Thu. May 2nd, 2024

சேலம் மாவட்டத்தில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதிக்குட்பட்ட எடப்பாடி அருகே உள்ள குரும்பப்பட்டியில் தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர், அத்தியாவசியப் பொருட்களின் விலை அ.தி.மு.க. ஆட்சியில் கட்டுப்பாட்டில் இல்லை என்று குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் நான் என்றும் எம்.ஜி.ஆரின் படம் வந்தாலே திரையரங்கிற்கு முதல் நாளே, முதல் காட்சிக்கு சென்றுவிடுவேன் என்றும் கூறினார்.
எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற தி.மு.க. கிராம சபைக் கூட்டத்திற்கு பெண்கள் அதிகளவில் திரண்டிருந்தது, சேலம் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
முன்னதாக, தருமபுரி மாவட்டம் கும்மனூரில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், இன்னும் நான்கே மாதத்தில் அ.தி.மு.க. ஆட்சி அகற்றப்பட்டு, தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிடும் என்று உறுதியுடன் கூறினார். முந்தைய தி.மு.க. ஆட்சியில் தான் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் விரைவுப்படுத்தப்பட்டதையும் அவர் நினைவுக்கூர்ந்தார்.
ஏற்கனவே கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டில் 5 முறை ஆட்சியை நடத்தி இருக்கிறார்கள். அப்போதெல்லாம் என்னென்ன வசதிகள், என்னென்ன திட்டங்கள், என்னென்ன சாதனைகள் கிடைத்தது என்பது உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும். அதையெல்லாம் திரும்ப எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதை எல்லாம் நீங்கள் அனுபவித்து இருக்கிறீர்கள். ஆனால் இப்பொழுது இந்த 10 வருடமாக எதைப்பற்றியும் கவலைப்படாமல், ஆட்சியில் எப்படியாவது இருக்கவேண்டும், பதவியில் எப்படியாவது ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும், கொள்ளை அடிக்க வேண்டும், ஊழல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கிறார்கள். ஏன் என்றால் இன்னும் இருக்கப்போவது 4 மாதங்கள் தான். இப்படிப்பட்ட நேரத்தில் இந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தை நாங்கள் கூட்டி இருக்கிறோம் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.