முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இரண்டு நாள் அரசு முறைப்பயணமாக இன்று நண்பகல் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு இரவு அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தல், அ.தி.மு.க. பா.ஜ.க கூட்டணி விவகாரம், தொகுதி பங்கீடு, முதல் அமைச்சர் வேட்பாளா தேர்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பின் போது முதல்வருடன் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும் உடனிருந்தார்.
இன்று இரவு தமிழ்நாடு விருந்தினர் இல்லத்தில் தங்கியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாளை காலை 11 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது, தமிழகத்தில் நிறைவேற்றப்படவுள்ள வளர்ச்சித் திட்டங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யுமாறு வலியுறுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.