திமுக தலைவருக்கு அடுத்து மிகப்பெரிய மரியாதைக் கொண்ட பதவி, அக்கட்சியில் பொதுச் செயலாளர் பதவிதான். திமுக.வைத் துவக்கிய பேரறிஞர் அண்ணா, தலைவர் பதவிக்கு தந்தை பெரியார் மட்டுமே தகுதியானவர் என்று சபதம் செய்து, தலைவர் பதவியில் யாரையும் நியமிக்காமல், அக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் அமர்ந்து, தன் இறுதி மூச்சு வரை அரசியலையும் ஆட்சியையும் திறம்பட நடத்தி வந்தார். தன்னலமற்ற அவரின் பொது வாழ்வுக்கு, அவர் மறைந்து அரைநூற்றாண்டை எட்டியுள்ள நிலையிலும், அரசியலுக்கு அப்பாற்றப்பட்ட அரசியல் கள ஆய்வாளர்கள், சமூக நல ஆர்வலர்கள் இன்றைக்கும் புகழ்மாலை சூட்டி வருகின்றனர்.
பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, தம்பி வா தலைமை ஏற்க வா என்று அண்ணாவால் அழைக்கப்பட்ட நாவலர் நெடுஞ்செழியன், பொதுச் செயலாளர் பதவியில் அமர்ந்து அரசியல் பணியாற்றினார். குறுகிய காலமே (1969 -1975 )அந்தப் பதவியில் நாவலர் நீடித்திருந்தாலும், பொதுச் செயலாளர் என்ற பதவியின் மாண்பு குறையாமல் பார்த்துக் கொண்டார். திராவிட சித்தாந்தத்தை தமிழகம் முழுவதும் பரப்பி திமுக.வை நோக்கி இளம்தலைமுறையினர் அலைகடலென திரள இரவு பகல் பாராமல் கடுமையான பணியாற்றினார்.
திமுக தலைமையைத் தவிர வேறு எந்த மாவட்டத்திலும் அவர் உட்கட்சி அரசியலில் ஈடுபட்டதில்லை. திமுக.வில் இருந்து நாவலர் வெளியேறியபோது, அப்போதைய திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் பேரன்பிற்கு பாத்திரமான பேராசிரியர் க.அன்பழகன், திமுக.வின் பொதுச் செயலாளர் பதவியில் அமர்த்தப்பட்டார். 1975 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு மார்ச் 7 ஆம் தேதி அவர் மறையும் நாள் வரை 42 ஆண்டுகள் அக்கட்சியின் பொதுச் செயலாளராக தொடர்ந்து நீடித்து வந்தார்.
அப்போதைய திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை லட்சக்கணக்கானோர், பேராசிரியர் க.அன்பழகன் மீது மாசற்ற பாசம் காட்டினர். அதற்கு காரணம் பொதுச் செயலாளர் என்ற பதவி மட்டும் காரணமல்ல, பொது வாழ்க்கையில் அப்பழுக்கற்றவராக இருந்தார். திராவிட கொள்கையில், திமுக தலைவர் மீதான மரியாதையில் துளியளவும் சோரம் போகாதவராகவும் கொள்கைப் பிடிப்போடும், பேரறிஞர் அண்ணாவின் உண்மைத்தம்பியாகவே பேராசிரியர் அன்பழகன் கடைசி நிமிடம் வரை வாழ்ந்து வந்தார்.
ஆளும்கட்சியாக இருந்த போதும் சரி, எதிர்க்கட்சியாக இருந்த போதும் சரி, கொள்கையில் இருந்து கடுகளவும் மாறாமல் லட்சியப் பிடிப்போடு பேராசிரியர் வாழ்ந்து வந்ததால்தான், அப்போதைய திமுக தலைவர் மு.கருணாநிதி தனது இல்லத்தில் நடைபெற்ற அனைத்து திருமணங்களையும் பேராசிரியர் க.அன்பழகனார் தலைமையில் நடத்தி, அவருக்கு மாபெரும் மரியாதையை செலுத்தினார்.
அரசியலில் கலைஞரை விட சீனியராக இருந்த போதும், தான் தலைவராக ஏற்றுக்கொண்ட கலைஞர் மு.கருணாநிதியின் புகழுக்கு, திமுக. கழகத்திற்கு இழுக்கு ஏற்படும் வகையில் எந்த காரியத்திலும், குறிப்பாக மாவட்ட அளவிலான உட்கட்சி அரசியலில் ஒருபோதும் அவர் ஈடுபட்டதில்லை. குறிப்பாக, திமுக உட்கட்சி அரசியலில் தலைவர் கலைஞரோடு மட்டுமே அவர் விவாதித்தாரே தவிர, மாநில, மாவட்ட அளவிலான ஒரு நிர்வாகியிடம் கூட பேராசிரியர் தனிப்பட்ட முறையில் விவாதம் புரிந்திருக்கிறார் என்று அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கூட குற்றம் சொல்ல முடியாத அளவிற்கு வாழ்ந்து மறைந்தவர் பேராசிரியர் க.அன்பழகன்.
மாவட்ட அளவில் தீரர்களாக விளங்கிய மறைந்த முன்னணி நிர்வாகிகள் கோ.சி.மணி, மதுராந்தகம் ஆறுமுகம் உள்ளிட்டவர்கள் கூட கலைஞரின் உத்தரவுகளை செல்லமாக மீறியிருக்கிறார்கள். ஆனால், பேராசிரியரின் பேச்சை மீறி ஒரு போதும் செயல்பட்டதில்லை என்பதுதான் கடந்த கால திமுக வரலாறு.
அப்படி 42 ஆண்டுகளுக்கு மேலாக பொதுச் செயலாளர் பதவிக்குரிய கண்ணியத்தை பேராசிரியர் காப்பாற்றிய நிலையில், அவரின் மறைவுக்குப் பிறகு கெஞ்சி, கூத்தாடி திமுக பொதுச் செயலாளர் பதவிக்கு வந்த தற்போதைய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஓராண்டிற்குள்ளாகவே, அந்த பதவிக்கு இழுக்கு சேர்க்கும் வகையில் நடந்து கொண்டு வருவதாக அவரது சொந்த மாவட்டத்திலேயே புலம்பல் சத்தம் அதிகமாக கேட்க தொடங்கியுள்ளதுதான், மிகப்பெரிய அவலம்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த 25,26 மற்றும் 27 ஆகிய மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் செய்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அரசு மற்றும் அரசியல் நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.
அப்போது கட்சி நிர்வாகிகளிடம் பேசும் போது, காட்பாடி தொகுதியில் தான் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது, உட்கட்சி திமுக நிர்வாகிகளின் உள்ளடி வேலை தான் என்று சீறியிருக்கிறார். அப்போதும் அவரது கோபம் அடங்கவில்லை, காட்பாடி மேற்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன், நாம் ஆளும்கட்சி. நாம் நினைத்ததை நடத்திக் காட்டலாம். முதலமைச்சருக்கு அடுத்தது நான்தான். என்னவேண்டுமானாலும் செய்ய முடியும். காட்பாடி தொகுதியில் குறைந்த ஓட்டு வாங்கியதற்கு மக்கள் காரணமல்ல. கட்சிக்காரர்கள்தான் காரணம். காட்பாடி வரலாற்றில் முதல்முறையாக திமுக.வினர் கட்சிக்கு துரோகம் செய்துவிட்டனர். எதிர்க்கட்சிக்காரரிடம் பணம் வாங்கிக் கொண்டு வேலை செய்யவில்லை.
ஸ்டாலின் உத்தரவுபடி சிஐடி ரிப்போர்ட் எடுத்தோம். யார், யார் எதிர்க்கட்சி வேட்பாளர்களிடம் பேசினார்கள் என்பது எல்லாம் எனக்கு தெரியும். கட்சிக்காரர்கள் ஒழுங்காக வேலை செய்திருந்தால் 25 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றிப் பெற்றிருப்பேன். சட்டமன்றத் தேர்தலில் கட்சிக்கு துரோகம் செய்தவர்களை மன்னித்துவிட்டேன். அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலில் நான் சர்வதிகாரியாக இருப்பேன் என சீறியிருக்கிறார் அமைச்சர் துரைமுருகன்.
கட்சி நிர்வாகிகளிடையே அமைச்சர் துரைமுருகன் ஆவேசத்துடன் பேசிய விவகாரம், வேலூர், திருப்பத்தூர் மாவட்ட முன்னணி நிர்வாகிகளை கொந்தளிக்க வைத்துவிட்டது.
திமுக பொதுச் செயலாளர் பதவிக்கு பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்ளாமல், இரண்டு மாவட்டங்களுக்கு மட்டுமே செயலாளர் என்ற வகையில் அமைச்சர் துரைமுருகன் பேசியிருக்கிறார். அவர் மாநில தலைவருக்குரிய தகுதிக்கு தன்னை உயர்த்திக் கொள்ளாமல் இன்னும் உள்ளூர் அரசியலிலேயே ஆதிக்கம் காட்டிக் கொண்டு பொங்குகிறார்.
அமைச்சர் துரைமுருகன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வேலூர், திருப்பத்தூர் ஆகிய 2 மாவட்டங்களில் உள்ள திமுக நிர்வாகிகளின் வாட்ஸ் அப் குரூப்புகளில் கட்சி நிர்வாகிகள் கடும் கோபமாக பதிவிட்டு வரும் வாட்ஸ் அப் தகவல் ஒன்று நல்லரசுக்கு கிடைத்துள்ளது. அதில் இடம் பெற்றுள்ள வார்த்தைகள் ஒவ்வொன்றும் மிளகாய் தூளை விட காரமானவையாக இருக்கிறது.
உடன்பிறப்பு பதிவேற்றியுள்ள வாட்ஸ் அப் தகவல் இதோ…..
திமுகவினரை கட்சிக்கு துரோகம் செய்து விட்டார்கள் என்று புலம்பாதீர்கள் அண்ணே நீங்கள் செய்தது இப்பொழுது உங்களுக்கே திருப்பி அடிக்கிறது …………..
உங்களுக்கு துரோகம் செய்தால் அது திமுகவுக்கு துரோகம் செய்ததாக பொருட்டல்ல…………..
திமுக தொண்டனை உடன் பிறப்பை குறை சொல்ல உங்களுக்கும் அதிலும் உங்கள் அன்பு மகன் அதாவது நமது கழகத்தின் கரையான் புற்றுக்கு யோக்கியதையும் இல்லை அருகதையும் இல்லை திமுகவின் ஒரு ஒரு தொண்டனும் புடம் போட்ட தங்கம் மாணிக்கம் வைரம் தன்னையே இந்த இயக்கத்திற்கு தியாகம் செய்துகொண்ட தியாக மறவர்கள்….
அண்ணே நமது உடன்பிறப்புகள் யாரும் உங்களுக்கு துரோகம் செய்யவில்லை சதி செய்யவில்லை தொகுதி மக்கள் நீங்கள் வேண்டாம் என்று முடிவெடுத்து உங்களை புறக்கணித்து விட்டார்கள் உங்களிடம் குறை வைத்துக் கொண்டு மற்றவர்களை கை நீட்டி குறை சொல்லாதீர்கள் உங்கள் வயதுக்கும் உங்கள் பதவிக்கும் உங்களுக்கு இருக்கிற உலகளாவிய வசதிக்கும் அது அழகல்ல.
இப்படி அந்த வாட்ஸ் அப் செய்தி முடிகிறது…
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தன்னைத் தவிர வேறு யாரும் வளர்ந்து விடக் கூடாது என்ற எண்ணத்தில் மூத்த தலைவர் துரைமுருகன் கோஷ்டி அரசியலில் ஈடுபடுகிறார் என்ற காரணத்திற்காகதான், வேலூர் மாவட்டத்தில் இருந்து ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டபோது, துரைமுருகனோடு சதாசர்வகாலமும் மல்லுகட்டிக் கொண்டிருந்த தற்போதைய அமைச்சர் காந்தியை, ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளராகவும், திருப்பத்தூர் மாவட்ட செயலாளராக தேவராஜையும் நியமித்த திமுக தலைமை, வேலூர் மாவட்டத்திற்கு நந்தகுமார் எம்.எல்.ஏ.வை செயலாளராகவும் நியமித்தது.
ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் காந்தி, அமைச்சர் ஆனவுடன் தனது மாவட்டத்தில் எந்த வகையிலும் தலையிடக் கூடாது என்று அமைச்சர் துரைமுருகனுக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டார்.
இதனால, வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய இரண்டு மாவட்டங்கள் தனது கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும். தனது மகனும் எம்.பி.யுமான கதிர் ஆனந்த்திற்கு தனக்கு கிடைத்த அளவுக்கு அதே செல்வாக்கு திமுக நிர்வாகிகளிடம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே உள்ளூர் அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.
நந்தகுமார், தேவராஜ் ஆகிய இரண்டு மாவட்டச் செயலாளர்களுக்கு தனித்த அதிகாரம், செல்வாக்கு இல்லை. இந்த இரண்டு மாவட்டங்களில் தான் சொல்வதுதான் வேதவாக்கு. தன்னை மீறி நந்தகுமாருக்கோ, தேவராஜுக்கோ அடிபணிந்தால், அவர்களின் அரசியல் வாழ்க்கையை, வளர்ச்சியை சூன்யமாக்கிவிடுவேன் என்று மறைமுகமாக மிரட்டும் செயலாகவே அவரது அண்மைக்கால பேச்சுகள் இருக்கின்றன என்று புலம்புகின்றனர்.
திமுக பொதுச் செயலாளராகவும் அமைச்சராகவும் ஆகிவிட்டார் துரைமுருகன். அவரது மகன் கதிர் ஆனந்த் எம்.பி.யாகிவிட்டார். அவரது மனைவி, வேலூர் மாவட்டத்தில் அரசு ஒப்பந்தங்களில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். இந்த மூன்று பேரை உள்ளடக்கிய குடும்ப அரசியலால், வேலூர், திருப்பத்தூரில் அனைத்து திமுக நிர்வாகிகளும் கதிகலங்கிப் போயிருக்கின்றனர்.
திமுக பொதுச் செயலாளர் பதவியை வழங்கி தனக்கு பக்கத்தில் தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் அமர்த்திக் கொண்ட பிறகும் கூட, உள்ளூர் அரசியலில் மூக்கை நுழைத்து அரசியல் ஆதாயம் பார்க்கும் துரைமுருகனால், திமுக பொதுச் செயலாளர் பதவிக்கே இழுக்கு, அவமானம் ஏற்பட்டுவிட்டது என்கிறார்கள் ஒட்டுமொத்த வேலூர் மாவட்ட திமுக முன்னணி நிர்வாகிகள்.