Tue. May 21st, 2024

உலகம் முழுவதும் கடந்தாண்டு மார்ச் இறுதியில் கொரோனோ தொற்று பரவியது.. அதனை கட்டுப்படுத்த இந்தியா உள்பட பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது..அனைத்து வணிக நிறுவனங்கள், பொழுதுபோக்கு மையங்கள் மூடப்பட்ட போதும் நூலகங்களுக்கு விதிவிலக்கு தரப்பட்டது..இத்தாலி,இங்கிலாந்து உள்ளிட்ட பெரும்பான்மையான நாடுகளில் நூலகங்களில் நூலகங்கள் திறக்கப்பட்டு தனிமனித இடைவெளியுடன் வாசகர்கள் கொரோனோ உச்சத்தில் இருந்தபோதும் அனுமதித்தார்கள்.அதற்கு காரணம் அங்கெல்லாம் வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்கள் ஆட்சிப் பீடத்தில் இருந்தார்கள்..

ஆனால், இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் நூலகங்களை திறக்க அனுமதியளித்தது தமிழக அரசு..கொரோனோ தொற்று கண்டறியப்பட்ட கடந்தாண்டு ஏப்ரலில் தமிழகம் முழுவதும் மூடப்பட்ட நூலகங்கள், 7 மாதங்களுக்குப் பிறகு தான் திறக்கப்பட்டன. அதுவும் பகுதிநேரம்தான்..காலை 8 மணியளவில் திறந்து நண்பகல் 2 மணிக்கு மூடப்படுகிறது..

கடந்த மூன்று மாதங்களாக பகுதிநேரம் நூலகங்கள் திறந்து வைக்கப்பட்டாலும் அன்றாட செய்திகளை தாங்கி வரும் தமிழ்,ஆங்கிலம் உள்ளிட்ட நாளிதழ்களை வாசிக்க முடியவில்லை என ஆதங்கப்படுகிறார்கள் வாசிப்பை தவம் போல கடைபிடித்து வரும் முதியோர்கள்..

அதற்கு காரணம்,கடந்த மூன்று மாதங்களாக நாளிதழ்களை நூலகங்களுக்கு அன்றாடம் விநியோகிப்பதையே தமிழக அரசின் நூலகத் துறை நிறுத்தி வைத்திருக்கிறதாம்..இதேபோலதான் பருவ இதழ்களும் நூலகங்களுக்கு விநியோகிக்கப்படுவதில்லையாம்.

நாளிதழ்கள்,பருவ இதழ்கள் நூலகங்களில் வாசிக்க முடியாததால் ஐ,ஏஎஸ் உள்ளிட்ட குடியுரிமை தேர்வுகளுக்கும் குரூப் 2 உள்ளிட்ட தமிழக அரசின் பணிகளுக்கும் தயாராக முடியவில்லை என கண்ணீர் வடிக்கிறார்கள் இளம்தலைமுறையினர்..

இந்த நிலைமை சாதாரண கிளை நூலகம் முதல் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் வரை உள்ளது என்பதுதான் வேதனை.

நாளிதழ்களே வாசிக்க வழியில்லை என்றால் அங்கு பணிபுரியும் நூலகர்களுக்கு என்ன வேலை? வீட்டில் என்ன செய்வார்கள்? சாப்பிட்டு தூங்குவார்கள்..8 மாத பழக்கம் நூலகத்திலும் தொடருகிறது..அவர்களை குற்றம் சொல்ல என்ன இருக்கிறது?

திரையரங்குகளில் நூறு சதவிகிதம் ரசிகர்களை அனுமதிக்கலாம் என ஆணை பிறப்பிக்கிற ஆட்சியாளர்களுக்கு நூலகங்களை முழுநேரம் திறந்து வைக்க வேண்டும், அனைத்து வகையான நாளிதழ்கள்,பருவ இதழ்களையும் வாங்கி வைக்க வேண்டும் என்ற சிந்தனை எழாமல் இருப்பதற்கு என்ன உள்நோக்கம் இருக்கும்?

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?