Tue. Apr 30th, 2024

சட்டமன்றத் தேர்தல் ஜுரம் எப்படி அரசியல்வாதிகளை ஆட்டிப் படைக்கிறதோ, அதேப் போல தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும் என்ற சூடான விவாதம், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளிடையேயும் விறுவிறுபாக நடைபெற்று வருகிறது. கடந்த பத்தாண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ப பதவிகள் கிடைக்காத ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் நூற்றுக்கணக்கானோர் டம்மியான பதவிகளில்தான் குப்பை கொட்டி வருகிறாகள். இரண்டுப் பிரிவுகளைச் சேர்ந்த ஒரு சில அதிகாரிகள் தான் தொடர்ந்து அதிகாரமிக்க பதவிகளில் கோலோச்சி வருகிறார்கள்.

இப்படி உயர்ந்த இடத்தில் ஆளும்கட்சிக்கு நெருக்கமாக இருக்கும் உயரதிகாரிகளே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியின் மீது அலுப்பு ஏற்பட்டதை வெளிப்படையாகவே பேசத்தொடங்கிவிட்டார்கள். தலைமைச் செயலகத்திலேயே இந்த விரக்திப் பேச்சு அதிகமாக கேட்கத் தொடங்கிவிட்டது. இவர்களைப் போலவே, தி.மு.க. அனுதாபிகளான ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ்., உயரதிகாரிகள், ஆளுமைமிக்க செல்வி ஜெயலலிதா, கலைஞர் மு.கருணாநிதி ஆகியோர் இருந்த காலத்தில், அதாவது கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சி வீழ்த்தப்பட்டு தி.மு.க.. ஆட்சிதான் வரும் என்று உறுதியோடு நம்பினார்கள். ஆனால், அப்போது இன்றைய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எடுத்த தவறான முடிவால், தே.மு.தி.க. மக்கள் நல கூட்டணிக்கு தாவியது.

அன்றைய தினம் கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோர் விஜயகாந்த், பிரேமலதா, சுதிஷ் ஆகியோருடன் மாறி மாறி பேச்சுவார்த்தை நடத்தி தி.மு.க.கூட்டணிக்கு தே.மு.தி.க. வை 95 சதவிகிதம் சம்மதிக்க வைத்துவிட்டனர். கனிமொழியும், தயாநிதி மாறனும் தந்த நம்பிக்கையில்தான் அப்போது கலைஞர் மு. கருணாநிதி, பழம் கனித்துவிட்டது, பாலில் விழ வேண்டியதுதான் பாக்கி என்று கூறினார். ஆனால், தே.மு.தி.க. கேட்ட 70 தொகுதிகளை தர தயாராக இருந்தபோதும், துணை முதலமைச்சர் பதவி வேண்டும் என்ற விஜயகாந்த்தின் தனிப்பட்ட கோரிக்கையை ஏற்க மு.க.ஸ்டாலின் தயாராக இல்லை. இதனால்தான், தி.மு.க. கூட்டணியில் சேராமல், மக்கள் நல கூட்டணிக்கு தலைமை ஏற்கும் நிலைக்கு சென்றது தே.மு.தி.க. அன்றுமட்டும், விஜயகாந்த்தின் கோரிக்கையை மு.க.ஸ்டாலின் ஏற்றிருந்தால், 2016 லிலேயே தி.மு.க. ஆட்சியில் அமர்ந்திருக்கும். கடந்த 5 ஆண்டுகளில் நடந்த கோமாளித்தனங்களில் இருந்து தமிழகம் தப்பியிருக்கும் என்று இன்றைக்கும் அங்கலாய்க்கிறார்கள் தி.மு.க. அனுதாபிகளான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள்.

2016 தேர்தல் போல இன்றைய தேர்தல் களம் இல்லை என்று கூறும் அவர்கள், கடந்த ஐந்தாண்டுகளில் அ.தி.மு.க. வாக்கு வங்கி, பாதிக்கு பாதிக்கு சரிந்துவிட்டது. அக்கட்சியோடு கூட்டணியில் உள்ள பா.ம.க. தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகளின் வாக்கு வங்கியும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியோடு நடத்திய மறைமுக பேச்சுவார்த்தை, ஒரு கட்டத்தில் வெட்ட வெளிச்சமாகி, தனிப்பட்ட சில ஆசைகளுக்காக தி.மு.க.வோடு கூட்டணி சேராமல் அ.தி.மு.க. கூட்டணியோடு ஐக்கியமானதால், அவ்விரு கட்சித் தொண்டர்களும் நொந்து போய்வுள்ளனர். இந்த இரண்டு ஆண்டுகளிலும் அவர்கள் மனம் மாறவில்லை. இப்போதும், தொண்டர்களின் உணர்வுகளுக்கு மாறாக தான் பா.ம.க.வும், தே.மு.தி.க.வும் அ.தி.மு.க கூட்டணியிலேயே தொடர்வது என்ற மனநிலையையே வெளிப்படுத்தி வருவதால், வரும் சட்டமன்றத் தேர்தலில் அவ்விரு கட்சிகளின் முழு வாக்கு வங்கியும் அ.தி.மு.க. வை கரையேற்றாது.

என்னதான் பணத்தை கொடுத்து வாக்காளர்களுக்கு விலை வாங்கிவிடலாம் என்று அ.தி.மு.க. கனவு கண்டாலும், தென் மாவட்டங்களில் பெரும்பான்மையாக உள்ள இரண்டு சமுதாயங்கள், தேவர், நாடார் இனமக்கள், இந்த தடவை அ.தி.மு.கவை கைகழுவி விட தயாராகிவிட்டதாக தான் எங்களுக்கு தகவல்கள் நாள்தோறும் வந்துக் கொண்டிருக்கிறது என்கிறார்கள் கோட்டையை ஆளும் உயரதிகாரிகள். மேலும், கொரோனோ காலமான கடந்த 8 மாதங்களில், கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களில் ஒரு தரப்பினர் மட்டுமே பணப் பிரச்னையை ஓரளவுக்கு சமாளித்து விட்டார்கள். ஆனால் மற்ற தரப்பினர்கள் எல்லாம், அதாவது கிராமப்புறங்களில் இருந்து பேருந்துகள் மூலம் அருகில் உள்ள நகரங்களுக்கு சிறு சிறு வேலைக்க சென்று வந்த பல நூறு குடும்பங்கள், ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி தான் கொரோனோ காலத்தை விரட்டியுள்ளார்கள். அல்லது அவர்களிடம் இருந்த சின்ன, சின்ன தங்க நகைகளை அடகு வைத்து சமாளித்திருக்கிறார்கள். மேலும், பள்ளிக் கட்டணமும் கடன் வாங்கி தான் சமாளித்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஓராயிரம், இரண்டாயிரம் என குடும்பத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் என ஓட்டுக்குப் பணம் கொடுத்தால் கூட, கடந்த எட்டு மாதங்களில் அவர்கள் வாங்கிய கடனுக்கு ஈடாகாது. ஆகவே, பணம் வாங்கியவன் இரட்டை இலைக்குதான் ஓட்டுப் போடுவான் என்பதெல்லாம் இன்றைய நிலையில் மக்களிடம் எடுபடாது. இதையெல்லாம் நாங்களாக கற்பனை செய்து சொல்லவில்லை. மாவட்டந்தோறும் ஆய்வுப் பணிக்காக செல்லும் போது, எங்கள் கீழ்உள்ள அலுவலர்கள், பணியாளர்கள் தெரிவிக்கும் தகவல்கள்தான் இது என்று கூறுகிறார்கள் அந்த உயரதிகாரிகள்.

மேலும், இதைவிட கொடுமையாக நீர்நிலைகளில் நடைபெற்ற மராமத்துப் பணிகள் முதல் ரோடு போடுதல், பாலம் கட்டுதல் போன்ற பணிகளில் எல்லாம் 40 சதவிகிதம் கமிஷன் வாங்கிக் கொள்கிறாகள் ஆட்சியாளர்கள் என்பதும், அந்த ஒப்பந்தத்தை எடுப்பவர்கள் எல்லாம் ஆளும்கட்சியின் உச்சபட்ச அதிகாரத்தில் இருப்பவர்களின் உறவினர்கள்தான் என்று புலம்பும் பரம்பதை ஒப்பந்தத்தாரர்கள் ஊர் ஊராக தங்கள் வேதனைகளை, பொதுமக்களிடம் பரப்பி வருகிறார்கள். கடந்த தேர்தலின் போது ஒப்பந்தத்தாரர்கள் வசூலித்த கொடுத்த பணத்தால்தான் ஆளும்கட்சியைச் சேர்ந்த பலர் கடந்த ஐந்தாண்டுகளாக எம்.எல்.ஏ.க்களாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தேர்தல் பணியாற்றிய பலருக்கு தெரியும். 2016 க்கு முன்பு வரை அரசு கான்ட்ராக்ட்டுகளுக்கு 10 முதல் 15 சதவிகிதம் வரைதான் ஆளும்கட்சியினர் கமிஷன் பெற்றுக் கொண்டிருந்தனர். 2016 ல் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது கூட 10 சதவிகிதத்திற்கு மேல் கமிஷன் வாங்கக் கூடாது என்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கண்டிப்பாக சொன்னதாக கூட ஒரு பேச்சு, கோட்டையில் பேசப்பட்டது. ஆனால், அவரின் பேச்சை மீறி, ஒரு சிலரின் பேராசையால், 10 சதவிகிதத்தில் இருந்து 20, 25,30,35 என்று விலைவாசியை விட வேகமாக உயர்ந்து என்று 40 சதவிகிதத்திற்கு உயர்ந்து நிற்கிறது.

இவ்வளவு கமிஷன் தொகை உயர்த்தப்பட்ட பிறகும் ஆட்சியாளர்களின் பணத்தாசை நின்றுவிட வில்லை. 50 கோடிக்கு ரூபாக்குள் ஒரு தார்ச்சாலை போட்டு விட முடியும் என்றாலும்கூட, (அதாவது ஆளும்கட்சியினருக்கு கமிஷன் கொடுக்கும் தொகை உள்பட) அந்த தார்ச்சாலை அமைக்க 75 கோடி முதல் 100 கோடி என திட்ட மதிப்பை உயர்த்தி, தார்ச்சாலை போடும் செலவுக்கு சமமாக கமிஷன் தொகையை இன்றைக்கு ஆளும்கட்சி கொள்ளையடிப்பதுதான், முறைப்படி விண்ணிப்பித்த போதும் கான்ட்ராக்ட் கிடைக்காத தகுதி வாய்ந்த ஒப்பந்ததார்கள், ஒட்டுமொத்த தி.மு.க. ஆட்சி வர வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு தேர்தல் பணியாற்றி வருகிறார்கள்.

இப்படி பல பக்கமும் இருந்து இன்றைய ஆட்சிக்கு எதிராக மக்களின் மனநிலை மாறியிருப்பதால், மத்திய பா.ஜ.க. கூட தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வருவதை தடுக்க முடியாது என்று தலைமைச் செயலகத்தில் உள்ள நூற்றுக்கணக்கான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சூடான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக, அந்த வளாகத்தையே வலம் வந்துக் கொண்டிருக்கும் மூத்த ஊடகவியலாளர்கள், அ.தி.மு.க. சாம்ராஜ்யம் சரியப் போகும் நிகழ்வை கதை, கதையாகச் சொல்லி வருகிறார்கள்.

ஆக மொத்தத்தில், பிரசாத் கிஷோர் திருவிளையாடல்கள் கை கொடுக்கிறதோ இல்லையோ, தமிழகம் முழுவதும் முதல்வர் இ.பி.எஸ். ஆட்சிக்கு எதிரான நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கும் அதிருப்தி அலை, தி.மு.க.வுக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் 2021 மே மாதத்தில் பம்பர் பரிசு தர காத்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மையான கள யதார்த்தம்….