திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து இந்த நிமிடம் வரை தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பரத் துறையில் ஒன்றிரண்டு அதிகாரிகளுக்கு தவிர வேறு யாருக்கும் பணியிட மாற்றம் செய்யப்படவில்லை. குறிப்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட அலுவலகங்களில் பணியாற்றி வரும் மக்கள் தொடர்பு அலுவலர்களுக்கு பொதுவான பணிமாறுதல் இன்னும் வழங்கப்படவே இல்லை. (இதுதொடர்பாகவும் நல்லரசு தமிழ் செய்திகளில் சிறப்பு செய்தி வெளியாகியுள்ளது.)
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம் உதவியாளராக இருந்த ரவிச்சந்திரன் என்பவர், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் பரிந்துரையின் பேரில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் பெற்று, கடந்த சில நாட்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தார். இந்த பணியிட மாற்றம், செய்தித்துறையில் பலத்த அதிர்வலைகளை உருவாக்கியது.
திமுக ஆதரவு அதிகாரிகளுக்கு பணிமாறுதல் வழங்காத நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சரிடம் கடந்த பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த மக்கள் தொடர்பு அதிகாரிக்கு (பி.ஆர்.ஓ ரவிச்சந்திரன்) எப்படி பணிமாறுதல் கிடைத்தது என்று செய்தித்துறையில் பணியாற்றி வரும் உயரதிகாரிகள் விசாரணையில் குதித்த போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவின் சிபாரிசின் பேரில் அவர் பணியிட மாற்றம் பெற்றதாக தகவல் கிடைத்தது. அதனை நல்லரசு தமிழ் செய்திகளிலும் விரிவாக குறிப்பிட்டிருந்தோம்.
ரவிச்சந்திரன் பணியிட மாற்றம் விவகாரம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, இன்று மாலை திருச்சி மாவட்ட பி.ஆர்.ஓ. ரவிச்சந்திரனை அதிரடியாக மாற்றம் செய்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன் ஐஏஎஸ் உத்தரவிட்டுள்ளார். அரசு போக்குவரத்து கழகத்தின் ஈரோடு மண்டல அலுவலகத்திற்கு பி.ஆர்.ஓ.ரவிச்சந்திரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பணியிட மாற்றம் தொடர்பான தகவல் கிடைத்தவுடன் ரவிச்சந்திரன் அலட்டிக் கொள்ளவே இல்லையாம். சில மாதங்கள்தான் ஈரோட்டில் பணிபுரிவேன். முந்தைய ஆட்சியில் முதலமைச்சர் அலுவலகத்தில் பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி ஜெயஸ்ரீ முரளிதரன் திமுக ஆட்சியிலும் செல்வாக்கு மிக்க துறையில்தான் பணியாற்றுகிறார் (தொழிற்துறை சிறப்புச் செயலாளர்) அவரின் ஆசி தனக்கு உண்டு. ஒரு சில மாதங்கள் கழித்து அவரின் பரிந்துரை மூலம் மீண்டும் திருச்சி மாவட்டத்திற்கோ அல்லது வேறு மாவட்டத்திற்கோ பணி மாறுதல் பெற்று வந்திடுவேன் என்று உறுதிபட கூறியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
செய்தித்துறை அமைச்சரான வெள்ளக்கோவில் சாமிநாதனின் பெருந்தன்மையை பயன்படுத்தி, அவரது துறையில் பணியிட மாறுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சக அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் போன்றவர்களின் அத்துமீறலை முளையிலேயே கிள்ளியெறி வேண்டும். இல்லையென்றால், ஐந்தாண்டு காலமும் செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு கடும் தலைவலியை உருவாக்கி தந்துவிடும் என்கிறார்கள் செய்தித்துறையில் உள்ள நேர்மையான அதிகாரிகள்.