Sun. Nov 24th, 2024

வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல், தி.மு.க.வுக்கு வாழ்வா, சாவா போராட்டமாக அமைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாததால், அடிமட்ட தொண்டர்கள், கிராமம் மற்றும் சிறுசிறு நகரங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு முறை தோல்வியை சந்தித்த பிறகும், ஆளும்கட்சியான அ.தி.மு.க.வுக்கு எதிராக அறிவித்த அத்தனைப் போராட்டங்களிலும் பங்கேற்றும், அதற்காக தங்கள் பொருளாதார நிலையை மிஞ்சி செலவு செய்ததாலும், அடிமட்டத்தில் தி.மு.க. தொண்டர்கள் மிகவும் சோர்வுடன் இருக்கிறார்கள். வரும் தேர்தலில் தி.மு.க. வெற் பக்கம் காற்று வீசுகிறது என்று பரவலாக பொதுமக்களிடம் பேச்சு எழுந்துள்ளதை அறிந்து தி.மு.க. அடிமட்ட தொண்டர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். அதேநேரம், கூட்டணி பலத்தை தக்க வைத்துக் கொள்வது மற்றும் வேட்பாளர்கள் தேர்வில் மிகுந்த கவனமுடன் தலைமை இருக்க வேண்டும் என உண்மையான தி.மு.க. விசுவாசிகள், ஆயிரக்கணக்கான கடிதங்கள் மூலம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இப்படி, மூலை முடுக்கில் இருந்தெலலாம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வசிக்கும் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு நாள்தோறும் வரும் கடிதங்களில், பெரும்பான்மையாக ஒரு அம்சத்தை அனைத்து உடன்பிறப்புகளும் சுட்டிக்கட்டியுள்ளதை, மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு அவரது ஆழ்மான நம்பிக்கைக்குரியவர்கள் கொண்டு சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தி.மு.க. தொண்டர்கள் பெரும்பான்மையாக வலியுறுத்திய விஷயம், அதிர்ச்சிக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது என்பதுதான் சுவாரஸ்யமான விஷயம். மு.க.ஸ்டாலின் உள்பட தற்போது தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ள 97 பேரில் 50க்கும் மேற்பட்டவர்கள், அந்தந்த மாவட்ட அமைச்சர்களோடு அண்டர்ஸ்டேன்டிங் வைத்துக் கொண்டு, அரசு ஒப்பந்தம், வேலைவாய்ப்பு, பணிமாறுதல் உள்ளிட்டவற்றில் கோடிக்கணக்கான ரூபாய் கமிஷன் பார்த்துவிட்டார்கள் என்ற அதிர்ச்சிக்கரமான தகவலைதான் கடிதங்கள் வாயிலாக தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு தி.மு.க. எம்.எல்.ஏ.வும் எந்தெந்த ஒப்பந்தப் பணியில் எவ்வளவு கமிஷன் பணம் பெற்றார்கள் என்று புள்ளிவிபரத்துடன், தி.மு.க. தொண்டர்கள் அனுப்பியுள்ள புகாரைப் பார்த்து, அண்ணா அறிவாலய நிர்வாகிகளே திகைத்துப்போய்விட்டார்களாம். அ.தி.மு.க. அமைச்சர்களோடு நெருக்கமான நட்பு கொண்டிருந்ததால், தங்கள் தொகுதி எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க. அரசின் முறைகேடுகளை மக்களிடம் முழுமையாக கொண்டு செல்லாமல், மௌனமாகி விட்டார்கள். தி.மு.க. கட்சிக்கே துரோகம் செய்தவர்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டால், உண்மையான, விசுவாசமிக்க தி.மு.க. நிர்வாகிகள் விரக்தியடைந்துவிடுவார்கள். மேலும், தேர்தலிலும் களப் பணியில் ஏனோதானோ என்றுதான் செயல்படுவார்கள். அதனால், புதியவர்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் அதிக வாய்ப்பு அளியுங்கள்.

அ.தி.மு.க.வின் தேர்தல் செலவுக்கு இணையாக 10 கோடி ரூபாய்க்கு மேல் பணம் செலவழிக்க வேண்டியிருக்கும் என்று நினைத்து, கட்சிக்கு தொகுதிக்கு துளியும் சம்பந்தமே இல்லாதவர்களை வேட்பாளர்களாக தேர்வு செய்து அறிவித்துவிட வேண்டாம். பண பலத்தை மட்டுமே அடிப்படை தகுதியாக நினைக்காமல், கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. அரசுக்கு சோடை போகாமல், விசுவாசத்துடன், கட்சி பிடிப்போடு பணியாற்றி வந்த இளம்தலைமுறையினரை தேர்வு செய்து அறிவியுங்கள். குறிப்பாக, அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தல், அதற்கு முந்தைய உள்ளாட்சித் தேர்தல்களில் ஒன்றிய பெருந்தலைவர்கள், தற்போது பணியாற்றி வரும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் செயல்பாட்டை கவனித்து, கணித்து, பொதுமக்களுடனான அவர்களது அணுகுமுறையை சீர்தூக்கிப் பார்த்து, வேட்பாளர்களை மிகமிக கவனமாக தேர்வு செய்யுங்கள்.

மறைந்த தி.மு-க. தலைவர் கருணாநிதி, வேட்பாளர் தேர்வில் கடைபிடித்த யுக்திகளை கையாளுங்கள். கட்சி மேலிட நிர்வாகிகள் தரும் ஆலோசனைகளை மட்டுமே கேட்டு முடிவெடுக்காமல், தனது நண்பர்கள் வட்டாரம் மூலமும் வேட்பாளர்களைப் பற்றி ரகசியமாக விசாரித்து அறிவார். அதுபோல, நீங்களும், உங்களுடன் இருக்கும் கட்சி நிர்வாகிகளின் பேச்சை முழுசாக நம்பிவிடாமல், மாவட்டந்தோறும் உங்களின் நலனில் அக்கறையுள்ள நலம் விரும்பிகளுடனும் கலந்து ஆலோசியுங்கள். மேலும், தலைமை தேர்ந்தெடுக்கும் நேர்மையான, விசுவாசமிக்க வேட்பாளர்களுக்கு தேவையான நிதி ஆதாரத்தை பெருக்க, அந்தந்த தொகுதியைச் சேர்ந்த தி.மு.க. ஆதரவு தொழிலதிபர்களை அழைத்துப்பேசி, தி.மு.க. வேட்பாளருக்கு நிதியுதவி செய்ய தலைவர் மு.க.ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் வைத்தால், தேர்தல் செலவுக்கான நிதியை எளிதாக திரட்டிவிட முடியும் என்று பல்வேறு ஆலோசனைகளை கடிதங்கள் வாயிலாக தெரிவித்துள்ளார்களாம்.

இப்படி, மாநிலம் முழுவதும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக தொண்டர்கள் அனுப்பிய கடிதங்களில், 50 எம்.எல்.ஏ.களுக்கு மேல் புகார் பட்டியல் வாசிக்கப்பட்டிருக்கிறதாம். இதேபோல், அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில், விசுவாசமிக்க நிர்வாகிகளை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றும் வரும் தேர்தலில், ஆளும்கட்சியில் உள்ள செல்வாக்குமிக்க அமைச்சர்கள் ஒன்றிரண்டு பேர், தி.மு.க. வேட்பாளர்களையே விலைக்கு வாங்கிவிடும் ஆபத்தும் உள்ளது. அதனால், வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கு முன்பாக, ஆயிரம் முறை தி.மு.க. தலைமை யோசிக்க வேண்டும் என்றும் கடிதங்கள் வாயிலாக தி.மு.க. தொண்டர்கள் வலியுறுத்தியிருப்பதும் தெரியவந்திருக்கிறது.

அந்த கடிதங்களின் அடிப்படையில், தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தற்போதைய எம்.எல்.ஏ.க்களில் 50 பேருக்கு மேல் தேர்தலில் மீண்டும் போட்டியிட தலைவர் ஸ்டாலின் சீட் தருவது சந்தேகம்தான் என்கிறார், அறிவாலயத்தின் முக்கிய நிர்வாகி ஒருவர்..ஏறக்குறைய இதே எண்ணிக்கைக்கு ஏற்பதான், பிரசாத் கிஷோர் தலைமையிலான ஐ.டி. விங்கும், பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 50 சிட்டிங் எம்.எல்.ஏ.வுக்கு மீண்டும் வாய்ப்பு அளித்தால், அந்த தொகுதிகளில் அ.தி.மு.க. எளிதாக வெற்றிப் பெற்றுவிடும் என்றும் ஆலோசனை கூறியுள்ளதாக தகவல் கசிகிறது.

தொண்டர்களின் உணர்வுகளுக்கு மாறாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பாரா?

காத்திருப்போம்…..