Sat. Nov 23rd, 2024

கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு கூடுதல் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் பிரத்யேக அறையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், ஆஸ்பத்திரி டீன் தேரணிராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அனைவரும் உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் இருக்கிற அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்ட ஆஸ்பத்திரிகளிலும், ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் திறந்து வைக்கப்பட்டதுபோல, தாய்ப்பால் ஊட்டும் அறை விரைவில் திறந்து வைக்கப்பட இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை 17 மருத்துவ கல்லூரி மருத்துவமனை, 7 மாவட்ட அரசு ஆஸ்பத்திரி உள்பட 24 இடங்களில் தாய்ப்பால் வங்கிகள் செயல்பட்டு கொண்டிருக்கிறது.

மேலும், இன்னும் 7 மருத்துவ கல்லூரி மருத்துவமனை, 5 மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் தாய்ப்பால் வங்கி திறந்து வைக்கப்பட இருக்கிறது. மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் ஒவ்வொரு தாய்ப்பால் வங்கியும் ரூ.12 லட்சம் செலவில் இந்த ஆண்டு தொடங்கப்பட இருக்கிறது.

தமிழகத்தில் கொரோனா 3-வது அலையை எதிர் கொள்ளும் வகையில் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் குழந்தைகளுக்கான சிறப்பு வார்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து விமானங்கள், ரெயில்கள் மூலம் தமிழகம் வந்தாலும், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டு, அந்த பணிகளும் ஒரு சில இடங்களில் நடந்து கொண்டிருக்கிறது.

அதன்படி, 3-வது அலையை தடுப்பதற்கும், வந்தால் அதனை எதிர்கொள்வதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்தவரை சென்னையில் 82 சதவீதமும், விருதுநகரில் 84 சதவீதமும் உள்ளது. எங்கெல்லாம், குறைவான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதோ அந்த மாவட்டங்களுக்கு கூடுதலாக தடுப்பூசி அனுப்பப்படும்.

ஈரோட்டில் 37 சதவீதமும், கோவையில் 43 சதவீதமும், திருப்பூரில் 46 சதவீதம் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. எனவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள இந்த மாவட்டங்களுக்கு கூடுதல் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு வருகின்றன. தடுப்பூசியும் தட்டுப்பாடு இல்லாமல் தமிழகத்துக்கு வந்து கொண்டிருக்கிறது. இதுவரை 2 கோடியே 25 லட்சத்து 33 ஆயிரத்து 760 தடுப்பூசிகள் வந்துள்ளன. அதில் 2 கோடியே 18 லட்சத்து 31 ஆயிரத்து 183 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளன.

கையிருப்பில் 12 லட்சத்து 45 ஆயிரத்து 957 தடுப்பூசிகள் உள்ளன. தனியார் ஆஸ்பத்திரிகளை பொறுத்தவரை 19 லட்சத்து 47 ஆயிரத்து 380 தடுப்பூசிகள் வந்துள்ளன. அதில் 15 லட்சத்து 80 ஆயிரத்து 885 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அந்தவகையில் இதுவரை மொத்தம் 2 கோடியே 34 லட்சத்து 12 ஆயிரத்து 68 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்த மாதம் மத்திய அரசின் தொகுப்பில் இருந்து 79 லட்சம் தடுப்பூசிகள் வர இருக்கின்றன.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

உலக தாய்ப்பால் வாரத்தையொட்டி இன்று ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் “தாய்ப்பாலூட்டும் அறை”திறக்கப்பட்டதுடன் தொடர்ந்து விழிப்புணர்வு நாடகம் மற்றும் உறுதிமொழியேற்கும் நிகழ்வும் சிறப்பாக அரங்கேறியது. …