Mon. Nov 25th, 2024

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என டெல்லியில் 56 வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் மத்திய அரசு இடையே இன்று 10-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் வேளாண் சட்டங்களை முற்றிலும் திரும்பப்பெற வேண்டும் என விவசாய சங்கங்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், வேளாண் சட்டங்களை அமல்படுத்தாமல் 6 மாதம் முதல் ஒரு வருடம் வரையும் அதிகபட்சமாக 18 மாதங்கள் வரையும் நிறுத்தி வைக்க தயாராக உள்ளதாக மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் யோசனை தெரிவித்துள்ளார். மேலும், விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஒரு குழு அமைக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

மத்திய அரசின் யோசனையை ஏற்று, போராட்டத்தை கைவிடுவது குறித்து விவசாயிகள் இன்றே முடிவு எடுக்க வேண்டும் என அமைச்சர் தோமர் கேட்டுக் கொண்டார். ஆனால், மத்திய மந்திரியின் யோசனை குறித்து விவசாயிகள் தற்போதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இதனால், 10-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வரும் 22 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.