சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவ தளபதியாக, ஜெனரல் கே.எம்.கரியப்பா 1949 ஆம் ஆண்டு ஜனவரி 15ம் தேதிய பொறுப்பேற்றார். அந்த தினத்தை நினைவுக் கூறும் விதமாக ஆண்டுதோறும் ஜனவரி 15 ஆம் தேதியை இந்திய ராணுவ தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ராணுவ வீரர்கள் மற்றும் போரில் உயிர்நீத்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தப்படுவது மரபாக இருந்து வருகிறது.
அதன்படி, டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில், முப்படையைச் சேர்ந்த தளபதிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இந்த தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளனர்.
பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், ‘நமது ராணுவம் வலிமையானது, தைரியமானது மற்றும் உறுதியானது. நமது ராணுவம் எப்போதும் நாட்டை பெருமைப்படுத்துகிறது. நாட்டு மக்கள் அனைவரின் சார்பிலும் இந்திய ராணுவத்திற்கு வணக்கம் செலுத்துகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.