ராமநாதபுரம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான டாக்டர் மணிகண்டன் வீடு, ராமநாதபுரம் வண்டிக்காரத் தெருவில் உள்ளது. கடந்த சில நாள்களாக தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக, அந்தப் பகுதியில் மழை நீர் ஓடியது. அதில், கழிவு நீரும் கலந்ததால், அவரின் தெருவில் கழிவு நீர் தேங்கியது. இதனை அகற்ற கோரி, நகராட்சி நிர்வாகத்திடம் டாக்டர் மணிகண்டனின் ஆதரவாளர்கள் கேட்டுக் கொண்டனர். ஆனாலும், கழிவுநீரை அகற்ற நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், அதிருப்தியடைந்த மணிகண்டன் எம்.எல்.ஏ., தனது வீட்டு முன்பு இருந்த திண்ணையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவல்அறிந்து அவரது ஆதரவாளர்கள் அங்கு திரண்டனர். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த ராமநாதபுரம் நகராட்சி நிர்வாகிகள், கழிவு நீரை துரிதமாக அப்புறப்படுத்தினர். எம்.எல்.ஏ. வீட்டு முன்பு தேங்கியிருந்த கழிவு நீரை துரிதமாக அகற்றியதைப் போல, ராமநாதபுரம் நகர் முழுவதும் தேங்கியிருக்கும் மழை நீரை நகராட்சி நிர்வாகிகள் அகற்றுவார்களா ? என்று நகர மக்கள் கேள்வி எழுப்பினர்.
v