கால் வலிக்கு சிறிய அளவில் அறுவைச் சிகிச்சைச் செய்து கொண்ட நடிகர் கமல்ஹாசன், சில நாட்கள் ஓய்வில் இருந்தார். சட்டமன்றத் தேர்தலுக்கான ஃபீவர் அரசியல் கட்சிகளை ஓட விட்டுள்ளதால், அ.தி.மு.க. தி.மு.க. ஆகிய பிரதான கட்சிகளைப் போல, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனும், அரசியல் சதுரங்க விளையாட்டுகளில் திராவிட பாணியையே பின்பற்றுகிறார். அவரின் முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தில், அவர் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் தன்னெழுச்சியாக திரண்டு வந்தது, கமல்ஹாசனின் அரசியல் அபிலாஷைகளுக்கு செம தூபம் பேட்டுவிட்டது.
அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வுக்கு மாற்றாக 3 வது அணி அவரது தலைமையில் அமைவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக அரசியல் ஆலோசர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அரசியல் சதுரங்க விளையாட்டின் அத்தனை நுணுக்கங்களையும் கற்றுத் தேர்ந்து கொண்டு வரும் கமல்ஹாசன், திராவிட பாணி அரசியலையே பின்பற்ற தொடங்கிவிட்டார். அதன் தொடர்ச்சியாக, இரண்டு மிகப் பெரிய திராவிட கட்சிகளைப் போலவே, அவரும் பொதுக்குழு, செயற்குழு போன்ற கட்சிக் குழுக்களை கூட்டி, தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசிக்க ஆரம்பித்துவிட்டார். அந்த வகையில், மக்கள்நீதி மய்யத்தின் பொதுக்குழு கூட்டத்தை வரும் 11-ம் தேதி கூட்டியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
அதுவும், மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா பிரத்யேகமாக நடத்தும் பொதுக்குழு கூட்டங்கள் நடைபெறும் பூந்தமல்லி அருகே வானகரத்தில் உள்ள வானகரம் ஸ்ரீவாரி திருமண மண்டபத்திலேயே தன் கட்சி பொதுக்குழுவையும் காலை 10 மணிக்கு கூட்டியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் தமிழகம் , புதுச்சேரியைச் சேர்ந்த நிர்வாகிகள் 600 பேர் பங்கேற்கின்றனர். தேர்தல் கூட்டணி கட்சி துவங்கியதன் 4 ம் ஆண்டு விழா உள்ளிட்ட விவகாரங்களில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கமல்ஹாசனுக்கு நெருக்கமான ம.நீ.ம. நிர்வாகி தெரிவித்தார்.