Wed. May 1st, 2024

பொருந்தாக் கூட்டணி… சுய ஆதாயத்திற்காக பாசாங்கு காட்டும் பரிதாபம்..

முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் அடுத்த முதல்வர் என்று அ.தி.மு.க. அறிவித்த நாளில் இருந்தே, அவர் மீது காட்டி வந்த பரிதாப் பார்வையை நீக்கிவிட்டு அக்னிப் பார்வையை வீச தொடங்கிவிட்டது, மத்தியில் உள்ள பா.ஜ.க. ஆடசி என்பதுதான் தமிழக அரசியலை உற்றுநோக்கும் அரசியல் கள ஆய்வாளர்களின் கணிப்பு.

அதுவும், பா.ஜ.க.வுக்குதான் அ.தி.மு.க. கூட்டணி அவசியம் என்ற கட்டாயச் சூழல் நிலவும் நிலையில், பா.ஜ.க. வை கூட்டணியில் சேர்க்காமல், அ.தி.மு.க. இதர கட்சிகளோடு தேர்தலைச் சந்தித்தால், தி.மு.க.வை விரும்பாத மக்கள் கூட அ.தி.மு.க.வுக்கு ஓட்டளிக்க முன் வருவார்கள் என்பதுதான் தமிழகத்தின் இன்றைய யதார்த்தம். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தை தவிர அக்கட்சியில் ஒருவர் கூட பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பதை விரும்பவில்லை. பா.ஜ.க.வை வேப்பங்காயாகதான் பார்க்கிறார்கள். பா.ஜ.க.மீது கடும் கோபத்தில் இருக்கும் ஒட்டுமொத்த அ.தி.மு.க.வும் இருக்கும் சூழ்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் மற்ற அமைச்சர்களும், பா.ஜ.க.வுக்கு ஏன் பயப்படுகிறார்கள் என்பதற்கு இரண்டு நிகழ்வுகள் மூலம் உண்மையை எடுத்து முன் வைக்கிறார்கள் அ.தி.மு.க.வில் உள்ள மூத்த தலைவர்கள்.

இந்த நிமிடம் வரை, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது நீடித்த கூட்டணியே அ.தி.மு.க.வுடன் நீடிக்கிறது என்று திரும்ப திரும்ப சொல்லி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. பா.ம.க. தவிரை மற்ற தே.மு.தி.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள், அ.தி.மு.க.வுக்கு எதிராகவும், ஆளும்கட்சிக்கு எதிராகவும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கவில்லை. இந்தநேரத்தில், இரண்டு நிகழ்வுகளை நாம் ஆராய்ந்துப் பார்த்தால், தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்ற உண்மையான லட்சியத்தோடு, அ.தி.மு.க.வை இதர கட்சிகள் ஆதரிக்கின்றனவா/ என்பதற்கு விடை கிடைத்துவிடும்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நவம்பர் மாதம் 21 ஆம் தேதி சென்னை வந்தார். தமிழக அரசின் அழைப்பின் பேரில் தான் அவர் சென்னை வந்தார் என்றாலும் கூட அவருக்கு அ.தி.மு.க. அளித்த தடபுடலான வரவேற்பு, சென்னை விமான நிலையத்தில் இருந்து அவர் தங்கியிருந்த ஹோட்டல் அமைந்திருந்த பகுதி வரை ஆயிரக்கணக்கான போலீஸாரை நிறுத்தி அளித்த பகட்டான பாதுகாப்பு அளப்பறை அத்தனையும் இதுவரை தமிழகம் கண்டிராத நிகழ்வு.. அமித்ஷாவை கண்டால் தொடை நடுங்கிப் போல, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு பயந்தது ஏன்? ரெம்ப சிம்பிள்.. மடியில் கணம் இருந்தால் வழியில் பயம் இருக்கும் என்பதால்தான்.

அமித்ஷா கலந்துகொண்ட அரசு விழாவில், ஓ.பி.எஸ்.ஸும் எடப்பாடியும் முந்திரிக்கொட்டைப் போல, பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து அ.தி.மு.க. தேர்தலைச் சந்திக்கும் என்று சபதம் செய்தார்கள். ஆனால், அதைப் பற்றி அமித்ஷா ஒரு வார்த்தைக் கூட சொல்லவில்லை. அதன்பிறகு அமித்ஷா தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்று பலமணிநேரம் காத்திருந்து அவரை இ.பி.எஸ்.ஸும், ஓ.பி.எஸ்.ஸும் சந்தித்துப் பேசினார்கள் என்ற தகவலும் வெளியானது. இப்படி அமித்ஷாவுக்கு கண்டு பயந்த இருவரும், அகில இந்திய பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா, சென்னைக்கு நேற்று வந்தபோது, அதுவும் குறிப்பாக பொங்கல் நாளில் வந்தபோது, சென்னையிலேயே மாலை வரை இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ, அவரது அமைச்சர் சகாக்களோ நேரில் சென்று மரியாதை நிமித்தமாக பார்க்கவில்லை என்பதுதான் ஆயிரமாயிரம் சந்தேகக் கேள்விகளை எழுப்புகிறது.

பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க தயாராகிவிட்ட அ.தி.மு.க., டெல்லியில் இருந்து சென்னை வந்த அகில இந்திய பா.ஜ.க. தலைவரை சந்திக்காமல் புறக்கணித்ததில் உள்ள மர்மம் என்ன? முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்.. உள்பட அ.தி.மு.க.வில் உள்ள அனைவருக்கும் தெரியும், ஜே.பி.நட்டாவால் ஒரு லாபமும் நமக்கு கிடையாது என்பதுதான். இப்படி இரண்டு கட்சிகளுமே தங்களின் சுயலாபத்திற்காகதான் பொருந்தாத கூட்டணியில் இணைந்திருக்கிறார்கள். அதற்கு வேறு வெளிப்படையான உதாரணமே தேவையில்லை என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

துக்ளக் விழா மேடையில், ஆடிட்டர் குருமூர்த்தியின் பேச்சு, அ.தி.மு.க.வின் தற்போதைய பரிதாப நிலை பற்றி அதிகமாகவே எதிரொலித்தது. ஜே.பி.நட்டாவோ, பொத்தாம் பொதுவாவே அ.தி.மு.க. ஆட்சியைப் பற்றி பேசி விட்டுச் சென்றது.

அதே நாளில், காங்கிரஸும் தி.மு.க. வுக்கும் இடையே உள்ள பரஸ்பர நல்லிணக்கத்தை எடுத்துக்காட்டும் வகையில், மதுரை மாவட்டம் அவணியாபுரத்தில் நடந்த நிகழ்வை சுட்டிக்காட்டுகிறார்கள், ஆழ்ந்த அரசியல் கள அனுபவம் கொண்ட ஆய்வாளர்கள். ஜல்லிக்கட்டுப் போட்டியை ஒருபக்க மேடையில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி. அதே பகுதியில் ஒருபக்கம் நின்றுக் கொண்டிருந்தார் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். அவரைப் பற்றி ராகுல்காந்தியிடம் தகவல் தெரிவிக்கப்படுகிறது. உடனே அவரை தனது அருகே அழைத்து வரச் சொல்கிறார் ராகுல்காந்தி. அந்த நேரத்தில் , போட்டி அறிவிப்பாளர்களும், ஒலிபெருக்கியில், உதயநிதி ஸ்டாலினை ராகுல்காந்தி அமர்ந்திருக்கும் மேடைக்கு வருமாறும், அவரை அழைத்து வரும்படியும் உரக்க கூறுகிறார். தன்னைவிட வயதில் இளையவர் என்று ஈகோ பார்க்காமல், இயல்பாக உரையாடுகிறார் ராகுல்காந்தி. உதயநிதியும் தன்னருகில் இருப்பவர், அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவரின் மகன் என்ற நினைப்பே இல்லாமல் ஒரு நண்பரோடு பேசுவதைப் போல உரையாடுகிறார். மிகமிக இயல்பான இந்த உரையாடல் நடக்கும் சூழலுக்கு என்ன காரணம், ஒருவரைக் கண்டு மற்றொருவருக்கு பயம் இல்லை என்பதால்தான்.

இப்படி இருவருக்கும் இடையே உள்ள உணர்வை பொதுமக்களும் அறிந்திருப்பதால்தான், தி.மு.க.வும், காங்கிரஸும் இணைந்தே இருக்க வேண்டும் என்பது பொதுமக்களின் பார்வையாகவும் இருப்பதில் வியப்பு இல்லை என்கிறார்கள் மூத்த ஊடகவியலாளர்கள்.

இந்த இரு கூட்டணிக்களுக்கு இடையே நிலவும் பரஸ்பர சிந்தனை, எதைப் பற்றியது என்பதை தமிழக வாக்காளர்களும் புரிந்து கொண்டுதானே இருப்பார்கள்… சட்டமன்றத் தேர்தலின் முடிவு, என்ன சொல்லப் போகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்…