Tue. Apr 30th, 2024

.நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் வரும் 16ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதுதொடர்பாக இன்று (ஜன.,11) மாலை 4 மணியளவில் மாநில முதல்வர்களுடன் காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது, உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதில், பிரதமர் மோடி பேசியதாவது: கூட்டாட்சிக்கு இந்தியா மிகச்சிறந்த உதாரணம். மாநிலங்களில் இருந்து நல்ல செய்தி வந்திருக்கிறது. பெருந்தொற்றுக்கு நடுவே மிகப்பெரிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா காலகட்டத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றியதுடன், விரைந்து முடிவெடுத்தது திருப்தி அளிக்கிறது. சர்வதேச அளவில் கொரோனா பரவியது போல், இந்தியாவில் பரவவில்லை. தற்போது 2 தடுப்பூசிகள் தயாராகியிருப்பது பெருமைப்பட வேண்டிய விஷயம். மேலும் 4 தடுப்பூசிகள் பரிசோதனையில் உள்ளன. இந்தியாவில் தயாரான இரண்டு தடுப்பூசிகளை அவசர காலத்தில் பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வரும் 16ம் தேதி முதல், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி போடும் திட்டம் இந்தியாவில் துவங்குகிறது.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் சுகாதார பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்படும். தொடர்ந்து தூய்மை பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், பாதுகாப்பு படை, போலீஸ் மற்றும் துணை ராணுவப்படையினர் என முதல் கட்டமாக 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படவுள்ளது. அதற்கான செலவை மாநில அரசுகள் ஏற்க தேவையில்லை. அதனை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும். இரண்டாம் கட்டமாக 50 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ள வயோதிகர்களுக்கு தடுப்பூசி போடப்படும். அடுத்த சில மாதங்களில் 30 கோடி பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி குறித்த வதந்திகளை யாரும் கண்டுகொள்ள வேண்டாம். தடுப்பூசிக்கு அரசியல்வாதிகள் முந்தக்கூடாது. தங்களுக்கான வாய்ப்பு வரும் போது, அரசியல்வாதிகள் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.