டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் குறுவை சாகுபடிக்காக வரும் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படவுள்ளது. அதுவும் முதல்வர் மு.க.ஸ்டாலினே மேட்டூருக்கு நேரில் சென்று தண்ணீரை முதல்முறையாக திறந்துவிடுகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் குறுவை சாகுபடி பணிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு நாளன்று சுமார் 65 டிஎம்சி அளவுக்கு மட்டுமே மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு இருந்தது. அதேபோல் இந்த ஆண்டும் குறுவை சாகுபடிக்கு அணையை திறக்கும் வகையில்நீர் இருப்பு திருப்திகரமாக உள்ளது.
மே 26ஆம் தேதி நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 97 அடியாக இருந்தது. தற்போது அணையில் சுமார் 62 டி.எம்.சி நீர் இருப்பு உள்ளது. ஆகவே மேட்டூர் அணை ஜுன் 12 ஆம் தேதி தன்னுடைய முன்னிலையிலே (மு.க.ஸ்டாலின்) திறக்கப்படும் என்ற அறிவிப்பை தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதனால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து நிலத்தடி நீரைக் கொண்டு நெல் நாற்றங்கால் தயார் செய்யும் பணிகளை விவசாயிகள் நம்பிக்கையுடன் தொடங்க ஆயத்தமாகி வருகிறார்கள். மேட்டூர் அணை திறப்பு தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்ற ஆய்வுக் கட்டம் தஞ்சாவூரில் கடந்த மே 16 ஆம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே டெல்டா மாவட்டங்களில் ஒரு பகுதி விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை தொடங்கிவிட்டனர். ஆழ்துளை கிணறுகளின் உதவியால் இதுவரை 68,500 ஏக்கரில் சாகுபடி செய்வதற்கு நாற்று விடப்பட்டுள்ளது. இதில் தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் சுமார் 56 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஜுன் 12 ஆம் தே அணை திறப்பதால், டெல்டா மாவட்டங்களில் 4 லட்சம் ஏக்கருக்கும் மேல் குறுவை நெல் சாகுபடி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தஞ்சாவூர். திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் சுமார்3 லட்சத்து 50ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகு(படி நடைபெற வாய்ப்புள்ளது. தற்போது மேட்டூர் அணையில் இருப்பில் உள்ள நீர் 50 நாட்கள் பாசனத்துக்கு போதுமானது என்று கருதப்படுகிறது.
கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஜுன் மாதம் கிடைக்க வேண்டிய 9.19 டி.எம்.சி ஜுலை மாத பங்கீடு 31.24 டி.எம்.சி ஆகஸ்ட் மாதத்துக்கான 45.95 டி.எம்.சி. நீரை கேட்டுப் பெற வேண்டும் என்று விவசாய சங்க அமைப்புகள் மற்றும் அதன் பிரதிநிதிகள் வலியறுத்தியுள்ளனர்.
இந்த ஆண்டு வடகிழக்குப் பருவ மழையும் இயல்பான அளவில் பெய்யக்கூடும் என வானிலை கணிப்புகள் கூறுகின்றன. இதன் காரணமாக, வரும் சாகுபடி ஆண்டில் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என்ற நம்பிக்கை நிலவுகிறது. குறுவை பணிகளைமுன் கூட்டியே தொடங்கினால்தான், வடகிழக்கு பருவமழையால் பாதிக்காத வகையில் அறுவடைப் பணிகளை விவசாயிகளால் மேற்கொள்ள முடியும்.