Tue. May 21st, 2024

தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை கடந்த சில நாள்களாக தூங்கி வழிவதாக, ஊடகத்துறையைச் சேர்ந்த பலர் புகார் தெரிவித்து வருகின்றனர். அதற்கு உதாரணமாக, ஜனவரி 16 காணும் பொங்கலை முன்னிட்டு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வரலாற்று நிகழ்வோடு தொடர்புடைய இரண்டு முக்கிய நிகழ்வுகளில் இன்று கலந்துகொண்டு தொடங்கி வைத்ததை எடுத்துக்காட்டுகின்றனர்.

ஜனவரி 16 (இன்று )காலையில், மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டியை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில், கொரோனோ தொற்று தடுப்பூசி முகாமையை தொடங்கி வைத்து செய்தியாளர்களுக்கு முதலமைச்சர் பேட்டியும் அளித்தார்.

இந்த மூன்று நிகழ்வுகளின் புகைப்படங்களை ஊடகங்களுக்கு அனுப்பி வைக்காமல் செய்தி மக்கள் தொடர்புத்துறை அலட்சியம் காட்டியதாக, ஊடகத்துறையைச் சேர்ந்தவர்கள் புகார் தெரிவித்தனர். ஏறத்தாழ இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்று ஒருமணிநேரத்திற்கு மேலாகியும், செய்தி மக்கள் தொடர்புத்துறை வழக்கமாக, அச்சு ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கும் மெயிலில் புகைப்படங்களோ, நிகழ்வுகளைப் பற்றிய செய்தி குறிப்போ அனுப்பி வைக்கப்படவில்லை என்பதுதான் ஊடகவியலாளர்களின் முக்கியமான குற்றச்சாட்டாகும்..

நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்திலேயே புகைப்படமாகவோ, ஒளிப்பதிவாகவோ உடனுக்குடன் அனுப்பி வைக்கும் வகையில் இன்றைக்கு நவீன வசதிகள் ஏராளமாக உள்ளன. ஆன்ட்ராய்டு செல்போன் மூலமாக கூட புகைப்படங்களை விரைந்து அனுப்பிவிட முடியும். ஆனால், முக்கியமான நிகழ்வுகளின் புகைப்படங்களைக் கூட செய்தி மக்கள் தொடர்புத்துறை இன்று அனுப்பி வைக்காமல் அலட்சியமாக இருந்தது, அ.தி.மு.க. முன்னணி தலைவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.