Mon. Nov 25th, 2024

கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆளுநர் , அமைச்சர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.

கவிஞர் கண்ணதாசன் உள்பட அனைத்து தலைவர்களுக்கும் அரசு சார்பில் மட்டுமே மரியாதை செலுத்துவதுதான் மரபு. ஆளுநர் பதவி வகிப்பவர்கள் வழக்கமாக மரியாதை செலுத்துவது இல்லை. ஆனால், அந்த மரபை மீறி, புதுச்சேரி ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தமிழிசை சவுந்தரராஜன், கவிஞர் கண்ணதாசனுக்கு புகழ் மாலை சூட்டி மரியாதை செலுத்தியுள்ளார். இதுதொடர்பாக தனது அதிகாரப்பூர்வமான டிவிட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவை ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

கவியரசுவிற்கு மாலை அணிவிக்க வேண்டுமென்றேன் ஆளுநர் செல்லலாமா? என்ற விவாதம் எழுந்த நிலையில் தமிழ் ஆர்வலராக செல்கிறேன் எனப்புறப்பட்டு ஆளுமை மிகுந்த வாழ்க்கை தத்துவத்தை அனைத்து மக்களிடமும் எடுத்துச்சென்ற மாகவிக்கு என் எளிய தமிழ் வணக்கத்தை செலுத்தி வந்தேன்…

இவ்வாறு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் குறிப்பிட்டு கவிஞர் கண்ணதாசனுக்கு மரியாதை செலுத்திய புகைப்படங்களையும் பதிவேற்றியுள்ளார்.

,இதேபோல், கவியரசு கண்ணதாசனின் 95 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் சென்னை தி.நகர் நாராயணா சாலையில் அமைந்துள்ள அவரது உருவ சிலைக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு, சேகர்பாபு மற்றும் அரசு அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.