தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தி, தமிழகத்தில் பல மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்தார். அந்தநேரத்தில், திமுக.வுடனான கூட்டணியையும், தொகுதிப் பங்கீட்டையும் கூட காங்கிரஸ் கட்சி நிறைவு செய்யவில்லை.
தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது. இருந்தபோதும், தமிழகத்தின் பல மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்த ராகுல்காந்தி, மத்திய பாஜக அரசுக்கு அடிமை போல நடந்து கொண்ட அதிமுக அரசின் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக சாடினார்.
தமிழர்களுக்கென்று தனித்த பாரம்பரியம், பண்பாடு இருக்கிறது. தந்தை பெரியார் பிறந்த மண்ணில் சுயமரியாதை உணர்வோடு காலம் காலமாக வாழ்ந்து வரும் தமிழர்கள், யாரிடமும் மண்டியிடும் பழக்கம் இல்லாதவர்கள். மாநில உரிமைகளுக்காக குரல் கொடுப்பதில் முதல் இடத்தில் இருப்பவர்களும், இந்தியாவுக்கே வழிகாட்டி வரும் தமிழக தலைவர்கள் வாழும் தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி போன்ற அடிமைகளும் இருப்பதும், மிகவும் அவமானத்திற்குரிய விஷயம் என்று குற்றம் சாட்டினார் ராகுல்காந்தி.
குறிப்பாக, தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்த போது, எடப்பாடி பழனிசாமியின் பெயரைக் குறிப்பிட்டே ராகுல்காந்தி விமர்சனம் செய்து வந்தபோது, பொதுமக்களைப் பார்த்து திரும்ப திரும்ப ஒரு கேள்வியை முன்வைத்தார். வரும் சட்டமன்றத் தேர்தலில் தன்மானத்தை இழக்காத, சுயமரியாதை உணர்வு கொண்ட, தமிழகத்தின் பாரம்பரிய உணர்வுகளை மதிக்கக் கூடிய ஒருவரை முதல்வராக பொதுமக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
திமுக.வுடனான கூட்டணி நிறைவு பெறாத நேரத்தில் கூட, ராகுல்காந்தி செய்தியாளர்களைச் சந்தித்த போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்தான் முதல் அமைச்சர் பதவியை ஏற்பார் என்றும், அவரின் மூலம் தமிழகம் கடந்த பல ஆண்டு இழந்துவிட்ட மரியாதையை தமிழகம் மீண்டும் மீட்டெடுக்கும் என்றும், மத்திய அரசிடம் அடிபணியாத தலைவராக மு.க.ஸ்டாலின் திகழ்வார் என்றும் உறுதிபட கூறினார் ராகுல்காந்தி.
மாநில உணர்வுகளை புறக்கணிக்கும் மத்திய பா.ஜ.க அரசின் மனப்பாங்கிற்கு திமுக.வால் மட்டுமே முடிவு கட்ட முடியும் என்று தான் உறுதியாக நம்புவதாகவும் ராகுல்காந்தி திட்டவட்டமாக தெரிவித்தார்.
அவரின் நம்பிக்கையை, வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில், சட்டமன்றத் தேர்தலில் திமுக அபாரமான வெற்றிப் பெற்றது. ராகுல்காந்தியின் சபதம் நிறைவேறியதைப் போல, முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். தன் மீதும், திமுக மீதும் ராகுல்காந்தி வைத்துள்ள நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையில், தனது முதல் டெல்லி பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து சென்னை திரும்பியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது, சுயமரியாதையை விட்டுக் கொடுக்காமல் முதல்வர் மு.க.ஸ்டாலின் கம்பீரமாக நடந்து கொண்டதன் மூலம், கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்திற்கு ஏற்பட்ட அவமானம் முழுமையாக துடைத்து எறியப்பட்டுள்ளது. டெல்லியில் மற்ற தேசியத்தலைவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தால்கூட, பிரதமர் மோடி கோபித்துக் கொள்வார் என்ற அச்சத்திலேயே கடந்த 4 ஆண்டுகளாக நடமாடிக் கொண்டிருந்த அதிமுக தலைவர்களைப் போல் இல்லாமல், கூடுதலாக ஒருநாள் தங்கியிருந்து காங்கிரஸ் தலைவர் பொறுப்பை வகிக்கும் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரை சந்தித்து மரியாதைநிமித்தமாக சந்தித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
முன்னதாக, அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் மூத்த தலைவர்கள் டி.ராஜா, சீதாராம் யெச்சூரி ஆகியோரும், முதல்வர் மு.க.ஸ்டாலின் தங்கியிருந்த தமிழ்நாடு இல்லத்திற்கே சென்று சந்தித்து கலந்துரையாடினார்கள்.
ஜூன் 18 ஆம் தேதி காலையில் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்த போது, ராகுல்காந்திக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொன்னாடையை அணிவித்து நட்பு பாராட்டினார். அந்த நிமிடத்தில் நேருக்கு நேராக முதல்வர் மு.க.ஸ்டாலினை பார்த்து பூரித்துப் போன ராகுல்காந்தியின் கண்களில், சட்டமன்றத் தேர்தலின் போது தமிழக மக்களிடம் தான் வைத்த வேண்டுகோளை, சபதத்தை ஏற்று, ஒரு தன்மானத் தலைவரை தமிழக மக்கள் தேர்ந்தெடுத்து, டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளனர் என்ற பெருமிதம்தான் மிளிர்ந்தது.
சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோருடனான சந்திப்பின் போது, முதல்வர் மு.க.ஸ்டாலினும் நெகிழ்ச்சியுடன்தான் காட்சியளித்தார். உணர்வோடு கலந்து நிற்கும் உறவினர்களை பல ஆண்டுகள் கழித்து சந்திக்கும் போது, உள்ளத்தில் எந்தளவுக்கு உணர்ச்சிப் பொங்குமோ, அதற்கு மேலான உணர்வுகளைதான் மூன்று தலைவர்களிடமும் பார்க்க முடிந்தது என்கிறார்கள், முதல்வர் மு.க.ஸ்டாலினோடு டெல்லி சென்றிருந்த திமுக எம்.பி..க்களில் சிலர்.
அதன் வெளிப்பாடுதான், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் காலந்தொட்டே தொடரும் உறவு இது என்றும் நெஞ்சுக்கு நெருக்கமாக உணர்ந்தேன் என்றும் பூரிப்போடு தனது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்றனர் திமுக எம்.பி.க்கள்.