Sun. Nov 24th, 2024

முந்தைய அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவையிலேயே பகிரங்கமாக அறிவித்தார்.

சட்டப்பேரவையில் அறிவித்த கையோடு நின்று விடாமல், முன்னாள் கூட்டுறவு அமைச்சர் செல்லூர் கே. ராஜூ உள்பட ஊழலில் ஈடுபட்டோருக்கு எதிரான ஆவணங்களை விரைவாக திரட்டுமாறு கூட்டுறவுத் துறை உயரதிகாரிகளுக்கும் உத்தரவிட்டிருக்கிறார். அமைச்சரின் உத்தரவையடுத்து, கிராம அளவிலான கூட்டுறவு வங்கிகள் முதல் மாவட்ட கூட்டுறவு வங்கி, மாநில தலைமை கூட்டுறவு வங்கி வரையிலும் நடைபெற்றுள்ள ஊழல்களை, மோசடிகளை, முறைகேடுகளை கண்டறிந்து, அதற்குரிய ஆவணங்களை திரட்டுவதற்கு மெகா டீமே களம் இறக்கப்பட்டுள்ளது-

குறிப்பாக, பயிர்க்கடன் ஊழலில் ஈடுபட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், அவர்களுக்கு உடந்தையாக ருந்த கூட்டுறவுத்துறை அதிகாரிகள், வங்கிப் பணியாளர்கள் உள்ளிட்டோரின் முழு விவரங்களையும் விரைவாக திரட்டி உரிய ஆதாரங்களுடன் அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி.

இதனையடுத்து, தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கி முதல், மாவட்ட கூட்டுறவு வங்கி, மாநில தலைமை கூட்டுறவு வங்கி வரை ஊழல் மற்றும் முறைகேடு தொடர்பான ஆவணங்களை சேகரிக்கும் பணியில், கூட்டுறவுத்துறையில் உள்ள தணிக்கையாளர் குழு, கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு சேகரித்து வருவதாக தகவல் கசிந்துள்ளது. முந்தைய அதிமுக ஆட்சியாளர்களுக்கு எதிரான ஆவணங்களை தீவிர முனைப்போடு தேடும் பணியில் ஈடுபட்டுள்ள கூட்டுறவுத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம்.

பயிர்க்கடன் என்ற பெயரில் நடைபெற்ற மெகா மோசடி குறித்து விரிவாக கூறினார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் கூட்டுறவுச் சங்கங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. பெரும்பான்மையான கூட்டுறவுச் சங்கங்கள், வங்கிகள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளிலும் அதிமுக.வினர்தான் பொறுப்புகளுக்கு வந்துள்ளனர். மாநிலம் முழுவதும கூட்டுறவு அதிகாரிகளை மிரட்டி, அதிமுக.வினரே நிர்வாகிகளே வரும் வகையில் ஜனநாயகத்திற்கு விரோதமாக தேர்தலை நடத்தி முடித்துவிட்டனர்.

கிராம அளவிலான தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முதல் மாநில அளவிலான தலைமை கூட்டுறவு வங்கி வரை, அதிமுக நிர்வாகிகளின் ஆதிக்கத்தில்தான் தற்போதும் வங்கிகள் இருந்து வருகின்றன. ஒட்டுமொத்தமாக அதிமுக வசம் கூட்டுறவு வங்கிகள் வந்தவுடன், பயிர்க்கடன் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. 100க்கு 90 சதவீதம் அதிமுக.வினருக்கு மட்டுமே பயிர்க்கடன் வழங்கப்பட்டது. சட்டவிரோதமாக நடைபெற்ற இந்த பயிர்க்கடன் வழங்கும் நடைமுறையை அப்போதே பல்வேறு விவசாய சங்கங்கள் கடுமையாக எதிர்த்து, போராட்டங்களையும் நடத்தின. ஆனால், அப்போதைய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, அதிமுக.வைச் சேர்ந்தவர்களுக்கே பயிர்க்கடன் வழங்க வேணடும் என கண்டிப்பான உத்தரவை கூட்டுறவு வங்கி அதிகாரிகளுக்கு பிறப்பித்தார்.

இதன் காரணமாக, 16 லட்சத்து 43 ஆயிரத்து 347 விவசாயிகளுக்கு 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் அளவுக்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்தக் கடன் தொகையைதான் முழுமையாக தள்ளுபடி செய்வதாக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து, நூற்றுக்கணக்கானோருக்கு பயிர்க்கடன் ரத்து செய்யப்பட்டதற்கான ரசீதையும் வழங்கினார்.

திமுக ஆட்சிக்கு வந்ததும், கூட்டுறவுத்துறை அமைச்சரான ஐ.பெரியசாமியை சந்தித்த கூட்டுறவுத்துறை உயரதிகாரிகள், பயிர்க்கடன் வழங்குவதிலும், தள்ளுபடி செய்யப்பட்டதிலும் நடைபெற்ற ஊழல் மற்றும் முறைகேடுகளை விவரித்தனர்.

அப்போது, ஒரு விவசாயிக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு பயிர்க்கடன் வழங்கப்படுவதாக கூறினாலும், அவருக்கு ரொக்கமாக 60 ஆயிரத்தில் இருந்து 70 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த விவசாயின் பெயரில் ஒரு லட்சம் ரூபாய் பயிர்க்கடன் வழங்கியுள்ளதாக வங்கிப் பதிவேடுகளில் எழுதி, மீதித் தொகையான 30 ஆயிரமோ, 40 ஆயிரத்தையோ, அந்த வங்கியின் நிர்வாகப் பொறுப்பில் இருந்த அதிமுக நிர்வாகிகள் சுருட்டிக் கொண்டுள்ளனர்.

இப்படிபட்ட முறைகேடுகளுக்கு கூட்டுறவு வங்கி அதிகாரிகள் உடன்பட மறுத்த போது, அமைச்சர் செல்லூர் கே. ராஜூ மூலம் பணியிட மாற்றம் செய்து, தங்கள் கொள்ளையை தொடர்ந்துள்ளனர். விவசாயியை பொறுத்தவரை 70 ஆயிரம் ரூபாய்தான கடன் பெற்றுள்ளதாக நினைத்துக் கொண்டிருப்பார். கடன் தள்ளுபடி என்று அறிவிக்கப்பட்டதால், அந்த விவசாயி தான் பெற்ற கடன்தொகை 70 ஆயிரம் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது என்று நிம்மதியடைந்துவிடுவார். ஆனால், அவரின் பெயரில் கூடுதலாக வழங்கப்பட்ட 30 ஆயிரம் ரூபாயும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்பது அந்த விவசாயிக்கு தெரியாது. அதனால், அதிமுக நிர்வாகிகள் செய்த முறைகேடு வெளிச்சத்திற்கு வராமல், அப்படியே மறைக்கப்பட்டு விட்டது.

இப்படி பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அதிமுக நிர்வாகிகள் ஊழல் புரிந்துள்ளனர். இந்த உண்மைகளை, கூட்டுறவு அமைச்சராக பதவியேற்ற நாள் முதல் தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்கள் நடத்தியதன் மூலம் கண்டறிந்துவிட்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, ஒவ்வொரு கூட்டுறவு வங்கியிலும் கடன் பெற்ற விவசாயிகளின் பெயர் பட்டியல், அவர்கள் பெற்ற பயிர்க்கடனின் முழுத் தொகை ஆகியவற்றை பட்டியலாக தயாரித்து, அந்தந்த வங்கிகளின் தகவல் பலகையில் பொதுமக்களின் பார்வையில் படும் படி ஒட்ட வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார்.

அமைச்சரின் உத்தரவின் பேரில், கிராமப்புறங்களில் உள்ள தொடக்க கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகளின் பெயர், அவர்கள் பெற்ற பயிர்க்கடன் தொகை, தள்ளுபடி விவரம் போன்றவற்றை தகவல் பலகையில் வெளியிடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. தங்கள் பெயரில் மோசடி நடைபெற்றுள்ளதா என்பதை தெரிந்து கொள்வதற்காக, பயிர்க்கடன் பெற்ற ஒவ்வொரு விவசாயியும், கூட்டுறவு வங்கிகளுக்கு சென்று தங்களின் பெயரில் மோசடியாக கூடுதல் தொகை பெறப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க தொடங்கி விட்டனர்.

கூடுதல் தொகை வழங்கப்பட்டுள்ளது தொடர்பாக தகவல் தெரிய வந்தால், ஏமாற்றப்பட்டதான உணரும் விவசாயி, அந்தந்த கூட்டுறவு வங்கி அதிமுக நிர்வாகிகள் மீது எழுத்துப் பூர்வமாக புகார் மனுக்களை வழங்க தொடங்கியிருக்கிறார்கள். இதுபோன்ற மோசடி புகார்கள், தமிழகம் இதுவரை மட்டுமே பல்லாயிரம் பேர் கொடுத்துள்ளனர்.

இதுபோன்று ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் வழங்கும் விவகாரத்தில் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்று இருக்கிறது என்பதை முழுமையான அளவுக்கு ஆதாரமாக திரட்டியவுடன், இந்த பயிர்க்கடன் மோசடிக்கு துணை போன முன்னாள் அதிமுக கூட்டுறவு அமைச்சர் செல்லூர் கே.ராஜு மற்றும் கூட்டுறவு சங்க அதிமுக நிர்வாகிகள் மீது ஒட்டுமொத்தமாக லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு, மோசடியில் ஈடுபட்ட அனைவரையும் சிறையில் தள்ளுவதற்கு கூட்டுறவு அமைச்சர் ஐ.பெரியசாமி துடித்துக் கொண்டிருக்கிறார். .

மேலும், மாவட்ட அளவிலான கூட்டுறவு வங்கிகளில், போலி ஆவணங்கள் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அதிமுக நிர்வாகிகள் கடன் பெற்றுள்ளது தொடர்பாகவும் ரகசியமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும், தகுதியில்லாதவர்களுக்கு முறைகேடாக பணி நியமனம் வழங்கப்பட்டதிலும் ஊழல் நடைபெற்று இருக்கிறது. அனைத்து முறைகேடுகளுக்கும் அப்போதைய கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூவுக்கு தெரிந்தே நடைபெற்று இருக்கிறது என்பதுதான் அதிர்ச்சிகரமான விஷயம்.

எனவே, வரும் மாதங்களில் செல்லூர் கே.ராஜு உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் சிறைக்கு செல்வது உறுதி. ஊழலுக்கு எதிராக சாட்டையை சுழற்ற ஆரம்பித்திருக்கும் கூட்டுறவு அமைச்சர் ஐ.பெரியசாமியின் வேட்டையில் இருந்து செல்லூர் கே.ராஜூ உள்பட அதிமுக நிர்வாகிகள் ஒருவர் கூட தப்ப முடியாது என்று விரிவாக கூறினார் கூட்டுறவு அதிகாரி..

தூள் கிளப்புங்க ..