தமிழ் மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும், மறைந்த ஜி.கே. மூப்பனாரின் நெருங்கிய தோழரும், மற்றும் ஜி. கே. வாசனின் அரசியல் வழிகாட்டியாகவும் திகழ்ந்த வழக்கறிஞர் ஞானதேசிகன் மாரடைப்பு காரணமாக பிற்பகலில் காலமானார். அவரின் மறைவுக்கு தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தி:
ஞானதேசிகன் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். யாருடைய மனமும் புண்படாமல் பேசும் சிறந்த பண்பாளர் இயக்கங்களின் எல்லைகளைத் தாண்டி நட்பு பாராட்டியவர் தற்போது இல்லை என்பது வருத்தமளிக்கிறது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: தமாகா துணைத்தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனைக்குள்ளானேன். இந்திய, தமிழக அரசியலில் பெரும்பங்காற்றிய அவர் நம் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்றவர்/.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், மாநிலங்களவை காங்கிரஸ் முன்னாள் உறுப்பினருமான பி.எஸ்.ஞானதேசிகன் மறைவு செய்தியால் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன் . இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி ஆகியோரின் நம்பிக்கையை பெற்றவர். பழகுவதற்கு இனிய பண்பாளர். தம் வாழ்நாள் முழுவதும் தேசியவாதியாக வாழ்ந்து மறைந்த ஞானதேசிகன் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
தமிழக அரசியலில் அனைத்துக் கட்சியினரிடமும் நட்பு பாராட்டியவர் ஞானதேசிகன் என்று ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அரசியலில் பதவிக்கு ஆசைப்படாதவர். கட்சித் தலைமைக்கு விசுவாசமாக இருப்பது எப்படி? என்பதற்கு சிறந்த முன்னுதாரனமாக திகழ்ந்தவர் என்று ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்
த.மா.கா. கட்சியின் மூத்த தலைவர் ஞானதேசிகன் மறைவுக்கு டி.டி.வி.தினகரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். பி.எஸ்.ஞானதேசிகன் காலமானார் என்ற செய்தி அறிந்தது வருத்தமடைந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.