Fri. Nov 22nd, 2024

 சேலத்திற்கு ஆய்வு மேற்கொள்ளும் திமுக அமைச்சர்கள் சர்ச்சையை உருவாக்காமல் திரும்புவதில்லை என்பதற்கு கைத்தறி அமைச்சர் ராணிப்பேட்டை ஆர். காந்தியும் விதிவிலக்கல்ல என்றளவுக்கு அமைந்துவிட்டது, அவரது ஆய்வுப் பயணம்..

கைத்தறி துறை அமைச்சர் காந்தி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தருமபுரியில் துறை ரீதியிலான ஆய்வுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அதற்கடுத்து நேற்று சேலத்தில் ஆய்வு செய்வது என்பது அமைச்சரின் நிகழ்ச்சி நிரலாக அமைந்திருக்கிறது. சேலம் ஆய்வு குறித்து, சேலம் மத்திய மாவட்ட செயலாளரும், வழக்கறிஞருமான ஆ.ராஜேந்திரன் எம்.எல்.ஏ.விடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரும், அமைச்சரை வரவேற்பதற்கும், அவருக்கு தேவையான உணவு உள்ளிட்ட வசதிகளுக்கும் ஏற்பாடு செய்துவிட்டு, சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பயணியர் மாளிகையில் வரவேற்பதற்காக காத்திருக்கிறார்.

(இதற்கு முன்பு சேலத்தில் ஆய்வு செய்ய வந்த அமைச்சர்கள் எல்லாம், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நீங்கலாக நட்சத்திர ஹோட்டலில் தங்குவதைதான் அதிமாக விரும்பினார்கள் என நல்லரசுவில் செய்தி வெளியிட்டிருந்தோம்)

பயணியர் மாளிகைக்குள் அமைச்சரின் கார் நுழைந்தவுடன் கார் அருகே சென்ற ஆ.ராஜேந்திரன் எம்.எல்.ஏ.வுக்கு கடும் அதிர்ச்சி. அமைச்சர் காந்தி இறங்கியவுடன், அவர் பின்னாலேயே பாரப்பட்டி சுரேஷ் காரில் இருந்து இறங்கினார். அவரைப் பார்த்தவுடன் ஆ.ராஜேந்திரனின் முகம் கறுத்துவிட்டது.

பாரப்பட்டி சுரேஷ் யார்? நல்லரசுவில் ஏற்கெனவே அவரைப் பற்றி நிறைய முறை செய்தி வெளியிட்டிருக்கிறோம். மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் அரசியல் சாம்ராஜ்யமே, அவர் வாழ்ந்த காலத்திலேயே சரிந்து விழுந்ததற்கு முதன்மையான காரணம் பாரப்பட்டி சுரேஷ்தான். அதைவிட கொடுமையாக, வீரபாண்டி ஆறுமுகம் ரவுடிகளை அதிகமாக வளர்த்துவிடுகிறார் என்ற அவப்பெயரை சுமக்கவும் பாரப்பட்டி சுரேஷின் அரசியல் பிரவேசமும், 6 பேர் கொலைச் சம்பவமும் முக்கிய காரணமாகும்.

இப்படிபட்ட பின்னணி கொண்ட பாரப்பட்டி சுரேஷை அழைத்துக் கொண்டு  அமைச்சர் காந்தி, பயணியர் மாளிகைக்கு வந்த போதும், தனது அதிருப்தியை வெளிப்படுத்திக் கொள்ளாமல், அமைச்சரை வரவேற்று, உபசரித்தார் ஆ.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. மறுநாள் (நேற்று) சேலத்தில் மேற்கொள்ளவுள்ள ஆய்வு குறித்து அமைச்சருடன் கலந்துரையாடிய ஆ.ராஜேந்திரன், காலை உணவு தயார் செய்துவிடுகிறேன். அதை முடித்தவுடன் ஆய்வுப் பணியை தொடங்கிவிடலாம் என்ற அமைச்சரிடம் கூறிவிட்டு தனது வீட்டிற்கு புறப்பட்டிருக்கிறார் ஆ.ராஜேந்திரன் எம்.எல்.ஏ.

சேலம் மாவட்டத்தில் 3 திமுக பொறுப்பாளர்கள் இருந்தாலும் கூட, ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள மாநகரப் பகுதிக்கு திமுக செயலாளராக இருப்பவர் ஆ.ராஜேந்திரன் எம்.எல்.ஏ.தான். அதனால், எந்த அமைச்சர்கள் வந்தாலும் மரபுப்படி ஆ.ராஜேந்திரன்தான் முதலில் வரவேற்க வேண்டும். அவர்களுக்கான உபசரிப்புகளையும் அவர் மேற்கொள்வதுதான் வழக்கம்.

அந்தவகையில், நேற்று காலை சிற்றுண்டியை பயணியர் மாளிகைக்கு தனது உதவியாளர் மூலம் அனுப்பி வைத்திருக்கிறார் ஆ.ராஜேந்திரன் எம்.எல்.ஏ.. ஆனால், பயணியர் மாளிகையில் அமைச்சர் இல்லை என்று உதவியாளர் சொன்ன தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார் ஆ.ராஜேந்திரன். அவசர, அவசரமாக பயணியர் மாளிகைக்குப் புறப்பட்டு வந்த அவர், அங்குள்ள அலுவலர்களை விசாரித்த போது, காலை நேரத்திலேயே பாரப்பட்டி சுரேஷ் வந்து, தன்னுடன் அமைச்சர் காந்தியை அழைத்துச் சென்றுவிட்டதாக தகவல் கூறியிருக்கிறார்.

தன்னிடம் எந்த தகவலையும் தெரிவிக்காமல் அமைச்சர் புறப்பட்டு சென்று போனதால் நொந்து போய்விட்டார் ஆ.ராஜேந்திரன். அதற்கும் மேலாக, கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் உள்ளிட்ட துறை தொடர்பான ஆய்வுக்கு செல்லும் போது தன்னை அமைச்சர் அழைத்துச் செல்வாரா என்று சந்தேகத்துடனேயே அந்த நிமிடங்களை அவர் கடத்திக் கொண்டிருந்ததாக கூறுகிறார்கள் அவரின் சிஷ்யர்கள்.

பயணியர் மாளிகையில் ஆ.ராஜேந்திரன் புலம்பிக் கொண்டிருந்த அதே நேரத்தில், சேலம் மாநகரைவிட்டு புறநகர் பகுதியில் உள்ள மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் இல்லத்தில், சிற்றுண்டியை அமைச்சர் காந்தி ருசித்துக் கொண்டிருந்திருக்கிறார். அவருடன் வீரபாண்டி ஆ.ராஜா, பாரப்பட்டி சுரேஷ் ஆகியோரும் ஐந்தாறு ஆண்டுகளுக்கு முந்தைய அரசியலை பேசியவாறே சிற்றுண்டியை உட்கொண்டிருக்கிறார்கள்.

அதன் பிறகு, அதே பகுதியில் உள்ள வீரபாண்டி ஆறுமுகத்தின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அமைச்சர் காந்தி, தனது ஆய்வுப் பயணத்தை சேலத்தில் தொடங்கியுள்ளார். அவருடன் ஆ.ராஜேந்திரன் எம்.எல்.ஏ.வும் கலந்துகொண்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் எந்தெந்த இடங்களில் எல்லாம் அமைச்சர் காந்தி ஆய்வு மேற்கொண்டாரோ அத்தனை இடத்திலும் அவரோடு பிண்ணி பிணைந்தவாறே பாரப்பட்டி சுரேஷும் ஒட்டிக் கொண்டு நின்றிருக்கிறார். கைத்தறி துறை தொடர்பாக அரசு அதிகாரிகளிடம் கேள்விகளை அமைச்சர் காந்தி கேட்டு பதிலை பெற்றதைப் போலவே, சுரேஷும் அரசு அதிகாரிகளிடம் கேள்விகளால் துளைத்திருக்கிறார்.

அமைச்சருக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்த அரசு அதிகாரிகள், சுரேஷின் ஒன்றிரண்டு கேள்விகளுக்கு மட்டுமே பதில் சொல்லிவிட்டு, அவரை புறக்கணித்திருக்கிறார்கள். அமைச்சர் காந்தியுடன் ஒட்டிக்கொண்டு பாரப்பட்டி சுரேஷ் செய்த அலப்பறைகளால் மனம் வெறுத்துப் போன ஆ.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., அமைச்சரின் ஆய்வை புறக்கணிக்க முடியாமல் கடமைக்காக மட்டுமே அமைச்சரின் ஆய்வில் கலந்து கொண்டார் என்கிறார்கள் அவரது நலம் விரும்பிகள்.

அதைவிட கொடுமையாக, சேலம் மாவட்டத்தின் ஒரு திமுக எம்.எல்.ஏ.வாகவும், சேலம் மத்திய மாவட்டச் செயலாளருமான ஆ.ராஜேந்திரனுக்கு அவமானப்படுத்தும் வகையிலும் ஒரு நிகழ்வு நடைபெற்றது. திட்டம் போட்டு நடத்தப்பட்டதா, அல்லது எதோச்சையாக நடைபெற்றதா என்று தெரியவில்லை எப்படியிருந்தாலும், ஆ.ராஜேந்திரனுக்கு நேரிட்ட அவமானம், ஒட்டுமொத்த சேலம் மாவட்ட திமுக.வுக்கு ஏற்பட்ட அவமானமாகதான் பார்க்கிறோம்.

அப்படியென்ன அவமானம் என்றா கேட்கிறீர்கள். அமைச்சர் காந்தி ஆய்வுப் பணியை முடித்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ஆ.ராஜேந்திரன் எம்.எல்.ஏ.க்கு இருக்கை ஒதுக்கப்படவில்லை. பேட்டி முடியும் வரை அமைச்சர் ராணிப்பேட்டை ஆர்.காந்தியின் பின்பக்கம் நின்றுக் கொண்டே இருந்தார் ஆ.ராஜேந்திரன். அவர் பக்கத்தில் யார் நின்றது தெரியுமா? சேலம் மாவட்ட திமுக.வுக்கு காலம் காலமாக அவப்பெயரை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பாரப்பட்டி சுரேஷ். அவரும், திமுக எம்.எல்.ஏ.வும் மாவட்டச் செயலாளருமான ஆ.ராஜேந்திரனுக்கு ஒரே மாதிரியான மரியாதை. எந்த அவலத்தை எங்கே போய் சொல்வது என்று கொதிக்கிறார்கள் சேலம் மாநகர திமுக நிர்வாகிகள்…

இதற்கு முன்பு சேலம் மாவட்டத்திற்கு ஆய்வுக்காக அமைச்சர்கள் கே.என்.நேரு, கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், ஆவடி மூர்த்தி, எ.வ.வேலு உள்ளிட்ட பலர் வந்தபோது, அரசியல் நாகரிகத்தோடு, மரபோடும் சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் மற்றும் திமுக எம்.எல்.ஏ.,என்ற பொறுப்பில் ஆ.ராஜேந்திரன், அமைச்சர்களை வரவேற்பு, மரியாதை செய்து வழியனுப்பி வைத்திருக்கிறார்கள். இத்தனை அமைச்சர்கள் வந்த போது தலையைக் காட்டாத பாரப்பட்டி சுரேஷ், கைத்தறி துறை அமைச்சர் காந்தியுடன் ஒட்டிக் கொண்டு, அரசு அலுவலகங்களிலும் அலப்பறை செய்ததை பார்த்து அரசு அதிகாரிகள் மட்டுமல்ல, திமுக நிர்வாகிளும் பொதுமக்களும் முகம் சுளித்தனர்.

மறைந்த வீரபாண்டி ஆறுமுகம் காலத்தில் அடாவடி அரசியலில் ஈடுபட்டு திமுக.வுக்கு அவப்பெயரை தேடித் தந்த பாரப்பட்டி சுரேஷ், திமுக தலைமையின் கண்டிப்பால் கடந்த ஆறு, ஏழு ஆண்டுகள் அடக்கி வாசித்தார். ஆனால், இப்போது மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்துவிட்டதால், தனது அலப்பறைகளை தொடங்கிவிட்டார். அவரை கண்டித்து கட்டுப்பாட்டிற்குள் வைக்கவில்லை என்றால், உள்ளாட்சித் தேர்தலில் சேலத்தில் திமுக.வுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என்று கவலை தெரிவிக்கிறார்கள் சேலம் மாநகர திமுக முன்னணி நிர்வாகிகள்.  

அமைச்சர் பதவியை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்து போன ஆ.ராஜேந்திரன் எம்.எல்.ஏ.,வுக்கும் வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்ப வாரிசுகளுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம். இப்படிபட்ட நிலையில், அமைச்சர்களுடனான முந்தைய நட்பை பயன்படுத்தி மீண்டும் அவர்கள் சேலம் மாநகர அரசியலில் தலையெடுக்க துடிப்பதை எப்படி தடுப்பது என்று தெரியாமல் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார், ஆ.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. என்று நொந்து போய் பேசுகிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

இவ்வளவு அவமானங்களையும் மனவேதனைகளையும் தாங்கிக் கொண்டு சேலத்தில் இருந்து சேலம் மாநகர் மாவட்ட அமமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான se வெங்கடாஜலம் உள்பட நூற்றுக்கணக்கான மாற்றுக் கட்சி நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து வந்து திமுக தலைவரும் முதல்வருமான மு. க. ஸ்டாலின் முன்னிலையில் சேர்ந்துள்ளார் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் ஆ.ராஜேந்திரன் எம்.எல்.ஏ..இதுதான் நல்ல சந்தர்ப்பம் என நினைத்து நேற்றைய தினம் சேலத்தில் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் பற்றி ஒற்றை வார்த்தை கூட புகாராக வாசிக்காமல் மிகுந்த கண்ணியம் காத்தவர் என்று அவரது புகழ் பாடுகிறார்கள் ஆ. ராஜேந்திரன் எம். எல். ஏ. வின் ஆதரவாளர்கள்…