Sun. Nov 24th, 2024

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியை இயக்கி வருவதே, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த இரண்டு மணிகள் தான் என்று பேச்சு, அரசியல் தளத்தைக் கடந்து பொதுவெளியிலும் பரவலாக பேசப்படுகிறது. அந்த வகையில் கோவை மாவட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பி.தங்கமணியும்தான், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசாங்கம் என்ற தேரை இழுத்துச் செல்லும் இரண்டு சக்கரம் போல, அரசியல் களத்திலும், அரசியலுக்கு அப்பாற்பட்ட களத்திலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அமைச்சர் பி.தங்கமணியை பொறுத்தவரை சாத்வீகமாக எல்லா விஷயங்களையும் கையாளக் கூடியவர். அவருக்கு முற்றிலும் மாறாக, எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற பாணியை கையாளக் கூடியவர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,முதல்வர் எடப்பாடி பழனிசாமி வகுத்து கொடுத்துள்ள பாதையில் அடி பிறழாமல் செல்லும் எஸ்.பி.வேலுமணி, எவ்வளவு சிக்கலான பிரச்னைகளையும், காந்தி நோட்டுகளால் தீர்த்துவிட முடியும் என்று உறுதியாக நம்பி, அந்த யுக்தியையே முழுமையாக செயல்படுத்தி வருகிறார் என்று அவரது விசுவாசிகளே வியப்புடன் பேசி வருகிறார்கள். மேலும், இ.பி.எஸ்.ஸை விட ஒருபடி மேலே போய், மிரட்டல் பாணியும் அவருக்கு கைவந்த கலை என்கிறார்கள் அவரது நிழலாக இருக்கும் அ.தி.மு.க. நிர்வாகிகள்.

இன்றைக்கு இ.பி.எஸ்.ஸுக்கு அடுத்த நிலையில் சகலகலா வல்லவராக காட்சியளிக்கும் எஸ்.பி.வேலுமணி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை, அரசியலிலும், ஆட்சியிலிலும் அமைதிப்படை சத்யராஜ் மாதிரிதான் சப்தநாடியும் ஒடுக்கிக்கொண்டு இருந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கோவை மாவட்ட அரசியலில் மட்டுமின்றி, தமிழக அரசின் செயல்பாடுகளிலும் அதிவேகமாக ஆதிக்கம் செலுத்தும் செல்வாக்குமிக்கவராகவும், கோவை மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களிலும், தலைநகர் சென்னையிலும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமனத்திலும் அவரது தலையீடு இருக்கிறதாக, தலைமைச் செயலக உயரதிகாரிகளே புலம்பிய தருணங்கள் ஏராளம்.

2006 ல் முதல்முறையாக எம்.எல்.ஏ. வாகி சென்னைக்கு புறப்பட்டவர், அடுத்தடுதத தேர்தல்களில் அவரின் ஸ்கிராப் உச்சத்திற்கு mசென்றுவிட்டது. அவருக்கு ஏணியாக இருந்தவர்களை எல்லாம் ஈவு இரக்கமின்றி பின்னுக்குத் தள்ளிவிட்டு, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மிகுந்த நம்பிக்கைக்குரியவராகவும் மாறி, வெகு விரைவாக சிகரத்தற்கு சென்றுவிட்டார், எஸ்.பி.வேலுமணி. அதற்கு அவரிடம் இருந்து வரும் சில, பல நற்குணங்கள்தான் என்கிறார்கள், அவரை நன்கு அறிந்த கோவை அ.தி.மு.க. நிர்வாகிகள்.

அரசியல் வாழ்க்கையின் லட்சியமான அமைச்சர் பதவியையும் அவர் பெற்று, கோவை மாவட்டத்தில் அசைக்க முடியாத சக்தியாக வளர்ந்தார். அன்று முதல் இன்று வரை எஸ்.பி.வேலுமணி அரச மரமாக, கோவை மாவட்டத்தில் ஆழமாக காலூண்ற, அவரின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாகவும், உறுதுணையாகவும் இருந்த மூத்த தலைவர்கள், இன்றைக்கு அட்ரஸ் இல்லாமல் அனாதைகளைப் போல, மக்கள் செல்வாக்கை இழந்து பரிதாபமான நிலைக்கு சென்றுவிட்டார்கள் என்பதுதான் சோகம். கோவை மாவட்டத்தில் தன்னை தவிர வேறு எந்த அரசியல்வாதியும் முக்கியத்துவம் பெற்றுவிட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தில் அவர் ஆடி வரும் ஆடுபுலி ஆட்டத்தில் அரசியல் முகவரிகளை இழந்தவர்களின் எண்ணிக்கை மிக நீளமானது.

நிகழ்காலத்தில் இப்படியொரு நிலையை உருவாக்கிவிட்ட எஸ்.பி.வேலுமணி, எதிர்காலத்திலும் தன்னை தவிர வேறு எந்தவொரு அரசியல்வாதியும் அ.தி.மு.க.வில் செலவாக்கு பெற்றுவிட்டுவிடக் கூடாது என்று திட்டம் போட்டு, காய் நகர்த்தி வருகிறார்.அதனால், மனம்நொந்தபோன முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் மாவட்டச் செயலாளர்கள், வட்டார, ஒன்றிய நிர்வாகிகள் என செஞ்சுரி அளவுக்கு மேலான வி.ஐ.பி.க்கள் மாற்று முகாமை தேடிக் கொண்டிருந்தனர். அவர்களின் மனவேதனைக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், சிறையில் இருந்து விடுதலையாக வரும் சசிகலாவின் ராஜ்யத்தில் ஐக்கியமாகிவிடும் யோசனையில் தீவிரமாக ஆழ்ந்திருப்பதாக கூறுகிறார்கள் கோவை மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள்.

ஒட்டுமொத்த கோவை மாவட்ட அ.திமுக.வே கூண்டோடு சசிகலா பக்கம் சாயும் நிலை உருவாகிவிட்டதாம். எடப்பாடி பழனிசாமி மீது அபரிதமான நம்பிக்கை வைத்திருப்பவர்கள் கூட, எஸ்.பி.வேலுமணியின் ஆட்டத்தைக் கண்டு வெறுத்துப் போய்தான், அணி தாவும தீர்மானத்திற்கே வந்ததாக கூறுகிறார்கள் விரக்தியில் உள்ள அ.தி.மு.க.மாவட்ட நிர்வாகிகள். அவர்களில் ஒருவர், அமைச்சர் வேலுமணியால் தான் பட்ட அவமானங்களையும் அழிவையும் ரத்தக் கண்ணீர் வடிய நம்மிடம் கொட்டினார். ஆதியும் அந்தமுமாக அவர் வேலுமணியின் இன்னொரு முகத்தை வெளிச்சம் போட்டு காட்டினார்.

1991 – 1996 toஆம் ஆண்டு காலகட்டத்தில் அப்போதைய முதல்வர் செல்வி ஜெயலலிதா அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்தார்..அவரது காலத்தில் கோவை, திருப்பூர், நாமக்கல் என ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தின் செயலாளராக இருந்தவர் கே.பி..ராஜு..அவரின் சிஷ்ய கோடிகளில் மெச்ச தகுந்த ஒருவராக இருந்தவர் தான் இப்போதைய கொங்கு மண்டல சிங்கமாக வலம் வரும் எஸ்.பி.வேலுமணி. ராஜுவிடம் இவருக்கு எந்தளவுக்கு செல்வாக்கு இருந்தது என்றால் அவர் செல்லும் இடம் எல்லாம், கூடவே நிழல்போல செல்லும் அளவுக்கு செல்வாக்குப் பெற்றிருந்தார். ராஜுவின் சூட்கேஸை நம்பிக்கையோடு தூக்கி செல்லும் தங்க கம்பியாக இருந்துள்ளார் எஸ்.பி.வேலுமணி..அந்த சூட்கேஸில் கோவை மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகளைப் பற்றிய தஸ்தாவேஜுகளும் இருந்துள்ளன..கூடவே  ராஜுவின் வேட்டி,சட்டை மற்றும் உள்ளாடைகளும் இருந்துள்ளன.அதனை பாதுகாக்கும் விசுவாசியாக அப்போது வேலுமணி இருந்துள்ளார்.

அந்த விசுவாசத்திற்கு கிடைத்த பரிசுகள்தான் ஒன்றிய அளவில் கட்சி பதவிகளும் குனியாமுத்தூர் நகராட்சி சேர்மன் பதவியும்.1996 – 2001 காலகட்டத்தில் ராஜுவிடம் காட்டிய அதே விசுவாசத்தை சின்னம்மா சசிகலாவின் உறவினரிடமும் காட்டினார் எஸ்.பி.வேலுமணி..அந்த விசுவாசத்தை கண்டு உற்சாகமான  ராவணன், உல்லாசமாக இருந்த ஒருநேரத்தில், 2006 சட்ட மன்ற தேர்தலில் பேரூர் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை எஸ்.பி. வேலுமணிக்குப் பெற்று தந்தார். அன்றைக்கு கதவைத் தட்டிய அதிர்ஷ்ட தேவதை, அவரது வீட்டிலேயே குடியிருக்கும் அளவுக்கு, அ.தி.மு.க. மேலிடத்தில் தனது செல்வாக்கை வளர்த்துக் கொண்டார். ஆனால், தனக்கு அரசியலில் அடையாளம் கொடுத்த ராஜுவுக்கு கொஞ்சம் கூட விசுவாசம் இல்லை, கருணை கூட காட்டாமல், அவரை அழிக்கத் தொடங்கினார் எஸ்.பி.வேலுமணி. அவரின் அதிகார வேட்டையில் ராஜு, அரசியல் செல்வாக்கை இழந்தது மட்டுமின்றி, அவருக்கு உறுதுணையாக இருந்த எண்ணற்ற தொழிலதிபர்களும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சதிராட்டம் முன்பு நொடிந்து போனர்கள்.  

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக எஸ்.பி.வேலுமணி சென்னைக்குப் புறப்பட்டது 2006 ஆம் ஆண்டில்தான். ஆனால், அதற்கு முன்பாக 2001 ஆம்ஆண்டிலேயே கோவை மாவட்ட அமைச்சர்களாக பா.வே.தாமோதரன், வேலுச்சாமி, பொள்ளாச்சி ஜெயராமன், உடுமலைப்பேட்டை சண்முகவேலு (இப்போது இவர் அ.ம.மு.க.நிர்வாகி)ஆகியோர் கோவை மாவட்டத்தில் செல்வாக்கோடு வலம் வந்தனர்.அதே காலகட்டததில், மாவட்டச் செயலாளராக ஏ.கே.செல்வராஜ், திருப்பூர் சிவசாமி போன்றவகளும், முன்னாள் மேயர் மலரவன், பல்லடம் துரைமுருகன்,  இறந்துப் போன தாமோதரன், தொழிற்சங்கச் செயலாளர் சின்னசாமி, சேலஞ்சர் துரை( இப்போது இவர் அ.ம.மு.க. நிர்வாகி) என பெருங்கூட்டமே கோவை அ.தி.மு.க.வில் சக்திமிக்க தலைவர்களாக வலம் வந்தனர். அந்தக் கூட்டத்தில்கூட ஒருவராக இல்லாத எஸ்.பி.வேலுமணி, 2006 ல் எம்.எல்.ஏ.வாக ஆனவுடன் அப்போதும் அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர விசுவாசியாக மாறி, கோவை மாவட்டத்தில் செல்வாக்காக இருந்த அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகிகளுக்கு எதிராக புகார் பட்டியல் வாசித்து, ஓ.பி.எஸ். மூலம் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் போட்டு கொடுத்து, அமைச்சர்களையும், மாவட்டச் செயலாளர்களையும் வேட்டையாடினார்

2001 ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு படியாக எஸ்.பி.வேலுமணி ஏற,ஏற, அவரை வளர்த்துவிட்ட அத்தனை கோவை மாவட்ட வி.ஐ.பி.க்களும் பல படிகள் சறுக்கினார்கள். 2014 ல் அவர் அமைச்சராக பதவியேற்ற நாள் முதல் இன்று வரை அவரின் பதவி வெறிக்கு பலியானவர்கள் பட்டியலில் அவருக்கு முன்பாகவே அரசியலில் கோலோச்சிய பா.வே.தாமோதரன், செ.ம.வேலுச்சாமி, உடுமலைப்பேட்டை சண்முகவேலு, திருப்பூர் சிவசாமி, ஏ.கே.செல்வராஜ் என பெருங்கூட்டமே இருக்கிறது. அவர்களின் மனக்குமறல்களை கேட்க நேர்ந்தால், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் அதிகார போதையில் அட்ரஸ் இல்லாமல் போனவர்களின் ரத்தக் கண்ணீர்தான் வடிக்க நேரிடம்.  

அரசியல் முகவரி இழந்தவர்களில் செ.மா.வேலுச்சாமியின் கதை மிக, மிக சோதனைமயமானது. முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காரில் சுற்றுப்பயணம் செல்லும்போது, சாலையோரம் மனுவோடு நிற்கும் மாற்றுத்திறனாளியை கவனித்து, காரை நிறுத்தி அவரது மனுவை வாங்கி அந்த ஸ்பாட்டிலேயே நிறைவேற்றி வைக்கும் குணம் கொண்டவர். அப்படிபட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, செ.மா.வேலுச்சாமியை மட்டும் ஏறெடுத்துப் பார்ப்பதில்லை. முதல்வராக பதவியேற்ற நாளில் இருந்து விமானம் மூலம் அவர் கோயம்புத்தூருக்கு நூறு முறை வந்திருப்பார். அத்தனை முறையும் சாதாரண தொண்டன் கூட விமான நிலையத்திற்குள் சென்று முதல்வர் இ.பி.எஸ்.ஸுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்த அனுமதி கிடைத்துவிடும். ஆனால், செ.மா.வேலுச்சாமியை மட்டும் விமான நிலையத்திற்குள் அனுமதிக்காமல் அமைச்சர் வேலுமணியின் ஆர்மி முட்டுக்கட்டைப் போட்டு வருகிறது.

ஒவ்வொரு முறையும் இ.பி.எஸ்.கோவை விமான நிலையம் வரும் போது, செ.மா.வேலுச்சாமி, அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் ஒருவராக நின்று வணக்கம் செலுத்திவிட்டு பரிதாபமாக திருப்பும் காட்சியை பார்க்கும் அத்தனை அ.தி.மு.க. தொண்டர்களும் ரத்தக் கண்ணீர் வடிக்கிறார்களாம். ஆனால், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அடிபொடி வேலைகளை செய்யும் அம்மன் அர்ஜுனன், எம்.எல்.ஏ.அருண்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் அரசியலில் கிடுகிடுவென உயரத்திற்கு வந்துவிடுகிறார்களாம்.

இப்படி கோவை மாவட்டத்தில் தனக்கு எதிராக ஒருவர்கூட அரசியல் செய்துவிடக்கூடாது என்ற திட்டத்தோடு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செயல்பட்டு வருவதால், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் என பெருங்கூட்டமே, சசிகலாவிடம் சரணாகதி அடைவதற்கு, ரகசியமாக கூடி கூடி பேசி வருகிறார்களாம்.

இன்று முதல் கோவை மாவட்ட அ.தி.மு.க.வில் ஒவ்வொரு செங்கற்களாக கழன்று விழுந்து, ஒட்டுமொத்த கூடாரமே அடுத்தடுத்த நாள்களில் காலியாகிவிடும் என நொந்துபோனார், அந்த முன்னாள் அ.தி.மு.க.அமைச்சர்.

பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பா அமைச்சர் எஸ்.பி.வேலுமணி…