தமிழகத்தைப் போல, புதுச்சேரி மாநிலத்திலும் வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸும், தி.மு.க.வும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அதிக இடங்களை, அதாவது 15 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ், தி.மு.க. ஆதரவோடு ஆட்சியில் அமர்ந்தது. இந்தக் கூட்டணி 5 ஆண்டுகளை நிறைவு செய்யும் வேளையில், இருகட்சிகளியே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, காங்கிரஸை கழற்றிவிட்டு, முன்னாள் முதல்வர் ரெங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க தி.மு.க. ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன.
இந்த நிலையில், புதுச்சேரி தி.மு.க. தேர்தல் பொறுப்பாளராக, பிரபல தொழிலதிபரும், தி.மு.க. எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் நியமிக்கப்பட்டுள்ளார். தி.மு.க தலைமையிலான கூட்டணி, மொத்தமுள்ள 30 தொகுதிகளில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றினால், ஜெகத்ரட்சகன்தான் முதல்வர் என்றும் ஒரு பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கிறது. மத்திய அமைச்சராகிவிட்ட நிலையில், ஒரு மாநிலத்தின் முதல்வர் என்ற அந்தஸ்தை பெறுவதற்காக, ஜெகத்ரட்சகன் எம்.பி., புதுச்சேரி அரசியல் களத்தில் தனது வியூகங்களை செயல்படுத்த தொடங்கிவிட்டார். இந்நிலையில், அவரது தலைமையில் நடைபெற்ற புதுச்சேரி தி.மு.க. தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில், ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இந்தக் கூட்டத்தில் ஆவேசம் பொங்க பேசிய ஜெகத்ரட்சகன் எம்.பி., வரும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் மொத்த இடங்களான 30 தொகுதிகளையும் தி.மு.க. கைப்பற்றும் என்று நம்பிக்கையோடு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், உணர்ச்சிவசப்பட்டு, புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் தி.மு.க. போட்டியிடும்.
போட்டியிட்ட அத்தனை தொகுதிகளிலும் தி.மு.க.வே வெற்றிப் பெறும். ஒரு தொகுதியில் கூட தி.மு.க. தோற்காது. 30 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றிப் பெறவில்லையென்றால், இப்போது நான் நின்றுக் கொண்டு நான் பேசுகிற இந்த மேடையிலேயே தற்கொலை செய்து கொள்வேன் என்று அவர் பொங்கினார். அவரின் ஆவேசமிக்க உரை தி.மு.க. தொண்டர்களிடம் ஒருவித எழுச்சியை ஏற்படுத்தினாலும் கூட, கூட்டத்தில் கலந்துகொண்ட முக்கிய நிர்வாகிகளில் ஒருவர், புதுச்சேரி வாக்காளர்கள் எப்போதுமே காங்கிரஸுக்கு ஆதரவாகதான் வாக்களிப்பார்கள். உணர்ச்சிவசப்பட்டு எம்.பி., ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டார் பாவம் என்று உச்சு கொட்டினார்கள்…