தாரை இளமதி, சிறப்புச் செய்தியாளர்…
பத்தாண்டுகளுக்குப் பிறகு திமுக மீண்டும் அரியணையில் அமர்ந்திருக்கிறது. அடிமட்ட தொண்டர்கள் முதல் அண்ணா அறிவாலய நிர்வாகிகள் வரை ஒட்டுமொத்த திமுக.வும் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறது. முதல் அமைச்சர் அரியாசனத்தில் அமர்ந்து ஏழைகளின் கண்ணீரை துடைக்கும் அரசாணைகளில் கையெழுத்திடும்போதும், விளிம்பு நிலை மக்களின் விடியலுக்காக அரசு உத்தரவுகளில் கையெழுத்திடும் போதும் உடலும் உள்ளமும் பூரித்தாலும் கூட , ஓய்வாய் அமரும் ஒன்றிரண்டு நிமிடங்களில் உள்ளுக்குள் சோகமாகிவிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று அவரது மனதை படித்துக் கொண்டிருக்கும் அவரது நெருங்கிய விசுவாசிகள் மெல்லிய சோகம் இழையோடும் வார்த்தைகளால் கோர்த்து கோர்த்து பேசுகிறார்கள்.
அரசியல் வாழ்க்கையில் ஆயுளை கரைக்கும் எல்லோருக்குமான உச்சகட்ட ஆசை, உயர்ந்த அரசாங்க பதவியில் அமர வேண்டும் என்பதுதான். அதுவும் 80 ஆண்டுகளுக்கு மேலாக பொது வாழ்க்கையில் தன்னையே உருக்கிக் கொண்டவரும், ஐந்து முறை முதல்வராக ஆட்சிப்புரிந்துவருமான கலைஞர் மு.கருணாநிதியின் புதல்வரான மு.க.ஸ்டாலினுக்கு, கடும் போராட்டத்திற்குப் பிறகுதான் முதல் அமைச்சர் எனும் அரியாசனம் கிடைத்திருக்கிறது. கலைஞர் நினைத்திருந்தால் பத்தாண்டுகளுக்கு முன்பே முதல் அமைச்சர் இருக்கையில் மு.க.ஸ்டாலினை அமர்த்தி அழகுப் பார்த்திருக்க முடியும். அப்படியொரு நிகழ்வு அன்றைக்கு நடந்திருந்தால், இன்றைக்கு மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்திருக்கும் தனித்த புகழ், வரலாற்றில் பதிவாகாமல் போயிருக்கும்.
தன்மானத்தை இழந்து, தரணியெங்கும் அவமானங்களை தேடி தந்த அதிமுக ஆட்சியை அகற்றிவிட்டு, மாவீரனாக இன்றைக்கு தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு காட்சித் தந்துக் கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு, முதல் அமைச்சர் எனும் பதவி முள் கிரீடமாக உறுத்திக் கொண்டிருக்கிறது. அதைவிட மிகவும் சோகத்தை தந்துக் கொண்டிருப்பது, அவரது தந்தையும் தமிழினத் தலைவருமான கலைஞர் இன்றைக்கு உயிரோடு இல்லை என்ற துயரமும்தான்.
முதல் அமைச்சர் நாற்காலியில் தான் அமர்ந்திருப்பதைப் பார்த்து மகிழ்ச்சி கொள்வார் என்பதைவிட ஆட்சி நிர்வாகத்தை, சமதர்ம சமுதாயத்தை படைக்க ஆலோசனைகளை வாரி வழங்கும் தலைவர் இன்றைக்கு இல்லையே என்பதுதான் முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஏக்கமாக இருக்கிறதாம். மெரினா கடற்கரைச் சாலையில் தலைமைச் செயலகத்திற்கு செல்லும் ஒவ்வொரு பொழுதும், கலைஞர் நினைவிடத்தை கடக்கும் போதும் அவர் உள்ளுங்குள் கலங்கிப் போவதாக, அவருடன் பயணிக்கும் வாய்ப்பு பெற்ற மூத்த தலைவர்கள் கூறும்போது மனது துடித்துப் போகிறது.
ஆட்சி, அரசியல், கொண்டாட்டம் எல்லாவற்றையும் கடந்த முதல்வரை, தனி மனிதனாக பார்க்கும் போது, எத்தனை உயரங்களைத் தொட்டாலும் ஆண் மகனுக்கு தாய் மீதான பாசம் குறையாது. அந்தவகையில், தனது தாய் மீது அளவற்ற பாசத்தைக் கொண்டிருக்கும் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, தன்னுடைய தாயாலும் கூட அரசியல் வாழ்க்கையில் உச்சக்கட்ட பதவியில் அமர்ந்திருப்பதை அனுதினமும் அனுபவித்து ஆனந்தப்பட முடியாத நிலையில் இருக்கிறாரே என்ற சோகம், முதல்வர் மனதின் ஒரு ஓரமாக ஓடிக் கொண்டே இருக்கிறதாம்.
தளபதி மனதிற்குள் இருக்கும் சோகம் வெளியுலகிற்கு எப்படி தெரியாதோ, அதுபோலதான், கலைஞரின் மற்றொரு வாரிசான கனிமொழி எம்.பி.க்கும் திமுக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் நிலையிலும் கூட மகிழ்ச்சியான மனநிலை இல்லை என்கிறார்கள் அவரது நலம் விரும்பிகள் என்று கூறிவிட்டு சில விநாடிகள் மௌனமானார் திமுக முன்னணி தலைவர் ஒருவர்.
சிறிதுநேர ஆசுவாசத்திற்குப் பிறகு மீண்டும் பேசினார்.
கனிமொழி, பள்ளி மாணவியாக இருந்த காலத்தில் இருந்தே அவரை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தவர்கள். தனது தந்தை, உலக தமிழர்களின் தலைவராக இருக்கிறார் என்ற போதும் கூட, அவருடன் செல்ல சண்டை போடுவார். வயது ஏற,ஏற உரிமையோடு விவாதம் புரிவது, கருத்துகளை பகிர்ந்து கொள்வது என ஆயிரக்கணக்கான சுவாரஸ்யமான நிகழ்வுகளை பார்த்தும், கேட்டும் மகிழ்ச்சியடைந்திருக்கிறோம். பள்ளியில், கல்லூரியில், அலுவலகத்தில், அரசியலில் படித்த பாடத்தை விட, கலைஞரிடம்தான் அதிகமான பாடத்தை கனிமொழி படித்திருக்கிறார்.
கலைஞருடனான அவரின் சண்டை, விவாதம், கலந்துரையாடல்கள் போன்றவற்றால்தான், இன்றைக்கு அரசியலில் முதிர்ச்சியடைந்தவராக காட்சியளிக்கிறார். இயல்பாகவே, பெண் குழந்தைகளுக்கு தாயை விட தந்தை மீதுதான் அளவுகடந்த பாசம் இருக்கும். அந்தவகையில், கலைஞர் இல்லாத ஒரு வாழ்க்கை கனிமொழி எம்.பி.க்கு துயரம் மிகுந்ததுதான். பத்தாண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சிக்கு வந்திருக்கிறது என்று கொண்டாடும் மனநிலையில் அவர் இல்லை என்பதுதான் அவரோடு நட்பு பாராட்டி வரும் நலம் விரும்பிகள் கூறும் கூற்றாக இருக்கிறது.
கலைஞர் குடும்பத்தின் வாரிசுகள், அண்ணனும், தங்கையுமாக, திமுக ஆட்சியில் அமர்ந்திருக்கும் போதும் இருவரும் மகிழ்ச்சியாக இருக்கவில்லை என்ற தகவல், கலைஞர் குடும்பத்தின் மீது அதீத பக்தி கொண்ட எங்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தந்தாலும் கூட, இருவருக்கும் இடையோன பாசம், புரிதல் ஆகிய நற்பண்கள் அபரிதமாகியிருக்கிறது என்ற தகவல்கள்தான் எங்கள் வருத்தத்தையெல்லாம் துடைத்துக் கொண்டிருக்கிறது.
முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் எல்லாம் கலைஞரின் மகள் என்ற உரிமையில் ஆட்சி அதிகாரத்தில் தன் வழியாக மக்களுக்கு நன்மைகள் கிடைக்கும் எத்தனையோ காரியங்களை செய்து கொடுத்திருக்கிறார் கனிமொழி எம்.பி. ஆனால், இப்போது தனது சகோதரர் முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருந்தாலும் கூட, ஆட்சி அதிகாரத்தில் துளியும் தலையிடக் கூடாது என்ற மன உறுதியோடு விலகி நிற்கிறாராம் கனிமொழி எம்.பி. தனது தலையீடுகளால் சகோதரர் ஆட்சிக்கு எந்த நெருக்கடியும் வந்து விடக் கூடாது. அவரது தனிப்பட்ட உழைப்புக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்திருக்கிறது. ஆட்சியின் தலைமைப்பீடத்தில் நேர்மையான, திறமையான ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து, 100 நாட்களுக்குள்ளாகவே பெரும்பான்மையான மக்களின் நம்பிக்கையை தளபதி அல்லது தலைவர் பெற்றிருக்கிறார்.
செம்மையாக ஆட்சி நடத்தும் சிந்தனையோடு இருக்கும் முதல் அமைச்சருக்கு சிறிய அளவிலான நெருக்கடியைக் கூட கொடுத்துவிடக் கூடாது என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் பாசத்தோடு பகிர்ந்து கொள்கிறாராம் கனிமொழி எம்.பி. தலைவர், தளபதி, சி.எம். என்றுதான் உச்சரிக்கிறாராம் அவர். அரசு தொடர்பாக, அரசியல் தொடர்பாக பேசும் அறிமுகமான நண்பர்களிடம் கூட தப்பி தவறிக் கூட அண்ணன் என்று கூறுவது இல்லையாம்.
கலைஞர் காலத்தில் அவருக்கு தோழர்களாக, நலம் விரும்பிகளாக இருந்த பிரபலங்களிடம் பேசும் போது மட்டும் அண்ணன் என்று உரிமையோடு பேசி வருகிறாராம் கனிமொழி எம்.பி.
முந்தைய திமுக ஆட்சியின் போது உதவியென தன் வீடு தேடி வந்தவர்களுக்கு எல்லாம் தன் மீது அன்பு கொண்டிருந்த அமைச்சர்கள், அரசு அதிகாரிகளிடம் நேரடியாக சொல்லி தீர்வு கண்டவர் அவர். அதுதொடர்பான தகவல்களை அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் தெரிவிப்பத்தை வழக்கமாக கொண்டிருந்தார். அந்தளவுக்கு அன்றைய ஆட்சியில் தனித்த உரிமையோடு பணியாற்றினார். ஆனால், இன்றைக்ககு, திமுக.வில் முன்னணி நிர்வாகிகளாக இருந்தாலும், செல்வாக்குமிக்க தொழில் அதிபர்களாக இருந்தாலும் கூட, அரசு ரீதியிலான உதவிகளை பெறுவதற்காக தன்னை நாடும் போது, ஒருநிமிடம் யோசிக்காமல், அதே சமய மிகுந்த கனிவோடு, முதல் அமைச்சரை சந்தியுங்கள், தலைவரை சந்தியுங்கள் என்று கூறிவிடுகிறாராம் கனிமொழி எம்.பி.
இன்றைய திமுக ஆட்சிக்கும் கனிமொழி எம்.பி.க்குமான உறவு, உரிமை, தாமரை இலை தண்ணீர் போல்தான் இருக்கிறதாம். ஆட்சி அதிகாரத்தில், கட்சி விவகாரங்களில் நேரடியாக தலையிட விருப்பம் இல்லாம் இருக்கும் கனிமொழி, தனது சகோதரர் மீது அளவற்ற பாசம் வைத்திருப்பதாக கூறுகிறார்கள் அவருடன் நெருக்கமாக பழகி வரும் வடமாநில எம்.பி.க்கள். டெல்லிக்கு அவர் வரும் போதெல்லாம் பெரும்பாலான நேரங்களை திமுக கட்சிக்கு புகழை தேடி தருவதிலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வலு சேர்க்கும் நடவடிக்கைகளிலும்தான் அதிகமாக உழைத்துக் கொண்டிருக்கிறார். முதல்வரின் சகோதரி என்ற பந்தா இல்லாமல், இன்னும் சொல்லப் போனால் சீனியர் திமுக எம்.பி.க்களுக்கு அவமரியாதையை ஏற்படுத்தும் எந்த செயல்களிலும் ஈடுபடுவதே இல்லை என்கிறார்கள் டெல்லி அரசியல் தலைவர்கள்.
இப்படி, கூடுக்குள் அடங்கி கொள்ளும் நத்தையைப் போல தன்னை ஒடுக்கி கொண்டும், தன் மீது அளவற்ற பாசத்தை வைத்திருக்கும் கனிமொழியின் மனதை முழுமையாக புரிந்து வைத்திருக்கிறாராம் முதல்வர் மு.க.ஸ்டாலின். இருவருக்கும் இடையே மானசீகமாக நிழலாடும் அன்பு வெளியுலகத்திற்கு தெரியாது. அதனால் கனிமொழி எம்.பி.யை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓரம் கட்டுகிறார் என்ற வதந்தியெல்லாம் பரவிக்கொண்டிருக்கிறது. ஆனால், இருவரும் ஒருவரை ஒருவர், உள்ளார்ந்த அன்போடு புரிந்து வைத்திருக்கிறார்கள். தந்தை இல்லாத சகோதரி என்ற பரிதவிப்பு முதல்வர் மு.க.ஸ்டாலினை வாட்டி வதைப்பதைப் போல, பாலூட்டி வளர்ந்த தாயின் ஆசிர்வாதத்தை உள்ளம் மகிழ பெற முடியவில்லையே என்ற ஏக்கம் தனது சகோதரை நிம்மதியிழக்கச் செய்கிறது என்ற உணர்வும் கனிமொழி எம்.பி.யையும் துடிக்க வைக்கிறதாம்.
கலைஞர் மறைவுக்குப் பிறகு இருவருக்கும் இடையேயான பாசம், அதிகமாகி கொண்டே வருவதால்தான், குடும்ப நிகழ்வுகளிலும், அரசியல் மற்றும் அரசு நிகழ்வுகளில் முக்கியமான தருணங்களில் கனிமொழி எம்.பி. தன்னுடன் இருக்கும் வகையில் நிகழ்வுகளை அமைத்துக் கொள்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ஈரூடலாக இருவரும் இருந்தாலும் ஓர் உயிராக இருப்பதால்தான், முந்தைய திமுக ஆட்சியில் காணப்பட்ட அளவுக்கு அதிகமான குடும்ப உறவுகளின் தலையீட்டை, தற்போதைய ஆட்சியில் முற்றிலுமாக முதல்வர் மு.க.ஸ்டாலினால் தடுத்து நிறுத்த முடிந்திருக்கிறது. கலைஞரின் அரசியல் ஆசைகளை, தமிழினம் மேம்பட வேண்டும் என்ற விருப்பத்தை தளபதி நிறைவேற்றி வைக்க எப்போதுமே துணையாக இருப்பார் கனிமொழி எம்.பி. என்பது, இருவருக்கும் இடையே உள்ள கான்கீரிட் போல உறுதியாகிக் கொண்டிருக்கும் பாசத்தின் மூலம் நம்பிக்கை பிறக்கிறது. இந்த நம்பிக்கைதான், கலைஞர் மறைந்துவிடடார் என்ற சோகத்தையும் கரைத்துக் கொண்டிருக்கிறது என்றார் நா தழுதழுக்க மூத்த திமுக தலைவர் ஒருவர்.