Sat. Nov 23rd, 2024

அரசுத் துறைகளில் ஐஏஎஸ் பதவி என்பது அதிகாரமிக்க பணி என்று கருதுவோர் இடையே, மக்களுக்கு சேவை செய்ய கிடைத்த மகத்தான வாய்ப்பு என்ற அடிப்படையில் மக்கள் சேவராகவே மாறி, அடிதட்ட மக்களின் மனங்களில் சிம்மாசனம் போட்டு அமர்வது என்பது ஒரு சில அதிகாரிகளுக்கு மட்டுமே கை கூடுகிறது.

இன்றைய தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ்.ஸைப் போல விரல் விட்டு எண்ணக் கூடிய உயரதிகாரிகள் ஒரு சிலரைதான் பொதுமக்கள் தங்கள் ஆயுள் உள்ளவரை கொண்டாடுகிறார்கள். அந்த வரிசையில், இடம் பிடித்திருப்பவர் வேலூர் மாவட்ட ஆட்சியராக புணியாற்றிய சண்முகசுந்தரம் ஐஏஎஸ்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி வேலூர் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்ட சண்முக சுந்தரம் ஐஏஎஸ், இரண்டு வருட பணிக்காலத்திற்குப் பிறகு வேலூரில் இருந்து கூட்டுறவு சங்க பதிவாளராக அண்மையில் மாற்றப்பட்டார்.

சரியாக இரண்டு ஆண்டுகள் வேலூர் மாவட்டத்தில் பணியாற்றிய ஆட்சியர், ஒவ்வொரு நாளையும் ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகவே பயன்படுத்திக் கொண்டுள்ளார். தனது நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்து துறை அதிகாரிகளிடம், அதிகாரத்தை காட்டாமல், அன்பின் மூலம் அரவணைத்து, ஏழை எளிய மக்களுக்கு உதவுவதையே முழு மூச்சாக கொண்டிருந்தார்.

அரசு துறையில் உங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரம் மூலம் ஏழை எளிய மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய முடியுமா என்று யோசியுங்கள். விளிம்பு நிலையில் வாழும் மக்களுக்கு அரசு வழங்கும் ஏதாவது ஒரு நிதியுதவியோ, நலத்திட்டமோ அந்த மக்களின் வறுமையை போக்கும். வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த உதவும். அப்படி தருணங்களை அரசு அதிகாரிகள் ஒருபோதும் அலட்சியப்படுத்திவிடக் கூடாது.

அரசு சம்பளம் கிடைக்கிறது என்பதற்காக, கண்துடைப்பாக அரசுப் பணியாற்றாமல், ஏழை எளிய மக்களின் துயரத்தை போக்கும் வகையில் உண்மையான அக்கறையோடு பணியாற்றுங்கள் என்று போதிப்பதை, கடந்த இரண்டு ஆண்டுகளும் கடமையாகவே கொண்டிருந்திருக்கிறார், ஆட்சியர் சண்முகசுந்தரம் ஐஏஎஸ்.

மக்கள் குறை தீர்க்கும் கூட்டம், சமபந்தி போஜனம் போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் ஆட்சியர் சண்முக சுந்தரம் ஐஏஎஸ்., அதை ஒரு சடங்காக கருதாமல், அந்த நிகழ்வையொட்டி, அந்தந்த கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு ஏதாவது நன்மை செய்ய முடியுமா, கிராம மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வைக்க முடியுமா என்று கிராம அளவிலான அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தி, கிராம மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பதை முதன்மையான பணியாக கருதி செயலாற்றியுள்ளார்.

ஏழை, எளிய நடுத்தர மக்களின் மீது ஆட்சியர் சண்முகசுந்தரம் காட்டிய பரிவைக் கண்டு நெகிழ்ந்து போன வேலூர் மவாட்ட அரசு அதிகாரிகள், ஆட்சியரின் பாணியிலேயே பின்தங்கியுள்ள கிராம மக்களை தேடிச் சென்று, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வைத்து, அதுதொடர்பாக தகவல்களை ஆட்சியருக்கு அனுப்பி வைத்து பாராட்டு பெற்ற நிகழ்வுகள் நிறைய உண்டு என்கிறார்கள் வேலூர் சமூக ஆர்வலர்கள்.

அதைவிட சிறப்பு வாய்ந்த பணியாக, கொரேனோ காலத்தில் ஆட்சியர் சண்முகசுந்தரம் ஐஏஎஸ் ஆற்றிய மனிதசேவையை இன்றைக்கும் கூட வேலூர் மக்கள் நினைவுக்கூர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

கொரோனோ பெருந்தொற்றின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கிய ஏப்ரல் மாதத்தில், வேலூர் மாவட்டத்தில் தங்கி வேலைப்பார்த்த வடமாநிலத்தைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை ரயில், தனியார் பேருந்துகள் மூலம் அவரவர் மாநிலத்திற்கு அனுப்பி வைக்க விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதுபோன்ற நெருக்கடியான காலங்களில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மூலம்தான் பிற மாநிலங்களில் உள்ள ஐஏஎஸ் உயரதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியும். ஆனால், அப்படிபட்ட அரசு விதிகளின்படி செயல்பட்டால், வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் ஊர்களுக்கு திரும்ப வாரக்கணக்கில் காத்திருக்க வேண்டும் என்பதால், பிற மாநிலங்களில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளை, ஆட்சியர் சண்முகசுந்தரமே நேரடியாக தொடர்பு கொண்டு அனுமதி பெற்று வடமாநில மக்களை அனுப்பி வைத்தார்.

இதன் மூலம் வடமாநிலத்தவர்கள் காலம் தாமதம் இன்றி அவரவர் மாநிலங்களுக்கு பாதுகாப்பாக சென்று சேர்ந்தனர். பயணத்தின் போது உணவு இன்றி அவர்கள் தவித்து விடக் கூடாது என்பதற்காக, உணவுப் பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவற்றை ஒவ்வொருவருக்கும் வழங்கி அனுப்பி வைத்துள்ளார் ஆட்சியர் சண்முகசுந்தரம் ஐஏஎஸ். உடல்நிலை பாதிக்கப்பட்ட வடமாநிலத்தவர்கள் சிலர், ரயில் மூலமோ, பேருந்து மூலமோ பயணம் செய்வது ஆபத்தாகிவிடும் என்பதால், அவர்களை ஆம்புலன்ஸ் மூலமும் அனுப்பி வைத்துள்ளார்.

இப்படி மக்களின் துயரத்தை, தன்னுடைய துயரமாக கருதும் மனம் படைத்தவராக வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் ஐஏஎஸ் இருந்ததால்தான், அவரை வேலூரில் இருந்து கூட்டுறவு சங்க பதிவாளராக இடம் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார் என்ற தகவல் கிடைத்தவுடன் அரசு அதிகாரிகள் மட்டுமல்ல, வேலூர் மாவட்ட மக்களும் அதிர்ச்சியடைந்துவிட்டனர்.

அரசுப் பணியில் இதுபோன்ற பணியிட மாற்றம் இயல்பானது என்று மற்ற துறை அரசு அலுவலர்களுக்கு எடுத்துக் கூறிய ஆட்சியர் சண்முகசுந்தரம், அவரவர் வாழ்நாள் முழுவதும் உதவி தேவைப்படுவோருக்கு ஆதரவாக நில்லுங்கள் என்று அன்பு கட்டளையிட்டவாறே சென்னைக்கு பயணமாகியிருக்கிறார்.

அரசு பதவியை வைத்து அதிகாரத்தை காட்டாமல், அன்பு காட்டியும், பரிவோடு அரவணைத்தும் வழிநடத்திய ஆட்சியர் சண்முகசுந்தரம் ஐஏஎஸ்.ஸுக்கு மிகுந்த நெகிழ்ச்சியோடு பிரிவு உபசார விழா நடத்தி பாராட்டு மழை பொழிந்தனர், வேலூர் மாவட்ட அனைத்து துறை அரசு அலுவலர்கள். அதே விழாவில் கலந்துகொண்ட அணைக்கட்டு எம்.எல்.ஏ.வும் வேலூர் மாவட்ட திமுக செயலாளருமான ஏ.பி.நந்தகுமார் கலந்துகொண்டு, ஆட்சியர் சண்முகசுந்தரம் ஐஏஎஸ்.ஸுக்கு வெண் பட்டு வேட்டி அணிவித்து சிறப்புரையாற்றி பிரியாவிடை கொடுத்து வழியனுப்பி வைத்தார்.

கூட்டுறவு துறையிலும் நலிவுற்ற மக்கள்தான் பெருமளவில் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையோடு இரண்டற கலந்திருக்கும் வறுமையெனும் இருள் விலக ஒளியேற்றுவார் சண்முகசுந்தரம் ஐஏஎஸ் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

கூட்டுறவு பதிவாளர் என்ற புதிய பதவியும், அவரின் மனிதநேய பணியால், மாபெரும் சிறப்பு பெறட்டும்…