வாடியப் பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் அருட்பெருஞ்சோதியான தெய்வத்திரு ராமலிங்க அடிகளார். அவர் வகுத்து தந்த வழியில் சென்னையில் உதவும் கைகள் என்ற தன்னார்வல குழுவினர் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் முதல் ஏழை எளிய மக்களுக்கு மூன்று வேளை உணவு மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தினருக்கு தேவையான உணவுப்பொருட்கள், பிற மாவட்டங்களில் இருந்து சென்னையில் வந்து தங்கியிருக்கும் மாணவ, மாணவியர்களுக்கு தேவையான பொருள் உதவி, மருந்து மாத்திரை வழங்குதல் என எண்ணற்ற சேவைகளை செய்து வருகிறார்கள்.
ஓராண்டிற்கு மேலாக தொய்வின்ற நடைபெற்று வரும் மாபெரும் மனிதநேய சேவைக்கு பல்வேறு தரப்பினர் நன்கொடையாக பல்லாயிரக்கணக்கான ரூபாயை வழங்குகிறார்கள். இளைஞர்கள், இளம்பெண்கள் என ஒட்டுமொத்த இளம்தலைமுறையினரும் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், கடுமையான கட்டுப்பாடுகளுக்கும் இடையேயும், சென்னை மாநகரில் உணவின்றி ஒருவரும் பட்டினியோடு இருக்கக் கூடாது என்ற இலட்சிய வெறியோடு தேடி தேடி சென்று உதவி புரிந்து வருகின்றனர்.
உயிர்க்கொல்லி நோயான கொரோனோ தொற்று காலத்தில் உதவுகள் கைகள் குழுவைச் சேர்ந்த தன்னார்வலர்கள், அவர்களோடு கைகோர்த்துள்ள பிற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என ஒட்டுமொத்த தன்னார்வலர்களின் சேவையும் மகத்தானது…இளம்தலைமுறையினரின் மனிதநேயப் பணிகள் மேலும் மேலும் தழைக்கட்டும்….