Mon. Nov 25th, 2024

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக டெல்லி சென்றுள்ளார். வெளிப்படையாக இது அரசுமுறைப் பயணம் என்றாலும் கூட, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பயணமாகதான் அ.தி.மு.க. முன்னணி தலைவர்கள் பார்க்கிறார்கள். அ.தி.மு.க. முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்ட பிறகு அவர் டெல்லி செல்வது இதுவே முதல்முறை என்பதால், டெல்லி பா.ஜ.க மேலிடத்திலும் சிறப்பு கவனத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா நடராஜன் வரும் 27 ஆம் தேதி பெங்களூர் சிறையில் இருந்து விடுதலையாவது உறுதியாகியுள்ள நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இரண்டு முறை, டெல்லி பா.ஜ.க. மேலிடத்தின் அழைப்பின் பேரில் சென்ற போதிலும், அதி முக்கியமான ஒரு அம்சத்தில் டெல்லி பா.ஜ.க. மேலிடம் உறுதியாக இருப்பதாக நம்பகமான வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசியவிடப்படுகின்றன. சசிகலா மற்றும் தினகரன் விஷயத்தில் டெல்லிக்கு உள்ள அக்கறை என்னவென்றால், பிளவுப்பட்டிருக்கிற அ.தி.மு.க. மீண்டும் மிகப்பெரிய பலத்துடன் வரும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதுதான் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

டெல்லி பா.ஜ.க.வின் எதிர்பார்ப்பின்படி, அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க. இணைய வேண்டுமென்றால், 4 ஆண்டுகளுக்கு முன்பு சசிகலா சிறைக்கு செல்வதற்கு முன்பாக அ.தி.மு.க. கட்சி எப்படி சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருந்தததோ, அதுபோன்று அவர் விடுதலையாகி வந்த பிறகு, அவரின் கட்டுப்பாட்டில்தான் அ.தி.மு.க. இருக்க வேண்டும் என்ற விருப்பத்தை டி.டி.வி. தினகரன் தரப்பு, டெல்லி பா.ஜ.க. மேலிடத்திடம் முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது. கட்சி எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள். தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிப் பெற்றால், ஆட்சிக்கு உங்கள் விருப்பப்படி யாரை வேண்டுமானாலும் முதல்வராக தேர்வு செய்து அறிவித்துக் கொள்ளுங்கள் என்று டி.டி.வி. தினகரன் தரப்பு, டெல்லி மேலிடத்திடம் தனதுநிலையை தெளிவுப்படுத்திவிட்டது.

டி.டி.வி.தினகரன் மற்றும் சசிகலாவின் எண்ணவோட்டத்தை ஸ்மெல் செய்து கொண்டதால்தான், கடந்த பல நாட்களாக, துணை முதல்வரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், அம்மாவால் (ஜெயலலிதா) ஆசிர்வதிக்கப்பட்ட உண்மையான விசுவாசி, தமிழகத்தை மீட்கும் தகுதியுடைய தலைவர் தான்தான் என்று பொதுமக்களுக்கு, குறிப்பாக அ.தி.மு.க.வினருக்கு உணர்த்தும் வகையில், நாளிதழ்களில் விளம்பரம், வீடியோ என கலக்கி வருகிறார். அவருக்கு ஏற்பட்டிருக்கும் புது தெம்பிற்கு காரணம், தன்னை தான் அ.தி.மு.க. கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக, டெல்லி பா.ஜ.க. மேலிடம் அறிவிக்கும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கைக் கொண்டவராக வலம் வந்துக் கொண்டிருக்கிறார் ஓ.பன்னிர்செல்வம்.

இப்படிபட்ட சூழ்நிலையில்தான், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இன்றைய டெல்லிப் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பொதுதளங்களில் பேசப்படுவதைப் போல, தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கு நிதியுதவி கோருவது தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தவுள்ளார் என்று கூறப்பட்டாலும்கூட, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருடனான சந்திப்பின்போது, சசிகலா, தினகரன் இணைப்பு மற்றும் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து, இருவரும் சில உத்தரவுகளை முதல்வர் இ.பி.எஸ்.ஸிடம் நேரிடையாகவே தெரிவிப்பார்கள் என்று டெல்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

தனது எண்ணப்படி டெல்லிப் பயணம் அமைந்தால், அடுத்தடுத்து அவர் மேற்கொள்ள பிரசாரங்களில் தெம்பாகவே உரையாற்றுவார். அவரின் விருப்பத்திற்கு மாறாக டெல்லிப் பயணமும், சந்திப்புகளும் நடந்தால், அடுத்தடுத்த நாள்களில் அவரின் தேர்தல் பிரசாரத்தில் சுருதி குறைவதை வெளிப்படையாகவே பார்க்க முடியும் என்கிறார்கள் டெல்லியில் உள்ள மூத்த ஊடகவியலார்கள்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்குப் பதிலாக இ.பி.எஸ். அன் கோவிற்கு வலி வந்து விடப் போகிறது என்பதுதான் அவரது ஆதரவாளர்களின் தற்போதைய கவலை..

.