தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் அறிவிப்பு மற்றும் ஏற்பாடுகளை மேற்கெள்ளும் பணியில் இந்திய தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. அதற்கு முன்னோட்டமாக தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர் சத்ய பிரதா சாகுவும், தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். சென்னை மாநகராட்சி மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக, ஆலோசனைக் கூட்டங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தல் நடத்துவதற்கு தேவையான நிதி தொடர்பாக, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் சத்ய பிரதா சாகு. அப்போது அவர், தேர்தல் செலவுக்கு ரூ.621 கோடி தேவைப்படும் என கூறினார். தேர்தல் பணிக்கு தேவையான நிதி தொடர்பாக தமிழக அரசிடம் கேட்டுள்ளோம் என்றும் கொரோனா காலம் என்பதால் செலவு தொகை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளதாகவும் தலைமைத் தேர்தல் அலுவலர் தெரிவித்தார். தொடர்ந்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றும் சத்ய பிரதா சாகு கூறினார்.