Thu. May 2nd, 2024

குட்கா முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்ட 30 பேருக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் தமிழகத்தில் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத்தொடர்ந்து, 2018 ல் இதுதொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது. இதில், அமைச்சர்களுக்கும், மத்திய மாநில அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், சென்னை 8வது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

சிபிஐ-யை தொடர்ந்து அமலாக்கத் துறையும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் 2018ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணையை முடுக்கிவிட்டது. அடுத்த கட்டமாக இந்த வழக்கிற்கான குற்றப்பத்திரிக்கையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி செல்வக்குமார் முன்னிலையில் அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ளது.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, கிடங்கு உரிமையாளர் மாதவ ராவ், உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில்முருகன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார், கலால் வரித்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், கிடங்கு உரிமையாளர் உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ், ஆந்திராவை சேர்ந்த அருணா குமாரி, சூரிய புஷ்பாஞ்சலி உள்ளிட்ட 27 பேருக்கு எதிராகவும், 3 நிறுவனங்களுக்கு எதிராகவும் ஆதாரங்கள் இருப்பதாக அமலாக்கத்துறை சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களை ஆராய்ந்து வரும் நீதிபதி, முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, மத்திய மாநில அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 30 பேருக்கும் அனைவருக்கும் விரைவில் சம்மன் அனுப்ப உத்தரவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.