காலமெல்லாம் காவிரி ஆறு தான் தமிழ் நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் மோதலை உண்டு பண்ணிக் கொண்டு இருக்கும் என்றாலும் இப்போது கூடுதலாக பாஜக பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இணைந்து தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளே இருக்கக்கூடாது என்று கங்கனம்கட்டிக் கொண்டு வேலை பார்த்து கொண்டு இருப்பதாக வெளியாககும் தகவல்கள், தமிழ் தேசியவாதிகளிடம் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது..
என்னதான் முதல்வர் மு. க. ஸ்டாலின் இறங்கி வந்தாலும் உறவுக்கு கை கொடுப்போம் என்று பண்பட்ட அரசியலை கையில் எடுத்தாலும் மத்திய பாஜக அரசு, காவிக் கொடியை ஜார்ஜ் கோட்டையில் பறக்க விடுவதே வாழ்நாள் லட்சியமாக கொண்டிருக்கிறது என்கிறார்கள் டெல்லி அரசியலில் பழுத்த அனுபவம் கொண்ட தமிழ்ச் சங்க பிரமுகர்கள் அதிர்ச்சியுடனேயே..
தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவை கொண்டாடும் அதேவேளையில் பேரவையில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு கருணாநிதியின் முழு உருவப்படத்தையும் திறந்து வைக்கும் வரலாற்று நிகழ்வையும் கொண்டாட திட்டமிட்டிருக்கிறது திமுக அரசு..
இங்கு தான் முதல்வர் மு. க. ஸ்டாலினிடம் வேற்றுமையில் ஒற்றுமை காணும் அரசியல் நாகரிகம் தென்படுகிறது.. குடியரசுத் தலைவர் முன்னாள் பாஜக தலைவர் என்றாலும் கூட அவர் வகிக்கும் பதவிக்கு மாண்பை சேர்க்கும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவுக்கு வந்து சிறப்பிக்குமாறு நேரில் சென்று அழைப்பு கொடுத்திருக்கிறார் முதல்வர் மு. க. ஸ்டாலின்..
அதேபோல, கலைஞர் திருவுருவப் படத்தை திறந்து வைக்குமாறும் வேண்டுகோள் வைக்கப்பட்டிருக்கிறது..
இந்தியாவில் உள்ள சின்ன குழந்தைக்கு கூட தெரியும், பிரதமர் மோடியின் கண் அசைவின்றி எந்தவொரு நிகழ்வையும் மேற்கொள்ள மாட்டார் என்பது..
முந்தைய அதிமுக ஆட்சி, எந்தவொரு அரசு நிகழ்வாக இருந்தாலும் பிரதமரை, உள்துறை அமைச்சரை அழைத்து வருவதிலேயே அதீத ஆர்வம் காட்டியது. அவர்களின் வருகை மூலம் இரட்டை தலைவர்களும் அரசியல் ஆதாயம் தேடிக் கொண்டார்கள் என்பது ஒருபுறம் என்றால் மறைமுக திட்டங்களும் கசிந்து இரட்டை தலைவர்களின் சுயநலமும் டெல்லி அரசியல் தலைவர்களின் வருகைக்குள் உள்ளடங்கியுள்ளது என்பதையும் வெளிப்படுத்தியது.
ஆனால், முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு மத்திய பாஜக அரசோடு இணங்கமாக போவதற்கு எந்த மறைமுக திட்டமும் இல்லை என்பதாலும் நாட்டின் முதல் குடிமகன் என்பதாலும் குடியரசுத் தலைவரின் வருகையை எதிர்பார்க்கிறது.. உண்மையிலேயே அவரின் தலைமையில் நடைபெறும் சட்டப்பேரவை நூற்றாண்டு விழா, வரலாற்று சிறப்பு மிக்கது தான்..
ஆனால் கலைஞர் உருவப்படம் திறந்து வைப்பதற்கு அவரின் அரசியல் போராட்ட வாழ்க்கையை அணுஅணுவாக ரசித்த அகில இந்திய அரசியல் தலைவர்களில் ஒருவரை அழைத்திருக்கலாம் என்பதே டெல்லி தமிழ் தலைவர்களின் விருப்பம் மட்டுமல்ல, திமுக முன்னணி தலைவர்களின் ஆசையாகவும் இருக்கிறது.. கூட்டணி கட்சியான காங்கிரஸின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கை அழைத்து இருந்தால் தேசிய அரசியலில் சமநிலையை திமுக மேற்கொண்டு இருக்கிறது என்ற பெருமை திமுக தலைமைக்கு கிடைத்திருக்கும் என்கிறார்கள் தமிழக அரசியல் களத்தின் ஆய்வாளர்கள்..
டாக்டர் மன்மோகன் சிங், அரசியல் கடந்தும் கலைஞரின் ஆளுமையை ரசித்தவர், சிலாகித்து எப்போதும் பேசுபவர் என்று இப்போதும் நினைவு கூறுகிறார்கள் அவரோடு நெருக்கமாக பழகி வரும் தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர்..
இப்படிப்பட்ட கலந்துரையாடல் திமுக தலைமையில் நடைபெற்றதாகவும் ஆனால் அரசு விழாவில் அரசியல் வாடை எந்த சூழ்நிலையிலும் எழுந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார் முதல்வர் மு. க. ஸ்டாலின் என்கிறார்கள் திமுக முன்னணி நிர்வாகிகள்..
இப்படிப்பட்ட நேரத்தில் அரசியல் வாழ்க்கையில் அனுபவம் கூட, கூட மிகுந்த கண்ணியம் காட்டி வரும் முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் மிகப்பெரிய திட்டத்தை கையில் எடுத்து இருக்கிறது டெல்லி பாஜக மேலிடம் என்கிறார்கள் காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தை உண்ணிப்பாக கவனித்து வரும் டெல்லி வாழ் தமிழ் தலைவர் ஒருவர். .
கர்நாடக பாஜக அரசியலில், ஆட்சியில் கண்ணுக்கு தெரியாமல் இருந்து வந்த நிலநடுக்கம் கடந்த சில நாட்களாக வெளிப்படையாக தெரிய ஆரம்பித்திருக்கிறது.. அந்த மாநில அரசியலில் பெருமளவு அதிர்வலைகளை ஏற்படுத்த போகிறது என்றாலும் கூட அதன் நீட்சி தமிழக அரசியலையும் குறிப்பாக ஆட்சிக்கும் நெருக்கடி ஏற்படுத்தும் என்பதுதான் அச்சமூட்டுபவையாக இருக்கிறது என்கிறார் அந்த டெல்லி தலைவர்..
சில நிமிட மெளனத்திற்குப் பிறகு அவரே தொடர்ந்தார்..
முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா வெகு விரைவாக நீக்கப்படவுள்ளார்.. அவரை ஆற்றுப்படுத்தும் வகையில் கேரளம் அல்லது புதுச்சேரிக்கு ஆளுநராக நியமிக்கும் திட்டத்தை அவரிடமே தெரிவித்துவிட்டது பாஜக மேலிடம்.. அவரது புதல்வர் கர்நாடக அரசில் துணை முதல்வர் பதவியில் அமர வைக்கப்படவுள்ளார்..இப்படி கர்நாடக பாஜக. வில் எழுந்துள்ள நிலநடுக்கத்தை அமைதிப்படுத்தும் கையோடு நிறுத்திக் கொள்ளாமல் தமிழகத்திலும் அதிர்வுகளை உருவாக்க திட்டம் தீட்டியிருப்பதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
கர்நாடக பாஜக. வில் குழப்பத்தை ஏற்படுத்துவதிலும் முதல்வர் பதவியை குறி வைத்து காய் நகர்த்துவதிலும் 24 மணி நேரத்தையும் செலவழித்து கொண்டு இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் வகையில் அவரை தமிழக ஆளுநராக நியமிக்க முடிவெடுத்திருக்கிறது டெல்லி பாஜக மேலிடம் என்கிறார்கள் கர்நாடகாவில் உள்ள தமிழ் சங்க நண்பர்கள்..
இந்த வகையில் பாஜக திட்டம் வெற்றி பெற்றால் சதானந்த கவுடா மூலம் தமிழகத்திற்கு குறிப்பாக திமுக அரசுக்கு தீராத தலைவலியாக தான் இருக்கும்..
கவுடாவின் குணாதிசயம் அறிந்தவர்கள் யாராக இருந்தாலும் அவரிடம் காணப்படும் மொழிப்பற்றும் இனப்பற்றும் ஒருபோதும் தமிழக நலன் சார்ந்து சிந்திக்க விடாது.. ஏற்கெனவே இரு மாநிலங்களுக்கு இடையே காவிரி நதிநீர் பங்கீடு, மேகதாது உள்ளிட்ட பல்வேறு உணர்ச்சி மிகுந்த விவகாரங்கள் அனலடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தமிழக ஆளுநர் சதானந்த கவுடா என்ற யோசனை மிகவும் ஆபத்துக்குரியது..
கர்நாடக பாஜக. வில் எழுந்துள்ள கொதிநிலையை அடக்க, எரிய வைக்கும் அடுப்பில் இருந்து ஒரு கொள்ளியை பிடுங்கி அதை தமிழ்நாட்டின் பக்கம் வீச வியூகம் வகுப்பது திமுக ஆட்சிக்கு பேராபத்து ஏற்படுத்தும் செயலே தவிர மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்தும் செயலாக இருக்காது என்று ஆழ்ந்த ஆதங்கத்தோடு பேசினார், டெல்லி தமிழ் சங்கத் தலைவர்..
சில விநாடி ஆசுவாசப்படுத்தலுக்குப் பிறகு பேசிய அவர், கடந்த பல நாட்களாக கர்நாடக பாஜக தலைவர்கள் இடையே பரப்பப்படும் ஆதாரமற்ற தகவல்கள் வெறும் வதந்திகளாக மரணித்துப் போனால் தமிழ்நாட்டிற்கு ரெம்ப புண்ணியமாகும் என்றார் நிறைவாக..
எங்கேயோ இடி இடிக்க.. தமிழகத்திற்கு ஆபத்தா? அய்யகோ பாவப்பட்ட இந்த தமிழ் சாதி என்ன செய்யும்?