Tue. Apr 30th, 2024

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஊடகத்துறையில் துளி கூட அனுபவம் இல்லாதவர்கள், செல்போனையும், கேமிராவையும், மைக்கையும் கையில் எடுத்துக் கொண்டு, சோஷியல் மீடியா என்ற பெயரில், கண்ணில் பட்டதையெல்லாம் எடுத்து யூ டியூப்பில் பதிவேற்று வருகிறார்கள். ஊடகத் தர்மம் என்றால் என்னவென்று கூட தெரியாத இவர்களால், தார்மீக நெறிகளுடன் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஊடகத்துறைக்கும் பொதுமக்களிடம் அவப்பெயர் ஏற்பட்டு வருகிறது.

இப்படி கண்ணியமற்ற முறையில் செயல்படுபவர்களுக்கு யார் மணிக்கட்டுவார்கள் என்ற கேள்வி பொதுதளத்தில் எழுந்திருந்தது. அதுவும், மிகமிக அருவருக்கத்தக்க வகையில், இளம்பெண்களை குறிவைத்து, ஆண், பெண் உறவு தொடர்பான , பொதுவெளியில் எப்போதுமே பேசப்படாத விஷயங்களை கொஞ்சம் கூட கூச்சம் இன்றி கேள்வி கேட்டு, அதை ஒளிபரப்பி வந்தது Chennai Talk என்ற யூடியூப் சேனல். அண்மைக்காலமாக அதன் செயல்பாடுகளும், மைக்கையும், கேமிராவையும் தூக்கிக் கொண்டு திரிந்த அந்த சேனலில் பணியாற்றிய இளைஞர்கள், பெண்ணிடம் ஆபாசமாக பேசி எடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. 

இதனையடுத்து, இந்த வீடியோ தொடர்பாக சென்னை பெசன்ட் நகரை சேர்ந்த பெண் ஒருவர், ‘பொது இடங்களில் ஆபாசமாக பேசி பேட்டி எடுத்த நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என ஸ்திரி நகர் காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தார்.அதனடிப்படையில் பொது இடத்தில் ஆபாசமாக பேட்டி எடுத்ததாக சென்னை டாக் யூடியூப் சேனலை சேர்ந்த அசென் பாட்ஷா, கேமரா மேன் அஜய் பாபு, உரிமையாளர் தினேஷ் குமார் ஆகியோரை சாஸ்திரி நகர் காவல்துறையினர் கைது செய்தனர்.