Mon. Nov 25th, 2024

மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 50 நாட்களை கடந்து, தொடர்ந்து நடந்துக் கொண்டிருக்கிறது.

ஏற்கெனவே அறிவித்த படி, தங்கள் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லையென்றால், குடியரசு நாள் விழா அன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. அதன் படி வரும் 26 ஆம் தேதி பிரம்மாண்டமான டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் சங்கங்கள் தயாராகி வருகின்றன. இந்தநிலையில், டெல்லி பேரணிக்கு தடை விதிக்க கோரி, மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்தே மற்றும் நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, வி. ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு மற்றும் விவசாயிகள் சங்கங்களின் வாதங்களை கேட்ட உச்சநீதிமன்றம், விவசாயிகள் பேரணிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமை, டெல்லி காவல்துறைக்கு தான் உள்ளது என்றும் விவசாயிகள் பேரணிக்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.