மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா நடராஜன், பெங்களூர் சிறையில் இருந்து வரும் 27 ஆம் தேதி விடுவிக்கப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. இந்நிலையில், நேற்று நண்பகலில் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட அவருக்கு, சிறைச்சாலையிலேயே முதலுதவி வழங்கப்பட்டது. பின்னர், அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், அவர் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்நிலையில் நள்ளிரவில் மீண்டும் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுதது, அபர் பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தகவலறிந்து பெங்களூர் சென்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், சசிகலா உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், சசிகலா உடல் நிலை சீராக உள்ளது. சசிகலாவுக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து, சசிகலாவுக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிடி ஸ்கேன் மூலமும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது. சசிகலாவின் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவாக உள்ளது. சசிகலாவை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க விரும்புகிறோம். சசிகலா உடல்நிலையில் கவலைப்படும்படி எதுவும் இல்லை என்று டாக்டர்கள் கூறியுள்ளதாகவும் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.