தந்தை பெரியாரால் பட்டைத் தீட்டப்பட்ட பேரறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி, நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் க.அன்பழகன் உள்ளிட்ட எண்ணற்ற தலைவர்கள், பகுத்தறிவு இயக்கம், அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்த 1949 ஆம் ஆண்டில், அவரவரின் தனித்த திறமையால், மக்களிடம் தனிக்கவனம் பெற்றனர். ஒவ்வொருவரின் பேச்சும், செயலும் தனித்துவம் மிக்கதாக இருந்ததால், அவரவருக்கு என்று தனிக் கூட்டம் உருவானது. ஆனாலும், எல்லோரின் பேச்சும், செயலும் பகுத்தறிவோடு ஒன்றிப் போனதால் மக்களின் மனங்களில் பெரிய எழுச்சி உருவானது. அது அலை, அலையாக திரண்டதால், தி.மு.க. எனும் புதிய அரசியல் கட்சி, நாடு முழுவதும் அபரிதமான செல்வாக்குப் பெற்றிருந்த காங்கிரஸை, தமிழகத்தில் எளிதாக தி.மு.க.வால் வீழ்த்த முடிந்தது.
பேரறிஞர் அண்ணா காலத்தில் தனித்துவம் மிக்க தலைவர்கள், தனிநபர் துதிபாட்டை விரும்பவில்லை. தங்கள் பேச்சும், செயலும் தி.மு.க.வுக்கு வலிமை சேர்க்கும் வகையில் அமைத்துக் கொண்டார்கள். பேரறிஞர் அண்ணா மறைவுக்குப் பிறகு தி.மு.க.வின் தலைவராக கலைஞர். மு.கருணாநிதி பொறுப்பு ஏற்றப் பிறகுதான், குடும்ப அரசியல் தி.மு.க.வில் தலைதூக்கத் தொடங்கியது என்ற விமர்சனம் எழுந்தது.
அந்த விமர்சனங்களையெல்லாம் தவிடு பொடியாக்கும் வகையில், மு.க.ஸ்டாலினும், கனிமொழியும், கடுமையாக உழைத்து, நிதானமாக, படிப்படியாக முன்னேறி கட்சியில் அடுத்தடுத்து உயர்வை எட்டினார்கள். இந்த நிலைக்கு வருவதற்கு இருவருக்குமே, குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் ஆனாது.
கலைஞர் மு.கருணாநிதியின் மகனாக அறியப்பட்ட, அடையாளப்படுத்தப்பட்ட போதும், தன்னுடைய உழைப்பால், களப் பணிகளால், மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, மூத்த தி.மு.க. நிர்வாகிகளின் அனுபவங்களையும், அன்பையும் ஒருசேர பெற்றார். தி.மு.க.வில் இளைஞர் அணி தொடங்கி அதை மாநிலம் முழுவதும் விரிவுப்படுத்தி, வலிமை மிக்க இயக்கமாக மாற்றியபோது, அரசியல் ஆர்வமற்ற இளைஞர்கள் கூட தி.மு.க.வில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டினார்கள். அதன் காரணமாக, தலைவரின் மகன் மு.க.ஸ்டாலின் என்ற பெயர் அடிபட்டு, தளபதி மு.க.ஸ்டாலின் என்று ஒட்டுமொத்த தி.மு.க.வும் அவரைத் தூக்கி கொண்டாட ஆரம்பித்தது.
1998 திருநெல்வேலி தி.மு.க. மாநாட்டில், தனித்த அடையாளத்தோடு தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பேரணி, தி.மு.க.வினரிடம் மட்டுமல்ல, பொதுமக்களின் கவனத்தையும் ஸ்டாலின் பக்கம் திரும்ப வைத்தது. அன்றைய தேதியிலேயே, ஒரு இயக்கத்தை தலைமையேற்று நடத்தக் கூடிய தகுதி, திறமை அவருக்கு கைகூடியிருக்கிறது என்ற பேச்சு எழுந்துவிட்டது. கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கு மேலான கடுமையான உழைப்பை செலுத்திய பிறகுதான், அவரால், தி.மு.க.வின் தலைவராகப் பொறுப்புக்கு வரமுடிந்தது. இதுவரை தி.மு.க.வின் தலைவராக இருந்த பேரறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதியோடு ஒப்பிட்டு மு.க.ஸ்டாலினை மதிப்பீடு செய்தாலும், அவர்களின் திறமைகளுக்கு அப்பாற்பட்டு, மு.க.ஸ்டாலினின் உழைப்பு பேசுபடும் பொருளாக நிற்கிறது.
இதேபோல, கலைஞரின் மற்றொரு வாரிசான கனிமொழியும், மெல்ல, மெல்ல ஒட்டுமொத்த தி.மு.க.வினரின் கவனத்தை ஈர்த்து, பதவிகளைப் பெற்றார். தனது இலக்கிய செயல்பாட்டால், கட்சியைக் கடந்து பொதுதளங்களிலும் ஈர்ப்பை பெற்றார். பகுத்தறி கொள்கைகளிலும், தமிழ் மொழியிலும் அவருக்குள்ள உறுதியான நிலை, கற்றறிந்த சமுதாயத்தினரும் அவரை பாராட்டுகிற நிலை உருவானது. இதையெல்லாம் கடந்து, தி.மு.க.வைக் கடந்து மாற்றுக் கட்சியினரை மதிப்பதும், அவரவர் கருத்தை ஆமோதிப்பதும், விவாதிப்பதும் என பொதுவெளியில் சிநேகிதமான ஒரு மனுஷியாக முதிர்ச்சி பெற்றிருப்பதும், கனிமொழிக்கு அரசியலைக் கடந்து ஒரு பெருங்கூட்டம் இருக்கிறது. இதை எல்லாவற்றையும் கடந்து, அவரது எளிமையும், பேதம் பார்க்காமல் அனைவரிடமும் சமமாக பழகுகிற பாங்கும், இன்றைக்கும் பேசுப்படும் பொருளாக உள்ளது.
மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகிய இவ்விரண்டு குடும்ப வாரிசுகளைத் தவிர்த்து, கலைஞர் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற உறவுகள் யாராக இருந்தாலும் கட்சிக்குள் திணிக்கப்பட்டவர்கள் என்ற விமர்சனத்தை இன்றும் எதிர்கொண்டு இருக்கிறார்கள். அந்த அவப்பெயதைதான் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினும் சுமந்துக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள். கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில், உற்சவருக்கு துணையாக வரும் விக்ரகம் போல வந்த உதயநிதி ஸ்டாலின், குறுகிய காலத்திற்குள்ளாகவே, அதாவது ஓராண்டிற்குள்ளாகவே, தி.மு.க. இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டது, அப்போதே கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டது.
2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு கிட்டதட்டட 2 ஆண்டுகள் முடிவடையும் தருவாயில்கூட, உதயநிதியின் செயல்பாடுகள், தி.மு.க. கட்சிக்குள்ளேயே குறுகிய வட்டத்திற்குள்தான் இருக்கிறது என்று பெருமையாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. சட்டமன்றத் தேர்தலுக்கான ஃபீவர், கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களிலேயே தொடங்கி இன்று வரை அனலாக இருந்து வரும் நேரத்தில், தேர்தல் களத்தில், உதயநிதி ஸ்டாலின் பிரசாரம், பொதுமக்களிடம் ஒரு சதவிகிதம் அளவுக்குக்கூட சென்று சேரவில்லை என்றும், இளைஞரணி நிர்வாகிகளைத் தவிர ஒட்டுமொத்த தி.மு.க.வினரைக்கூட இன்னும் ஈர்க்க முடியவில்லை என்று அங்கலாயக்கிறார்கள் தி.மு.க. முன்னணி நிர்வாகிகள்.
தி.மு.க.வுக்கு எதிராக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ஒருபக்கம் போட்டு தாக்க, புதிதாக கட்சித் தொடங்கிய நடிகர் கமல்ஹாசனும் ஊர் ஊராகச் சென்று தி.மு.க.வுக்கு எதிராக கருத்துகளை முன்வைத்து வரும் நிலையில், இவர்களுக்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் உதயநிதியின் பிரசாரம் அமையவில்லை என்று கவலையோடு பேசுகிறார்கள் தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள். உதயநிதி பேசும் பேச்சை, நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், தனக்கே உரிய பாணியில் கிண்டல் அடிப்பது, பொதுமக்களின் மனங்களில் அழுத்தமாக பதிகிறது.
அரசியல் களத்தில் தனக்கெதிராக எந்தமாதிரியான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன, அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது பிரசாரத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற வியூகம் கூட உதயநிதியிடம் இல்லை என்று அவருக்கு நெருக்கமான நண்பர்களே ஆதங்கப்படுகிறார்கள்.
கருத்தாழமிக்க பிரசாரத்தை முன்வைக்க முடியவில்லை என்று தி.மு.க.விலேயே ஒருசாரார் புலம்ப தொடங்கிவிட்ட நேரத்தில், உதயநிதி உதிர்க்கும் ஒன்றிரண்டு வார்த்தைகளும், சசிகலாவைப் பற்றி விமர்சித்தது, ஆட்சிக்கு வந்தால் அதிகாரிகளை பந்தாடுவோம் என்று மிரட்டும் தோணியை வெளிப்படுத்தியது போன்றவை அவரின் இமேஜை மட்டுமல்ல, தி.மு.க.வின் இமேஜையும் பதம் பார்க்கும் வகையில் அமைந்துவிடுவதாக வருத்தத்தோடு கூறுகிறார்கள் பழுத்த தி.மு.க. நிர்வாகிகள்.
இரண்டு ஆண்டு காலம் முழுமையாக தி.மு.க.வுக்காக அவர் பணியாற்றி இருந்தாலும் கூட, இன்றைய நிலையில், ஸ்டாலினின் மகனாக தான் உதயநிதி அடையாளப்படுத்தப்படுகிறார். அவர் இன்னும் இளைஞரணிச் செயலாளர் என்ற அந்தஸ்தை கட்சியினரிடம் முழுமையாக பெறவில்லை. அவரின் சிந்தனைக்கும், செயலுக்கும் ஏற்ப இன்றைய அரசியல் களம் இல்லை. கடுமையான உழைப்பும், திராவிட கொள்கைகளில், ஆழ்ந்த அறிவும் அவருக்கு கை கூட வேண்டும்.
தி.மு.க.வுக்குள்ளேயே தனக்கென ஆதரவுக் கூட்டத்தை பெருக்கி கொள்ள முடியாத நிலையில், ஸ்டாலின் மகன் என்ற அந்தஸ்தை வைத்துக் கொண்டு, தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்ய முயல்வதை இரண்டாம் கட்ட தலைவர்கள் ரசிக்கவில்லை. அதைவிட, முன்னணித் தலைவர்களின் கோபத்தை வலிந்து பெறுவதைப் போல, அவரது நெருங்கிய நண்பரான மகேஷ் பொய்யாமொழியை, திருச்சி மாவட்டத்தை கடந்து, மாநிலம் முழுவதும் உட்கட்சிக்குள்ளேயே அரசியல் செய்ய அனுமதிப்பது போன்ற நடவடிக்கைகள், தி.மு.க.வில் அவருக்கு எதிர்வினையாகதான் உருவெடுக்கிறது.
இப்படி உதயநிதியின் இன்றைய ஒட்டுமொத்த செயல்பாடுகளும், பள்ளிகளில் நடக்கும் வகுப்புத் தேர்வுகளில் கூட அவர் தேர்ச்சி பெற முடியாத நிலையில்தான் அவர் இருப்பதாக மதிப்பீடு செய்யப்படுகிறது. இந்த நிலை மதிப்பீடு மாறும்போதுதான், பொதுத்தேர்வு என்ற நிலைக்கு உயர்ந்து அதில் தேர்ச்சி பெறுகிற போதுதான், ஸ்டாலின் மகன் என்ற அடையாளம் நீங்கி, தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் என்ற அந்தஸ்திற்கு முழுமையாக அவர் தகுதி பெற்றவராக அறியப்படுவார். அந்த நிலையை நோக்கி அவர் பயணிப்பதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகும்
அதற்கு சாதகமான சூழ்நிலை உருவாக வேண்டும் என்றால் அரியணையில் தி.மு.க. அமர வேண்டும். ஊர் கூடி தேரை இழுத்து வந்துவிடுவார்கள். வலுவாக காலூண்றி நிற்க, தேர்ச் சக்கரமாக இருந்ததாலதான் நிலைக்க முடியும். தேரின் உச்சியில் இருக்கும் கொடியாக இருந்தால், பலமான காற்றால், தூக்கியெறிந்து விடும் ஆபத்தும் இருக்கிறது. அதற்குள் இளம் கலைஞர் என்ற பட்டப்பெயர் எல்லாம் அபத்தமாகதான் பார்க்கப்படுகிறது பொதுமக்கள் பார்வையில்…