Fri. May 17th, 2024

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ராமனுஜர் ஆலயத்திற்கு சென்று சுவாமி தரிசனம் பெற்று பின்பு ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது: பன்னாட்டு தொழில் நிறுவனத்தின் மூலம் தமிழகத்தில் தொழில் தொடங்க 3 லட்சம் கோடி புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் கையெழுத்திடப்பட்டு உள்ளது.இதன் மூலம் 5 லட்சம் இளைஞர்களுக்கு நேரடியாகவும் 5 லட்சம் இளைஞர்களுக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

திமுக தலைவர் மு க ஸ்டாலின் போல நான் துண்டு சீட்டு கையில் வைத்துக்கொண்டு அதை பார்த்து பேச வில்லை. அம்மா ஆட்சியில் நடந்த சாதனைகளை தான் சொல்லி நான் உங்களிடத்தில் பேசுகிறேன்.

மேலும் மு க ஸ்டாலின் 2019ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது பொய்யான வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்றார். இப்பொழுது கூட நாங்கள் இதை செய்வோம் அதை செய்வோம் என்று வாக்கு சேகரிக்காமல் அம்மாவின் ஆட்சியை கொச்சையாக பேசியும் ஊழல் ஆட்சி என்று குறை சொல்லியும் தான் வாக்கு சேகரித்து கொண்டிருக்கிறார்.

குட்டிக்கரணம் போட்டாலும் அதிமுக ஆட்சிக்கு வரமுடியாது என்று ஸ்டாலின் கூறுகிறார் . குட்டி கரணம் யார் பாடுவார் என்று உங்களுக்கு தெரியும் குட்டி கரணத்திற்கும் மக்களிடத்தில் வாக்கு சேகரித்து வெற்றி பெறுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அவர்கள் ஆட்சியில் இருந்த போது மக்களை நேரடியாக சந்திக்காமல் இப்பொழுது மரத்தடியில் ஜமுக்காளத்தை விரித்து கொண்டு அதன்மேல் உட்கார்ந்து கொண்டு மக்களிடத்தில் குறை கேட்கிறேன் என்று நாடகமாடுகிறார்.

நான் கொரோனா காலத்தில் 32 மாவட்டங்களுக்கும் சென்று நேரடியாக சென்று மக்களை சந்தித்து அதிகாரிகளை சந்தித்து சிறப்பாக பணியாற்றினேன்.
மேலும் கொரோனா காலத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர் களையும் அழைத்து சுகாதாரத்துறை மூலம் கொரோனா கட்டுப்பாடு குறித்து ஆய்வு செய்து தமிழகத்தில் கொரோனாவை கட்டுப் படுத்தினேன்.

பாரத பிரதமர் மோடி அவர்கள் காணொலி காட்சி மூலம் அனைத்து முதலமைச்சரையும் அழைத்து பேசுகையில் தமிழகத்தில் எப்படி கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கைஎடுத்தார்களோ அதேபோல நீங்கள் அனைவரும் நடவடிக்கை எடுத்தால் உங்கள் மாநிலத்தையும் கொரோனா இல்லாத மாநிலமாக மாற்ற முடியும் என்று கூறினார்.

மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு தமிழகம் இருளில் மூழ்கும்.

மேலும் அதிகப்படியான மின்சாரத்தை நாமே உற்பத்தி செய்து மிதமிஞ்சிய மின்சாரத்தை மற்ற மாநிலங்களுக்கும் கொடுத்து வருகிறோம்.

திமுக தலைவர் மு க ஸ்டாலின் திமுகவை பற்றி பேசுவதை விட்டுவிட்டு அம்மா ஆட்சியை குறை சொல்லி நாங்கள் செய்கின்ற பணிகளை குறை கூறுகிறார். நாங்கள் அதைப் பற்றி கவலைப்படாமல் எங்கள் பணிகளை செய்து கொண்டிருப்போம். இவ்வாறு முதல்வர் பிரசாரம் செய்தார்.

முன்னதாக, முதலமைச்சர், காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்திற்குச் சென்று மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு, அங்கு அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியையும் பார்வையிட்டார்.