Sun. May 19th, 2024

ஆந்திராவில் இளம் கன்றான ஜெகன் மோகன் ரெட்டிக்கு அரசியல் செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு.

50 ஆண்டு கால தென்னிந்திய அரசியலில் நம்பிக்கை துரோகி என்ற பட்டத்தை சுமந்தவர் சந்திரபாபு நாயுடு. 1982 ல் தெலுங்கு திரைப்பட சூப்பர் ஸ்டார் என்.டி. ராமாராவ் தெலுங்கு தேசத்தை தொடங்கினார். ஆந்திராவில் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக விஸ்வரூபம் காட்டிய அவரை, இரண்டு பேர் கூடவே இருந்து குழிபறித்தனர். அதில் எட்டப்பனாக மாறியவர் என். பாஸ்கர் ராவ். ராமாராவ் அரசில் 1984ல் அமைச்சராக இருந்தார். பின்னர் காங்கிரஸோடு இணைந்து சதித்திட்டம் தீட்டி தெலுங்கு தேசம் ஆட்சியை கலைக்க உள்ளடி வேலைகளில் இறங்கினார்.

மற்றொருவர், ராமாராவின் புதல்வியை திருமணம் செய்து கொண்ட சந்திரபாபு நாயுடு. வயதான காலத்தில் ராமாராவிட்ம் இருந்து தெலுங்கு தேசம் கட்சியை பறித்து, அதற்கு அவரே தலைவரானார். பின்னர் அரசியலில் உச்சம் தொட்ட அவர், காங்கிரஸ் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைத்த போதும், பாஜக.வின் தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோதும், ஆந்திராவில் அமர்ந்து கொண்டே, தேசிய அரசியயில் சித்து விளையாட்டு ஆடியவர் சந்திரபாபு நாயுடு.

அவரின் அரசியல் வயது கூட இல்லாத ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகிய இரண்டு ஜாம்பவான்களையும் எதிர்த்து அவரது மறைந்த தந்தை பெயரிலேயே ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் (ராஜசேகர ரெட்டி )கட்சியை தொடங்கி ஆந்திராவில் ஆட்சியை பிடித்தார். முதலமைச்சராக பதவியேற்ற நாளில் இருந்து சந்திரபாபு நாயுடுவின் கண்களில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறார்.

இது ஒரு புறம் என்றால், தெலுங்கு தேசம் கட்சிக்குள்ளேயே சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக புகைச்சலும், அதிருப்தியும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த இக்கட்டான நேரத்தில், தெலுங்கு தேசம் கட்சி தொடங்கப்பட்ட 1982 ஆம் ஆண்டு மார்ச் க29 ஆம் தேதியை கணக்கில் கொண்டால், கடந்த 29 ஆம் தேதியோடு 40 ஆண்டுகள் முடிந்து, 41 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது தெலுங்கு தேசம் கட்சி.

இந்த நேரத்தில் ஆந்திராவிலும், தேசிய அரசியலிலும் கட்சிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவை சரி செய்து மீண்டும் எழுச்சிமிகு கட்சியாக மாற்ற சந்திரபாபு நாயுடு வியூகங்களை வகுத்து வருகிறார். வரும் மூன்றாண்டுகளில் கட்சியை அனைத்து மட்டங்களிலும் பலப்படுத்துவதுடன், மக்களுடன் நெருங்கிப் பழகி, தெலுங்கு தேசத்தை வலுப்படுத்துவதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளதாக கூறி வருகிறார், அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு.

2023 ல் நடக்கவுள்ள ஆந்திர சட்டமன்றத் தேர்தலில், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதை முதல் லட்சியமாகவும், அதற்கடுத்து 30 ஆண்டுகளும் ஆந்திர அரசியலிலும் ஆட்சியிலும் நிலைத்து நிற்பதற்கான வியூகங்களுடன் தெலுங்கு தேசத்தை புதுப்பித்துக் கொண்டிருப்பதாகவும் கூறி வருகிறார் சந்திரபாபு நாயுடு. அவரின் தொலைநோக்கு திட்டத்தை அறிந்து, கேட்டு, உற்சாகமாகி வருகிறார்கள் தெலுங்கு தேச நிர்வாகிகள் என்கிறார் ஹைதராபாத்தில் உள்ள நமக்கு அறிமுகமான மூத்த ஊடகவியலாளர் ஒருவர்.