குமா? கட்சி கட்டுக்கோப்பாக இருக்குமா? என்ற சந்தேகம் ஒவ்வொரு அ.தி.மு.க. தொண்டனின் உள்ளத்திலும் இருந்தது. அந்த அவநம்பிக்கையை நீக்கி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியிலேயே இ.பி.எஸ்.ஸும் அ.தி.மு.க. ஆட்சியை கொண்டு செல்கிறார் என்ற பாராட்டு, மாநிலம் முழுவதும் கிராமங்களில்கூட அதிகமாக கேட்க முடிந்தது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த நான்கு ஆண்டு கால ஆட்சியில், ஒவ்வொரு மாவட்டத்திலும் சொல்லிக் கொள்ளும்படி ஏதாவது ஒரு முக்கிய திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த வளர்ச்சித் திட்டங்களைப் பற்றியெல்லாம் மக்கள் பேசுகிறார்கள்.
கிராமங்களில் இன்றைக்கும்கூட இரட்டை இலைக்கு செல்வாக்கு குறையவில்லை.மேலும், கல்லூரி மாணவர்களின் அரியர்ஸ் தேர்ச்சி, மருத்துவக் கல்லூரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இடஒதுக்கீடு, அண்மைக்காலமாக தமிழக அரசின் சாதனைகளை சொல்லி தொலைக்காட்சிகளில் வரும் எடப்பாடி பழனிசாமியின் வெற்றி நடை போடும் தமிழகம் போன்ற விளம்பரங்கள், இளம்தலைமுறையினரிடம், குறிப்பாக புதிய வாக்காளர்களிடம் அதிகளவு ஆதரவைப் பெற்றுள்ளது. இதையெல்லாம்விட, கடந்த பொங்கல் திருநாளுக்கு வழங்கிய 2500 ரூபாய் ரொக்கப் பரிசால் மகிழ்ச்சியான பெண்கள், எடப்பாடி பழனிசாமியை மனம் குளிர்ந்து பாராட்டி வருகிறார்கள். இப்படியெல்லாம் கடந்த நான்கு ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை அறிவித்து, தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க. அரசுக்கு எதிராக ஏற்பட்டிருக்க வேண்டிய அதிருப்தியை, பெருமளவில் குறைந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. நாடாளுமன்றத் தேர்தலில் இருந்த அதே கூட்டணியோடு, வரும் சட்டமன்றத் தேர்தலை சந்தித்தாலும்கூட, அ.தி.மு.க.வுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை தர மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையுடன்தான் நாங்கள் எல்லாம் இருக்கிறோம்.
இந்த நேரத்தில் தேவையில்லாமல் சசிகலா விவகாரத்தில் தலையை நுழைந்து மாபெரும் வரலாற்றுப் பிழையை செய்துவிட்டாரே? எடப்பாடி பழனிசாமி என்பதுதான் எங்கள் ஆதங்கமெல்லாம். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் எப்படி பாதிக்கப்பட்டது? அவர் எப்படி இறந்தார்? போன்ற விஷயங்கள் எல்லாம் இன்றைக்கும் மர்மமாகவே இருக்கிறது. இதற்கெல்லாம் சசிகலாதான் காரணம் என்ற கோபம் அ.தி.மு.க. தொண்டர்களிடம் மட்டுமல்ல, கிராம மக்களிடமும ஆழமாக பதிந்திருக்கிறது. இப்படிபட்ட மனப்போக்கை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, அரசியல் விளையாட்டில் எடப்பாடி பழனிசாமி வெற்றிப் பெற்று விடுவார்கள் என்றுதான் நாங்கள் எல்லாம் திடமாக இருந்தோம்.
சசிகலாவுக்கு எதிராக எத்தனையோ குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும், அவர், மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவோடு, 35 ஆண்டுகள் நெருங்கிய தோழியாக இருந்தவர். ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோதும், இல்லாதபோதும் அவரின் சோகம், சந்தோஷம் போன்ற எல்லா நேரத்திலும் துணையாக இருந்தவர் சசிகலா என்பதில் மாற்றுக் கருத்து இருக்கப்போவதில்லை. சோதனையான காலகட்டத்தில் என்னுடன் துணையாக இருந்தவர் சசிகலா என்று பலமுறை செல்வி ஜெயலலிதாவே வெளிப்படையாக சொல்லியிருக்கிறார். அதையும் கடந்து, இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்கிறார், அவரது தலைமையிலான அமைச்சரவை இயங்கிக் கொண்டு இருக்கிறது என்றால், அதை உருவாக்கி தந்தவரே சசிகலாதான் என்பது, அ.தி.மு.க.வில் உள்ள ஒவ்வொரு தொண்டனுக்கும் தெரியும்.
இப்படி அவர் மீது ஒருபக்கம் பரிதாபம் இருந்தாலும், சிறையில் இருந்து விடுதலையான பிறகும், அ.தி.மு.க.வை கைப்பற்றும் நோக்கத்தோடுதான் சசிகலா செயல்பட்டு வருகிறார் என்ற தகவல் வேகமாக பரவி வருவதைப் பார்த்து, பெரும்பான்மையான அ.தி.மு.க. தொண்டர்கள் முகம் சுழிக்க தொடங்கினார்கள். இந்தநேரத்தில், தேவையில்லாமல், காரில் அ.தி.மு.க. கொடி கட்டுவதை எதிர்ப்பது, அம்மா நினைவிடத்தை மூடுவது, அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் அதிகளவு காவலர்களை நிறுத்துவது போன்ற நடவடிக்கைகளை எடுத்து, இதுவரை கட்டி காத்து வந்த இமேஜை இ.பி.எஸ்.ஸே ஒரு நாளில் இழந்துவிட்டாரே என்ற வேதனை தான் எங்களுக்கு அதிகமாக இருக்கிறது.
இ.பி.எஸ்.ஸின் பயத்தை சசிகலாவும், தினகரனும் சரியாக பயன்படுத்திக் கொண்டு, அ.தி.மு.க. தொண்டர்களிடம் இன்னும் தங்களுக்கு செல்வாக்கு இருக்கிறது என்பது போன்ற ஒரு நாடகத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்டார்கள். இதன் மூலம் நான்கு ஆண்டுகள் கஷ்டப்பட்டு காப்பாற்றி வந்த நற்பெயரை, ஒருநாளில் பறிகொடுத்து நிற்கும் இ.பி.எஸ். பார்த்து, நாங்களும் கவலைகொள்ள தொடங்கிவிட்டோம்.
சசிகலா, தமிழகம் வருவதற்கு இத்தனை கெடுபிடிகளை, அரசு தரப்பில் இருந்து செய்திருக்கவே கூடாது, அவரின் அரசியலைக் கண்டுகொள்ளாமல் இருந்திருக்க வேண்டும் என்பதுதான், அ.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள் பலரின் எண்ணம். பெங்களூரில் இருந்து எப்படி வேண்டுமானாலும் தமிழகத்திற்கு திரும்பட்டும், ஆயிரம் கார்களில் கூட பவணி வரட்டும். அதையெல்லாம் பார்க்கும் மக்கள் சசிகலாவிற்கு எதிராக நிச்சயமாக எதிர்வினையாற்றுவார்கள். அதற்கு இடம் கொடுக்காமல், சசிகலாவின் தமிழகப் பயணத்திற்கு இவ்வளவு முக்கியத்தும் கிடைப்பதற்கே இ.பி.எஸ்.ஸே காரணமாகிவிட்டாரே என்றுதான் நாங்கெல்லாம் வேதனைப்படுகிறோம்.
அரசியலில் புத்திசாலித்தனம் என்பது எதிரியைப் பற்றி பேசாமல் இருப்பதுதான். அ.தி.மு.க.வின் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வில் அண்மையில் நடந்த நிகழ்வைக்கூட உதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் சசிகலா விஷயத்தில் கோட்டைவிட்டு விட்டார்களே ஆட்சியாளர்கள் என்பதுதான் வருத்தமாக இருக்கிறது. கடந்த மாதம், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக அவரது மூத்த சகோதரர் மு.க.அழகிரி, மதுரையில் கூட்டத்தைக் கூட்டி, மு.க.ஸ்டாலினை அவமானப்படுத்தினார். ஆனால், அந்த நிகழ்வைப் பற்றி ஒரு வார்த்தைக் கூட சொல்லாமல், அப்படியொரு நிகழ்வு நடந்த மாதிரிகூட காட்டிக் கொள்ளாமல், அழகாக கடந்துச் சென்றார் மு.க.ஸ்டாலின். அதுபோல, சசிகலா விஷயத்தையும் முதல்வர் இ.பி.ஸ்., கையாண்டிருந்தால், அவரின் ராஜதந்திரத்திற்கு மிகப்பெரிய பாராட்டு கிடைத்திருக்கும்.
இப்போதுகூட ஒன்றும் கெட்டுப்போகவில்லை. அ.தி.மு.க.விஷயத்தில் சசிகலா ஆடும் ஆட்டத்தையெல்லாம் அனுமதிக்க வேண்டும். அவரை நம்பியிருக்கும் கூட்டம் சொல்வதைப் போல, அவர் சார்ந்த சமுதாயத்தில்கூட அவருக்கு மிகப்பெரிய செல்வாக்கு இல்லை என்பதை, உளவுத்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் இ.பி.எஸ்., குறுகிய நாட்களிலேயே உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் இப்போது அவருக்கு முன்பு உள்ள சவால், ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் அனைவரும், அ.தி.மு.க.வில் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்ற விருப்பத்தில் இருக்கிறார்களா, இல்லை மீண்டும் அடிமை வாழ்க்கையைதான் விரும்புகிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, தி.மு.க.வை எதிர்க்கும் அதே வலிமையோடு சசிகலா மற்றும் தினகரனையும் துணிச்சலோடு எதிர்க்க வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த அ.தி.மு.க. தொண்டர்களின் எண்ணமாக இருக்கிறது.
ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், இன்றைய சூழ்நிலையில், அ.தி.மு.க,வையும், கொடியையும், சின்னத்தையும் காப்பாற்ற, மேல்மட்டத்தில் உள்ள தலைவர்களிடம்தான் ஒற்றுமை தேவைப்படுகிறது. அவர்களில், ஒன்றிரண்டு கருங்காலிகள் அணி மாறினால்கூட, இ.பி.எஸ். தலைமைக்கு பேராபத்து வந்துவிடும். ஆகவே, தேர்தல் நெருங்கும் சமயத்தில் நான்கு ஆண்டுகள் கட்டிக் காப்பாற்றிய செல்வாக்கை ஒருநாளில் தூள் தூளாக சிதறிப் போக விட்டதைப்போல, இனிவரும் நாட்களிலாவது அரசியல் சாதூர்யத்துடன் வியூகங்களை வகுத்து இ.பி.எஸ் செயலாற்ற வேண்டும்.
கிராமத்தில் ஒரு சொல்லாடல் உண்டு. வேலியில் போன ஓணானை வேட்டிக்குள் விட்டுக்கொண்டு, குத்துதே குடையுதே என்ற கதையாகதான் இன்றைக்கு மாறியிருக்கிறது சசிகலா வருகைக்கு எதிராக தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள். ஒருமுறை பட்ட சூட்டில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, மீண்டும் அரசியல் களத்தில் சசிகலா ஸ்கோர் செய்து பெயர் பெற்றுவிடாத மாதிரி, முதல்வர் இ.பி.எஸ், தனது சாணக்கியத்தனத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்பதுதான் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஒற்றைத் தலைமை என்பதே, அராஜகமாகதான் இருக்கும். இன்றைக்கு உள்ள இரட்டைத் தலைமையை ஒட்டுமொத்த அ.தி.மு.க. தொண்டர்களும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். லட்சக்கணக்கான தொண்டர்களின் நலனைக் கருத்தில் கொண்டாவது, இ.பி.எஸ்.ஸின் முயற்சிக்கு, ஓ.பி.எஸ். மற்றும் அமைச்சர்கள், கழக முன்னோடிகள் உறுதுணையாக நிற்க வேண்டும் என்ற குரல்தான், இன்றைய அ.தி.மு.க.வில் அதிகமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. வெற்றியோ, தோல்வியோ, மோதி பார்த்துவிடுங்கள் என்பதுதான் ஒட்டுமொத்த அ.தி.மு.க. தொண்டர்களின் எதிர்பார்ப்பு என்று நீட்டி முழங்கினார் அந்த மூத்த தலைமைக் கழக நிர்வாகி.
ஏற்கெனவே, நல்லரசில் வெளியான சிறப்புச் செய்தியில் குறிப்பிட்டிருந்தபடி, சசிகலாவுக்கும், இ.பி.எஸ்.ஸுக்குமான போட்டியில் முதல் ரவுண்டில் சசிகலா ஸ்கோர் செய்துவிட்டார். இரண்டாவது சுற்றில் வெல்லப் போவது எடப்பாடி பழனிசாமியா? சசிகலாவா? பொறுத்திருந்து பார்ப்போம்.