கொரோனோ தொற்று பரவலின் காரணமாக நடப்பாண்டிற்கான பிளஸ் 2 தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து, பொதுத்தேர்வு நடத்தப்படுமா அல்லது கடந்தாண்டைப் போலவே மாணவ, மாணவியர் அனைவரும் தேர்ச்சிப் பெற்றதாக அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவ, மாணவியர், அவர்தம் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் தரப்பில் நிலவி வந்தது.
கடந்தாண்டை விட தற்போது கொரோனோ பரவல் மிகவும் வேகமாக இருப்பதால், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலினுடனும் கலந்து ஆலோசித்தார்.
இந்தநிலையில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில்,
மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார் செய்யும் விதமாக வாட்ஸ் அப் மூலம் அலகுத்தேர்வு நடத்தவும் வாட்ஸ் அப் வழி தேர்வுகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளும் அதில் இடம் பெற்றுள்ளன. .
வாட்ஸ் அப் மூலம் +2 அலகுத்தேர்வு – வழிகாட்டு நெறிமுறைகள்..என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அரசு செய்திக்குறிப்பில் உள்ள விவரம் பின்வருமாறு:
வாட்ஸ் அப்பில் மாணவர்களுக்கு தனியாகவும் மாணவிகளுக்கு தனியாகவும் குழு அமைக்க வேண்டும். வாட்ஸ் அப் குழுவில் தேர்வுக்கான வினாத்தாள்களை அனுப்ப வேண்டும்; விடைத்தாளில் பெயர், பதிவு எண் கட்டாயம். மாணவர்கள் விடையை தனி தாளில் எழுதி பெற்றோர் கையொப்பம் பெற்று PDF ஆக அனுப்ப வேண்டும். ஆசிரியர்கள் விடைத்தாள்களை வாட்ஸ் அப் மூலம் திருத்தி அதற்கான மதிப்பெண்களை வழங்க வேண்டும். வாட்ஸ் அப் குழுவில் வேறு செய்திகள், வீடியோக்களை அனுப்ப கூடாது என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.