தமிழ்நாட்டில் நகர்புற மற்றும் 9 புதிய மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மேலும் 6 மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என தெரிவித்தார். ஆனால், அதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், வரும் செப். 15-ம் தேதிக்குள் நடத்த வேண்டும் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என் உத்தரவிட்டுள்ளது. மேலும் 6 மாதம் அவகாசம் அளிக்கவும் உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
இந்நிலையில், உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள காலக்கெடுவுக்கு உள்ளாக, தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.
தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் பெரிய கருப்பன், கே.என்.நேரு மற்றும் தலைமைச் செயலர் வெ.இறையன்பு உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் கிராம பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றியம் ஆகிய அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டது. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை. இதேபோல, புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களிலும் உள்ளாட்சித் தேர்தல்கள் முழுமையாக நடத்தப்படவில்லை.
இந்தநிலையில்தான், உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் தள்ளி வைக்கப்பட்ட அனைத்து அமைப்புகளுக்கும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.