Tue. May 7th, 2024

இன்னும் 4 மாதங்களில் தி.மு.க. ஆட்சி வந்துவிடும். ஆட்சிப் பொறுப்பை ஏற்ற அடுத்த நொடியே விவசாயிகளின் அனைத்துக் கடன்களையும் ரத்து செய்வோம். அதுபோலவே நாடாளுமன்றத் தேர்தலின்போது வாக்குறுதி அளித்தபடி, கல்விக்கடன், நகைக்கடனையும் ரத்து செய்வோம் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

தி.மு.க. சார்பில், திருவள்ளூர் மாவட்டம் பஞ்செட்டியில் சமத்துவப் பொங்கல் விழா இன்று நண்பகல் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், சமத்துவப் பொங்கலை தொடங்கி வைத்து விழாவில் பேசினார். புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் 50 நாட்களாக போராடி வருகிறார்கள். அவர்களுடன் 7 முறைக்கு மேல் பேச்சு வார்த்தை நடத்திய பிறகும், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மத்திய அரசு முன்வரவில்லை. விவசாயிகளுக்கு சாதகமாக முடிவெடுக்காமல் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக தான் மத்திய அரசு முடிவெடுக்கிறது. அந்த மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கு பச்சைத் துரோகம் செய்து கொண்டிருக்கிறார் என்று குறிப்பிட்டார்.

பச்சை துண்டைப் போட்டுக் கொண்டு நாள்தோறும் தானும் விவசாயி என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுவது எப்படியிருக்கிறது என்றால், நானும் ரவுடி..நானும் ரவுடிதான் என்று சிலர் கூறிக் கொண்டிருப்பதைப் போல இருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கிண்டலடித்தார்.

இன்னும் 4 மாதத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிடும். அதிகாரத்தை கைப்பற்றிவுடன் முதல் நடவடிக்கையாக விவசாயிகளின் அனைத்து கடன்களும் ரத்து செய்யப்படும் என்றும் மு.கஸ்டாலின் உறுதிப்பட தெரிவித்தார். மேலும், நாடாளுமன்றத் தேர்தலின்போது வாக்குறுதி அளித்தபடி கல்விக்கடன் மற்றும் நகைக்கடன்களையும் ரத்து செய்வோம் என்று அவர் கூறினார்.