சாதாரண கட்சி நிர்வாகி கூட முதலமைச்சர் பதவிக்கு வரும் அளவுக்கு ஜனநாயக கட்சியாக இருப்பது அதிமுக என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் பிரசாரத்தின் போது மட்டும் ஒரு லட்சம் முறை கூறியிருப்பார். அதற்கடுத்து அவர் அதிகமாக பயன்படுத்திய பஞ்ச் டயலாக், விவசாயி ஆக இருப்பது கேவலமா? என்பதுதான். உண்மையான விவசாயின் குணம், தன்நலம் கருதாமல் பிறருக்காக வாழ்வதுதான் என்பதை தமிழ் மண், பல்லாயிரக்கணக்கான நிகழ்வுகள் மூலம் நிரூபித்துக் கொண்டே வருகிறது.
தனது குடும்பம் பட்டினியாக கிடக்க நேரிடும் என்ற சூழ்நிலையிலும் யாசகம் கேட்டு வீடு தேடி வந்தால், விதை நெல்லைக் கூட தூக்கி கொடுத்த விவசாயிகளை தமிழகம் பார்த்திருக்கிறது. தூக்கி கொடுக்கும், தூக்கி கொடுப்பதற்கும் தயாராக இருக்கும் விவசாயிகளுக்கும் பஞ்சமில்லை. பிறரின் வியர்வைக்கு ஒருபோதும் உண்மையான விவசாயி விலை பேச மாட்டான். ஆனால், விவசாயி ஆக வேடம் தரிப்பவர்கள், அடுத்தவர்களின் வியர்வையை முதலீடாக வைத்து தனி மனித வாழ்விலும், அரசியல் வாழ்விலும் உச்சத்தை தொட்டிருக்கிறார்கள் என்பதற்கு, இன்றைக்கு வேறு எங்கும் உதாரணம் தேட தேவையில்லை, வெற்றி நடை போடும் தமிழகத்தின் தலைமகனான எடப்பாடி பழனிசாமியையே எடுத்துக் கொள்ளலாம்.
விவசாயி ஆட்சியில் கடந்த நான்காண்டுகளில் நடைபெற்ற ஊழல்கள், முறைகேடுகளைப் பற்றி, அறப்போர் இயக்கம் அதிர்ச்சியளிக்கும் விதமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்த போதும், அமைச்சர்கள் பலருக்கு எதிராக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில் எண்ணற்ற புகார்கள் நிலுவையில் இருப்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் ஊடகங்களிலேயே சந்தி சிரித்திக்கிறது.
ஆட்சியாளர்களின் முறைகேடுகளை அறத்தோடு மக்களுக்கு கொண்டு செல்லும் பணியை மேற்கொள்ள வேண்டிய ஊடகவியலாளர்களில் பாதிப் பேர், மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியே அமையும், அமைய வேண்டும் என்று தங்களின் அபிலாஷைகளை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காகவே இந்த பதிவு…
தமிழகத்தில் திமுக.வோ, அதிமுக.வோ எந்தக் கட்சியின் ஆட்சி அமைந்தாலும், அந்த ஆட்சியின் சாதனைகளை, திட்டங்களை மக்களிடம் கொண்டும் செல்லும் பணியை மேற்கொள்வது, செய்தி மக்கள் தொடர்புத் துறைதான். அந்தத் துறையில் கீழ்நிலை அதிகாரியாக இருப்பவர், உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர். அந்த பதவிக்கான நியமனங்கள் நேரடியாகவே நடைபெறும்.
பெரும்பாலும், எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறதோ, அந்த கட்சியைச் சேர்ந்த குடும்ப வாரிசுகளுக்கு பதவி வழங்கப்படுவது வழக்கம். கடந்த காலங்களில் முதல்வரின் நேரடிப் பார்வைக்கு சென்று பணிநியமனங்கள் வழங்கப்பட்டு வந்திருக்கின்றன. செய்தி மக்கள் தொடர்புத்துறைக்கென்று தனியாக ஒரு அமைச்சர் இருந்தாலும் கூட, கட்சி நிர்வாகிகளின் வாரிசுகளுக்கான நேரடி நியமனம் என்பதால், கடந்த காலங்களில் நடைபெற்ற நியமனங்களின் போது, அப்போது முதல்வராக இருந்தவர்களே, இந்த நியமனங்களில் தனிக்கவனம் செலுத்தி இருக்கிறார்கள்..
2017 ல் முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி, இரண்டு ஆண்டுகளை கடப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டதால், உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நியமனம் பற்றி யோசிக்கக் கூட இல்லை. 2019 ஆம் ஆண்டில் முதல்வர் பதவிக்கு தொந்தரவு இல்லை என்பதை உணர்ந்துக் கொண்டதையடுத்து, விஸ்வரூபம் காட்ட தொடங்கினார். அவரின் வசம் இருந்த இரண்டு துறைகளின் ஒப்பந்தங்கள் அனைத்தும் அவரது உறவினர்களுக்கே வழங்குகிறார் என்ற குற்றச்சாட்டை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் சொன்னார். ஊழலுக்கு எதிரான இயக்கங்களும் குற்றம் சாட்டின. இதுதொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்திலும் நிலுவையில் இருக்கிறது.
2016 முதல் 2020 வரை செய்தித் துறையில் ஏற்பட்ட காலி பணியிடங்களில் புதியவர்களை நியமிப்பது தொடர்பாக, அந்த துறையின் அமைச்சர் கடம்பூர் ராஜு தீர்மானித்தார். அப்போதே 30 உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் நியமிக்கப் போகிறார்கள் என்ற தகவல், அதிமுக முன்னணி நிர்வாகிகளிடம் பரவியது.
அவரவர் தங்கள் மகன் அல்லது மகளுக்கு பதவி கேட்டு அமைச்சரை தொடர்பு கொண்டார்கள். ஒரு பணி நியமனத்திற்கு 30 லட்சம் ரூபாய் என்று விலை சொல்லப்பட்டது. அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தாலும் கூட எப்படியாவது அரசு வேலை கிடைத்தால் பரவாயில்லை என்று வீட்டை, விவசாய நிலத்தை அடகு வைத்து பணத்தை திரட்டினார்கள் அதிமுக முன்னணி நிர்வாகிகள்.
உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கூடவே முன்பணமாக (அட்வான்ஸ்) 10 லட்சம், 15 லட்சம் என கைமாறியது. அதிமுக.வை தொடங்கிய எம்.ஜி.ஆர்.காலத்தில் இருந்து பேச்சாளராகவும், பின்னர் ஊடகவியலாளராகவும் மாறியவர், தனது புதல்விக்கு உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பணியை பெற்றுத் தருவதற்காக அமைச்சர் ஒருவரை தொடர்பு கொண்டிருக்கிறார். 30 லட்சம் ரூபாயுடன் வாருங்கள். பணி நியமனம் உறுதி என்று கூறியதைக் கேட்டு மயக்கம் போட்டு விழாத நிலைக்குச் சென்றுவிட்டார், அந்த மூத்த ஊடகவியலாளர்.
அதிமுக.வில் பணிவு என்று சொன்னால் எப்படி, நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை அடையாளம் காட்டுவார்களோ அதுபோல, தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பணிவு என்று சொன்னால், எல்லோரும் அந்த மூத்த ஊடகவியலாளரை நோக்கிதான் கையை நீட்டுவார்கள். அவர் எம்.ஜி.ஆரோடு பயணித்த காலத்தில் எல்லாம், இன்றைக்கு அமைச்சர்களாக இருக்கும் பலர், அதிமுக.வில் சாதாரண பொறுப்பில் கூட இருந்ததில்லை.
அப்படிபட்டவரை நோகடித்த அந்த அதிமுக முக்கிய பிரமுகரின் அறையில் இருந்த வேறொரு நிர்வாகி, சோகமாக திரும்பிய அந்த மூத்த செய்தியாளர் மீது பரிதாபப்பட்டு, நான்கு ஐந்து பேரிடம் சொல்லிய தகவல்தான் இது. இன்னொரு ஊடகவியலாளரும், தனது மகனுக்காக 10 லட்சம் ரூபாய் பணம் கொடுத்திருக்கிறார். அதுவும், மதுரையில் உள்ள ஒரு அமைச்சர் மூலம் பணம் கைமாறியிருக்கிறது. கொரோனோ தொற்று பரவலால், 2020ல் பணிநியமனம் நடைபெறவில்லை. கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பணிநியமனம் நடைபெறும் என்று சொல்லியிருந்த போதும், முதல்வர் அலுவலகத்தில் உள்ள ஒரு அதிகாரி, இந்த பணிநியமனங்களில் ஆர்வம் காட்டாததால், தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை பணி நியமனங்கள் நடைபெறவே இல்லை.
அதிமுக.வையும், பாஜக.வையும் விழுந்து விழுந்து ஆதரித்த அந்த ஊடகவியலாளர், வாக்குப்பதிவுக்கு பிறகு அதிமுக.வுக்கு எதிராக வரும் தகவல்களை கேட்டு மிகுந்த கவலையில் உள்ளார்.
ஒருவேளை அதிமுக, ஆட்சி அமைக்காவிட்டால், பணி நியமனத்திற்காக கொடுத்த 10 லட்ச ரூபாய் திரும்பி வருமா? என்று நாள்தோறும் புலம்பி வருகிறார். கட்சிக்காக உண்மையாக உழைக்கும் விசுவாசிகளின் வாரிசுகளுக்காக உருவாக்கப்பட்ட நேரடி நியமன பதவியான உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்களையே விலை பேசி விற்கும் இன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிதான் மீண்டும் அமைய வேண்டும் என்று துடிதுடியாய் துடிக்கிறார்கள் ஊடகவியலாளர்கள்.
அனுபவிக்கட்டும்….