முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசில் அரசு பணியாளர்கள், அலுவலர்களுக்கான இடமாறுதலில், புதிய பாணி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் பணம் கொழிக்கும் துறைகளான சுகாதாரம், பொதுப்பணி, நகராட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இட மாறுதலுக்காக லட்சக்கணக்கில் லஞ்சம் வசூலித்த பிறகே அரசு பணியாளர்களுக்கு இட மாறுதல் வழங்கப்பட்டது. தற்போதைய திமுக அரசில் முந்தைய அதிமுக அரசின் பாணியை பின்பற்றக் கூடாது என்று கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத்துத் துறைகளிலும் பணிமாறுதல்கள் கலந்தாய்வு மூலமே நடைபெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அந்தவகையில், பொதுப்பணி, நகராட்சி, சுகாதாரம் ஆகிய துறைகளில் பணிமாறுதல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், வருவாய், சமூக நலன், போக்குவரத்து, பள்ளிக்கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிமாறுதலுக்கான கலந்தாய்வு எப்போது நடைபெறும் என்ற எதிர்ப்பார்ப்பு, அந்தந்த துறைகளைச் சேர்ந்த அலுவலர்களிடம் ஏற்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக தலைமைச் செயலகத்தில் விசாரணையில் ஈடுபட்டோம். அப்போது, துறை ரீதியான அமைச்சர்கள் மற்றும் துறைச் செயலாளர்களிடம் ஒருமித்த கருத்து இல்லாததால், பல்வேறு துறைகளில் கலந்தாய்வு மூலமான பணிமாறுதலுக்கு முட்டுக்கட்டை விழுந்துள்ளது என்று தகவல் கிடைத்துள்ளது.
சமூக நலன், வருவாய், போக்குவரத்து உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள், கலந்தாய்வு மூலம் பணிமாறுதல் வேண்டாம் என்றும், பணி மாறுதல் வேண்டும் என விண்ணப்பங்களை வழங்கும் பணியாளர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோரின் பின்னணி, துறை ரீதியான செயல்பாடுகளை ஆய்வு செய்த பிறகே பணி மாறுதல் வழங்க வேண்டும் என்று தத்தம் துறைச் செயலாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கி வருகிறார்கள்.
கலந்தாய்வு மூலமான பணி மாறுதலுக்கு தடை போடும் அமைச்சர்கள் தரப்பில் கூறப்படும் காரணங்கள், விவாதத்திற்குரியதாக மாறியிருக்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர்களின் பரிந்துரையின் மூலம் செல்வாக்கு மிக்க ஊர்களில் பணி மாறுதல் பெற்றவர்கள், தற்போது கலந்தாய்வு நடத்தினால், அதே போன்ற செல்வாக்கு மிக்க ஊர்களிலேயே பணி மாறுதல் பெற்றுவிடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் கடந்த பத்தாண்டுகளில் உரிய பணியிடம் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட ஊழியர்கள், கலந்தாய்வு மூலம் ஏற்படும் போட்டிகளில் மீண்டும் பணிச்சுமை அதிகம் உள்ள ஊர்களிலேயே பணி மாறுதல் பெறும் சூழல் ஏற்படும்.
அதனால், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில், ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியவர்களை முதலில் அடையாளம் காண வேண்டும். இரண்டாவதாக, அரசுத் திட்டங்களை செயல்படுத்துவதில் அலட்சியம் காட்டி வருபவர்கள், பொதுமக்களுக்கு உரிய முறையில் அரசின் நலத்திட்டங்கள் சென்றடையாமல் காலதாமதம் செய்தவர்கள், அதிமுக ஆதரவு அதிகாரிகள் என்ற அடிப்படையில் பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு பணி மாறுதலுக்கான பட்டியல் தயாரிக்க வேண்டும்.
கலந்தாய்வு மூலம் பணி மாறுதல் நடத்தினால், அரசுத்துறையில் செல்வாக்கு மிக்க அலுவலர்கள் தங்களுக்குள்ளாக சிண்டிகேட் அமைத்து, அவரவர் வசதியான ஊர்களை தேர்வு செய்து கொண்டு இட மாறுதல் பெற்றுவிடுவார்கள். இதனால், அரசின் நலத்திட்டங்கள் உரிய முறையில் மக்களை சென்றடையாது என்பது ஒருபுறம் என்றால், அவர்களின் தலைமையின் கீழ் பணிபுரியும் பணியாளர்களும் விரக்தி அடைந்துவிடுவார்கள். எனவே, பணி மாறுதல் கோரி விண்ணப்பிப்பவர்களின் பின்னணி குறித்து முழுமையாக விசாரித்து அறிந்து கொண்ட பிறகே அவர்களுக்கு பணிமாறுதல் வழங்க வேண்டும் என்று அமைச்சர்கள் பலர், தங்களின் துறைச் செயலாளர்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார்கள்.
அமைச்சர்கள் மற்றும் துறைச் செயலாளர்களிடம் காணப்படும் கருத்து வேறுபாடுகளால், பணி மாறுதல் கோரிக்கையோடு பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னை தலைமைச் செயலகத்திற்கு வருவோரின் எண்ணிக்கை குறைந்து இருக்கிறது. ஆளும்கட்சியான திமுக.வில் நிர்வாகியாக உள்ளவர்கள் கூட, தங்கள் உறவினர்களாக உள்ள அரசு அதிகாரிகள் அல்லது கட்சி ஆதரவு பணியாளர்களுக்கு பணி மாறுதல் பெறுவதற்காக தலைமைச் செயலகத்திற்கு வந்து அந்தந்த துறை அமைச்சர்களை சந்திப்பதிலும் ஆர்வம் காட்டுவதில்லை என்பதும் தெரிய வருகிறது.
பத்து ஆண்டு காலம் ஆட்சியில் இல்லாததால், எந்தவிதத்திலும் வருவாய் இல்லாமல் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதாகவும், தற்போதைய திமுக ஆட்சியில் பணி மாறுதல், பணி நியமனம் மூலம் கொஞ்சமாவது பணம் பார்க்கலாம் என்ற ஆசைக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் என்ற புலம்பல் சத்தமும், வெளியூர்களில் இருந்து சென்னை வந்துவிட்டு ஏமாற்றத்துடன் ஊர் திரும்பும் திமுக நிர்வாகிகளிடம் இருந்து அதிகமாக எழுந்துகொண்டு இருக்கிறது.