Thu. May 2nd, 2024

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அ.தி.மு.க.வை உருவாக்கிய எம்.ஜி.ஆர். வழியில் நின்று அ.தி.மு.க.வை மகத்தான ஒரு அரசியல் கட்சியாக கட்டமைத்தார். திராவிட இயக்கத்தின் பிதாமகன்களான தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் திராவிட சிந்தாந்தத்திற்கு எந்தவொரு பங்கமும் வராத வகையில், தென்னகத்தில், ஏன் இந்தியாவில் தனித்துவம் மிக்க அரசியல் இயக்கமாக, மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாச்சி என்ற தத்துவத்தை எவ்வளவு நெருக்கடிகள் வந்தபோதும் விட்டுக் கொடுக்கவில்லை. தனக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு, ஆட்சியை பறிக்கும், ஆயுளையும் முறிக்கும் என்ற நிலையிலும் கூட, தனித்த சிங்கமாக மத்திய அரசுக்கு எதிராக கர்ஜனை புரிந்து, தனித்துவமிக்க தலைவராக வாழ்ந்து மறைந்தவர் செல்வி ஜெயலலிதா.

அவருக்கு எதிராக ஆயிரமாயிரம் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதும், மத்திய அரசுக்கோ, தேசிய கட்சிக்கோ ஒருநிமிடம் கூட அவர் பயந்தது கிடையாது என்பதுதான், அவரது வரலாறு.. அவரது தனிப்பட்ட வாழ்க்கையையும், அரசியல் வாழ்க்கையையும் கூட விமர்ச்சிப்பவர்கள், அவரின் ஆளுமையை ஒருபோதும் குறை கூறியது கிடையாது. சொல்லப்போனால், எந்தவொரு மாபெரும் சக்திக்குக் கூட அவர் தலைவணங்கியது கிடையாது. வடமாநிலங்களில் சக்திமிக்க தலைவர்களாக இருந்தவர்களைக் கூட தனது போயஸ் கார்டன் இல்லத்தை தேடி வர வழைத்ததுதான் மூலம் செல்வி ஜெயலலிதாவின் செல்வாக்கு, இந்தியா முழுவதும் பேசு பொருளாக மாறியது.
இன்னும் சொல்லப்போனால், தனது நண்பராக இருந்த தற்போதைய பிரதமர் மோடியை, கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலிலேயே கடுமையாக எதிர்த்து, மோடியா, இந்த லேடியா என்ற கேள்வியை முன்வைத்து தனது ஆளுமையை நிரூபித்தவர்.
இப்படிபட்ட தலைவரின் வழியில் வந்தவர்கள், இன்றைக்கு ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் கூட, மத்திய அரசு ஆட்டி வைப்பதற்கு எல்லாம், ஆடரா..ராமா..ஆடரா.. ராமா என்ற கதையாக தன்மானம் இல்லாதவர்களாக இருப்பதை பார்த்து, அடிமட்ட அ.தி.மு.க. தொண்டர்கள் நொந்து போய்வுள்ளனர். பணத்தை மட்டுமே பிரதானமாக நினைத்துக் கொண்டிருக்கும் இன்றைய ஆட்சியாளர்கள், பணத்தை வைத்தே, தேர்தலில் வெற்றிப் பெற்று விட முடியும். கூட்டணியை மட்டுமல்ல, வாக்காளர்களுக்கும் பணம் கொடுத்தே, மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட முடியும் என்று நினைத்து செயல்பட்டுக் கொண்டிருப்பதால், அடிமட்ட அளவில் உயிரோட்டம் இல்லாத கட்சியாக அ.தி.மு.க. மாறியிருக்கிறது. இந்த நிலையைப் பார்த்து, மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் உண்மையான விசுவாசிகளை ரத்தக் கண்ணீர் வடித்து வருகின்றனர் என்பதுதான் கள யதார்த்தம்.

இப்படிபட்ட நேரத்திற்காக காத்திருந்த டி.டி.வி.தினகரன், தற்போதைய நிலையில், கோமா நிலையில் உள்ள அ.தி.மு.க.வை காப்பாற்ற வேண்டும் என்று களத்தில் குதித்திருக்கிறார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவோடு, 30 ஆண்டுகளுக்கு மேலாக நிழலாக வாழ்ந்த அவரது சகோதரி போன்றவரான சசிகலாவை, கடந்த 2016 ஆம் ஆண்டு இறுதியில், ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றுவதற்காக களத்தில் இறங்கிய சசிகலாவை, நம்ப வைத்து கழுத்தறுத்து சிறையில் தள்ளியது டெல்லி சக்தி. சிறையில் இருந்து மீண்டு வந்து அந்த சக்தியை பழிவாங்குவேன் என்று ஜெயலலிதா சமாதியில் சத்தியம் செய்துவிட்டு சென்ற சசிகலா, அதே மனநிலையில்தான் இன்றும் இருக்கிறாராம். ஆனால், இந்த முறை, எதிரியின் ஆயுதத்தை வைத்தே, அவர்களை பழிவாங்கும் திட்டத்தோடுதான் இருக்கிறாராம். அவரின் மனவோட்டத்திற்கு ஏற்ப, கடந்த பல மாதங்களாக காய் நகர்த்தி வரும் டி.டி.வி.தினகரன், தற்போது தனது மௌனத்தை கலைத்துவிட்டு, தீவிரமாக களத்தில் செயல்பட தொடங்கியுள்ளாராம்.
வரும் சட்டமன்றத் தேர்தலில், மாநில சுயாட்சி கொள்கையை முன்வைக்கும் தி.மு.க.வை மூட்டை கட்டி அனுப்ப, டெல்லி மேலிடம் எடுக்கும் முக்கிய வியூகம்தான், பிளவுபட்டுள்ள அதி.மு.க.வை ஒன்றிணைய வேண்டும் என்பது.

அந்த நோக்கத்தை நிறைவேற்ற டி.டி.வி.தினகரனையையும், சசிகலாவையும் சரிகட்ட எடுத்த முயற்சிகளில் டெல்லி தலைமைக்கு முதற்கட்ட வெற்றியே கிடைத்துள்ளது. டெல்லியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தங்கியிருக்கும் இன்றைய நாளில், டி.டி.வி.தினகரனும் டெல்லியில்தான் முகாமிட்டிருக்கிறார் என்பதிலேயே, அ.தி.மு.க.வை மையமாக வைத்து டெல்லி மேலிடம் ஆடும் திருவிளையாடலை அறிந்து கொள்ளலாம். தேர்தலுக்குப் பிறகும் தான்தான் முதல்வர் என்ற கனவை நனவாக்கிக்கொள்ள டெல்லி மேலிடத்தின் ஆசிர்வாதத்தை பெற சென்ற முதல்வருக்கு, டெல்லி மேலிடம் ஷாக் கொடுத்திருக்கிறது என்பதுதான் டெல்லியில் இருந்து வரும் தகவல். அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க.வை இணைக்க வேண்டும். சசிகலா வழிகாட்டுதலின்பேரில் தேர்தலை சந்திக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற கூட்டுத் தலைமையோடு தேர்தலை சந்தித்து, வெற்றி பெறுவதற்கான வியூகத்தை வகுக்க வேண்டும். தனிமனிதரை முன்வைத்து தேர்தல் பிரசாரம் இருக்கக் கூடாது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்பதுதான் முழக்கமாக இருக்க வேண்டும் என்று அட்வைஸ் மேல் அட்வைஸ் கொடுத்தாராம் உள்துறை அமைச்சர் அமித்ஷா. ஒருமணிநேரத்திற்கு மேலாக அவர் எடுத்த டியூசனைப் பார்த்து வியர்ந்து விட்டதாம் எடப்பாடியாருக்கு.

அமித்ஷாவின் அட்வைஸ் எட்டிக்காயமாக எடப்பாடியாருக்கு இருந்தாலும், டி.டி.வி.தினகரனுக்கு திருநெல்வேலி அல்வா சாப்பிட்ட மாதிரி இருக்கிறதாம். இப்போதைக்கு ஆட்சி நமக்கு தேவையில்லை. இன்றைய அ.தி.மு.க ஆட்சியில் தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் போல பேசுகிறான். ஆளாளுன்கு பண்ணாட்டு செய்வதால், அடிமட்ட தொண்டர்கள் தாய் இல்லாத பிள்ளைப் போல அனாதையாக இருக்கிறார்கள். ஒட்டுமொத்த அ.தி.மு.க.வையும் ஆட்சியையும் இ.பி.எஸ். எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி ஆகிய மூன்று கொங்கு அமைச்சர்கள்தான் ஆட்டிப்படைக்கிறார்கள். இவர்கள் மூவரின் பிடியில் இருந்து ஆட்சியை அகற்றுவதை விட, அ.தி.மு.க.வை கைப்பற்றுவதுதான் முக்கியம். அதற்கு இப்போதைக்கு டெல்லி பா.ஜ.க. ஆடும் ஆடுபுலி ஆட்டம் தான் சரியாக இருக்கும். தற்போதைய அ.தி.மு.க. ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களிடம் உள்ள கோபத்தை எத்தனை ஆயிரம் கோடி பணத்தை கொட்டினாலும் தணிக்க முடியாது. தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க. கட்சி தன்னாலேயே தங்கள் குடும்பத்திடம் வரும். அன்றைக்கு அதன் தலைமை பொறுப்பை ஏற்றவுடன், டெல்லி பா.ஜ.க.வையும், மூவர் கூட்டணியையும் ஓட ஓட விரட்டுவோம் என்ற வைராக்கியத்தோடுதான் டெல்லியில் முகாமிட்டு ராஜதந்திரத்துடன் காய் நகர்த்திக் கொண்டிருக்கிறாராம் டி.டி.வி.தினகரன்.

எத்தனை அவமானப்பட்டாலும் இப்போதைக்கு டெல்லி பா.ஜ.க.வை விட, மூவர் கூட்டணி தான் முக்கியம். உண்ட வீட்டுக்கே துரோகம் இழைத்த இ.பி.எஸ்.ஸின் அரசியல் வாழ்க்கையை அஸ்தமானமாக்குவதுதான் முக்கியம் என்ற வெறியோடுதான் சிறையில் இருந்து வெளியே வருகிறாராம் சசிகலா. பணிவு காட்டி ஏமாற்றியவர்களை அதே பாசாங்கு குணத்தோடு வீழ்த்துவதுதான் சசிகலா எடுக்கப் போகும் புதிய அவதாரம் என்கிறார்கள் அவரது அனுதாபிகள்.