சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பாக அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். கலைவாணர் அரங்கத்தின் வளாகத்தில் செய்தியாளர்களுக்கு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேட்டியளித்தனர்.
எடப்பாடி பழனிசாமி : திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து உத்தரவில்தான் முதல் கையெழுத்து போடுவேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால், 100 நாட்கள் ஆகியும் நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை. மேலும், நீட் தேர்வு விவகாரத்தில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருவதால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை திமுக நிறைவேற்றாததால், அதனை கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம்.
மேலும் நமது அம்மா நாளிதழ் அலுவலகத்தின் பூட்டை உடைத்து போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். அன்றைய தினம் அங்கு பணியாற்றிய பத்திரிகையாளர்களை அலுவலத்திற்குள் செல்ல விடாமலும் போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால், 10 ஆம் தேதி வெளியாக வேண்டிய அம்மா நாளிதழ் வெளியாகவில்லை. பத்திரிகை சுதந்திரத்தைப் பற்றி பேசுகிற திமுக ஆட்சியிலேயே பத்திரிகைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ள நிதியமைச்சர், ஊதாரித்தனமாக அதிமுக ஆட்சியில் செலவு செய்யப்பட்டிருப்பதகா கூறியிருக்கிறார். 2006 11 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கடைப்பிடிக்கபட்ட வழிமுறையையே அதிமுக ஆட்சியிலும் தொடரப்பட்டுள்ளது. அவர்களின் காலத்தில் நிதியமைச்சராக இருந்த சண்முகம்தான் அதிமுக ஆட்சியிலும் நிதியமைச்சராக நீடித்தார். அவருக்குப் பிறகு அந்த பொறுப்புக்கு வந்த கிருஷ்ணன் ஐஏஎஸ்.தான் இப்போது திமுக ஆட்சியிலும் நீடிக்கிறார். ஆகவே, வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெற்று அறிக்கையைதான் திமுக வெளியிட்டுள்ளது. 100 நாள் ஆட்சியிலும் எந்தவொரு திட்டத்தையும் திமுக அரசு செயல்படுத்தவில்லை. அதிமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களைதான் இப்போதைய திமுக அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தொடர்ந்து பேசிய ஓ.பி.எஸ்., நிதித்துறை தொடர்பாக தொடர்ந்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டி வருகிறார். அவரின் குற்றச்சாட்டுகளுக்கு பட்ஜெட் மீதான விவாதத்தின் போது பேரவையில் நான் பதிலளிக்கும் போது உரிய முறையில் விளக்கம் அளிப்பேன் என்று கூறினார்.