இந்தியாவிலேயே காற்றாலை மின் உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம் முன்னணியில் உள்ளது.
இந்தியாவில் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தில் 34 சதவீதம் தமிழகத்தின் பங்காகும். தமிழ்நாட்டில் மேலும் காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. தமிழ்நாட்டில் நீண்ட கடற்கரை உள்ளதால், இந்த பகுதிகளில் அதிகமாக காற்று வீசி வருகிறது. இதை பயன்படுத்தி கடல் காற்றாலை மின்உற்பத்தியை மேலும் அதிகப்படுத்த சிறப்பு திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
டென்மார்க் நாட்டில் இதேபோல கடலில் காற்றாலை அமைத்து மின்சாரத்தை உற்பத்தி செய்கிறார்கள். எனவே டென்மார்க்குடன் இது தொடர்பாக டென்மார்க்கில் கடல் காற்றாலை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள அரசு துறை நிறுவனங்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டன. அவர்கள் தமிழ்நாட்டில் கடலில் காற்றாலை மின்சார நிலையங்களை அமைத்து தர முன் வந்திருப்பதுடன் பெரிய அளவில் முதலீடும் செய்யவும் தயாராக இருக்கிறார்கள்.
மன்னார் வளைகுடா பகுதிகளிலும், அங்குள்ள தீவுகளிலும் முதல்கட்டமாக காற்றாலைகள் அமைக்கப்படுவதற்கான சாத்திய கூறுகள் கண்டறியப்பட்டுள்ள. அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் காற்று அதிகம் வீசக்கூடிய எஞ்சிய கடற்கரைகளையும் தேர்வு செய்யும் பணியும் துரிதப்படுத்தப்பட்டு, அங்கும் காற்றாலைகள் அமைப்பதற்கான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
டென்மார்க்கில் கடலில் மிதக்கும் காற்றாலைகள் அதிகமாக உருவாக்கப்பட்டுள்ளதால், அதேபோல தமிழகத்திலும் மிதக்கும் காற்றாலைகளை அமைத்துக் கொடுக்க இருக்கிறது.
இதன் தொடர்ச்சியா கடல் காற்றாலை திட்டத்தை விரைவுப்படுத்த டென்மார்க் மின்சக்தி மந்திரி ஜானிக் ஜோர்சென்சன் தலைமையில் 50 பேர் கொண்ட குழு தமிழகம் வந்துள்ளது.
அந்த குழுவினர் இன்று கலைவாணர் அரங்கில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தமிழ்நாட்டில் எந்த மாதிரியான காற்றாலைகளை அமைப்பது? எவ்வாறு அவற்றை செயல்படுத்துவது என்பது தொடர்பாக பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டென்மார்க்குடன் கிரீன் மின்சக்தி தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொண்டார். அதன் அடிப்படையில்தான் தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க ஒப்பந்தம் செய்யப்படுவதும் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் ரூ.35 ஆயிரம் கோடி முதல் ரூ.70 ஆயிரம் கோடி வரை முதலீடு செய்யப்பட உள்ளது. கடலில் அமைக்கப்படும் காற்றாலைகள் மூலம் 4 ஆயிரம் மெகாவாட்டில் இருந்து 10 ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..
டென்மார்க் நாடு ஏற்கனவே தமிழ்நாட்டில் ரூ.5,500 கோடி அளவுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முன்வந்துள்ள நிலையில் முதற்கட்டமாக கடல் காற்றாலை மின் உற்பத்தியில் முன்னெடுப்புகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. கடல் காற்றாலை மின்உற்பத்தி மூலம் தமிழகம் மின்மிகை மாநிலமாக மாறுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக இருப்பதாக தலைமைச் செயலக அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.
