Fri. May 17th, 2024

சிறப்புக் கட்டுரை ; தொல்பழங்காலம் – 1

எழுத்தாளர் பாலன் நாச்சிமுத்து..

எழுதிய நூல்கள் ;

1, பழந்தமிழ்ச் சமுதாயமும், வரலாறும்

2.காவிரி நதிநீர் – வஞ்சிக்கப்பட்ட தமிழகம்.

சங்ககாலம் என்பது இனக்குழுச் சமூகத்தில் இருந்து அரசு உருவாகிக் கொண்டிருந்த காலகட்டம் எனச் சில அறிஞர்கள் கருதுகின்றனர். ஆனால் சங்ககாலம் என்பது அரசு உருவாகி நிலைபெற்றுவிட்ட காலகட்டம் எனலாம். மூவேந்தர் அரசுகள் நிலைபெற்ற அரசுகளாக உருவாகியிருந்த போதிலும், சங்ககாலத்தில் இனக்குழு நிலையில் வாழ்ந்த சமூகங்களும் இருந்தன. ஆனால் சங்ககாலத்தில் வாழ்ந்த பெரும்பாலான மக்கள் அரசுக் கட்டமைப்பிற்குள் கொண்டுவரப்பட்டிருந்தனர். ஆதலால், சங்ககாலத்திற்கு முந்தைய இனக்குழு சமூகம் குறித்தும், அதிலிருந்து அரசு உருவானது குறித்தும் அறிந்து கொள்வதன் மூலமே பண்டைய தமிழக வரலாறு குறித்த ஒரு தெளிவைப் பெற முடியும். “இலூயிசு என்றி மார்கன்” என்கிற அமெரிக்கர், அமெரிக்க வாழ் சிவப்பிந்தியர்களின் இனக்குழு வாழ்க்கை குறித்து அறிய நாற்பது ஆண்டு காலம் அவர்களிடத்திலேயே தங்கி இருந்து ஆய்வு செய்தார். அதன்முடிவில் ‘பண்டைய சமுதாயம்’ என்கிற புகழ் பெற்ற நூலை 1877இல் வெளியிட்டார்.1 இரத்த உறவை அடிப்படையாகக் கொண்ட ‘கணம்’ என்கிற நிறுவனமே பண்டைய இனக்குழு வாழ்க்கையின் அடிப்படை எனவும், உலகின் பெரும்பாலான சமூகங்கள் இந்தக் கணம் என்கிற சமூக நிறுவனத்திலிருந்து தான் உதயமாகின எனவும் அந்நூலின் மூலம் அவர் நிறுவினார். மிகச் சிறந்த இந்நூலை அடிப்படையாகக் கொண்டே ஏங்கெல்சு தனது ‘குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்’ என்கிற நூலை எழுதினார். அதன்பின் மார்கன், ஏங்கெல்சு ஆகியவர்களின் நூல்களை அடிப்படையாகக் கொண்டு வேதங்கள், மகாபாரதம் ஆகிய இந்திய இலக்கியங்களை ஆய்வு செய்து பண்டைய ஆரியர்களின் கண அடிப்படையிலான இனக்குழு வாழ்க்கை குறித்தும் அவர்களிடையே இருந்த ஆண்-பெண் உறவுகள் குறித்தும் பண்டைக்கால இந்தியா என்கிற ஒரு சிறந்த நூலை பொதுவுடைமைச் சிந்தனையாளர் திரு. எசு.ஏ.டாங்கே அவர்கள் எழுதினார்.மார்கன், ஏங்கெல்சு, டாங்கே ஆகியவர்கள் எழுதிய நூல்கள் ஆதிகால மனிதனின் வாழ்க்கை குறித்தும், அவனது இனக்குழு வாழ்க்கையில் கண அமைப்பு முறையின் சிறப்பு குறித்தும், அவனது காலத்திய ஆண்-பெண் உறவுகள் குறித்தும் நமக்கு ஒரு சித்திரத்தை வழங்க வல்லன. ஆதிகாலத் தமிழர்களும் அதே போன்ற ஒரு வாழ்க்கையைத் தான் வாழ்ந்து வந்தனர். நமது தமிழகத்தில் இருந்துவருகிற இரத்த உறவுமுறைச் சொற்கள் குறித்து ஏங்கெல்சு, “தென்னிந்தியாவில் உள்ள தமிழர்களின் இரத்த உறவுகளைக் குறிக்கும் சொற்களும் நியூயார்க் மாகாணத்திலுள்ள செனீகா இரோகுவாய்களின் இரத்த உறவுமுறைகளைக் குறிக்கும் சொற்களும் இருநூற்றுக்கும் மேற்பட்ட உறவுகள் விடயத்தில் ஒன்றாகவே இன்று வரைக்கும்கூட இருந்து வருகின்றன’ என்கிறார்.2ஆகவே ஆதிகாலத் தமிழர்களும் கண அமைப்பு முறையில்தான் வாழ்ந்து வந்தனர் என்பதை ஏங்கெல்சின் கூற்று உறுதிப்படுத்துகிறது. எனவே சங்க காலத்துக்கு முந்தைய ஆதிகாலத் தமிழர் வாழ்க்கை குறித்தும், இந்த ஆதிகால இனக்குழுக்களின் கண அமைப்பிலிருந்து தமிழகத்தில் அரசு தோன்றியது குறித்தும், ஆதிகால இனக்குழு சமூக வாழ்க்கையில் சங்ககாலம் எந்தக் கட்டத்தில் இருந்துள்ளது என்பது குறித்தும் அறிந்து கொள்ள, ஆதிகால மனிதனின் வாழ்க்கை குறித்தும், அவனது கண அமைப்பு குறித்தும், அவனது ஆண்-பெண் உறவுகள் குறித்தும் அறிந்துகொள்வது ஒரு அவசியத் தேவையாகிறது. உலகின் பெரும்பாலான மனித சமூகங்கள் இந்த கண அமைப்பு முறையில் வாழ்ந்துதான் இன்றைய நிலையை வந்தடைந்தன. இங்கு நாம் நமது ஆதிகால இந்திய ஆரிய இனக்குழுச்சமூகம் குறித்தும், ஆதிகால அமெரிக்கச் சிவப்பிந்திய, கிரேக்க, உரோம சமூகங்கள் குறித்தும் மேற்குறித்த மூன்று பேரின் நூல்களை அடிப்படையாகக் கொண்டு சுருக்கமாகப் பார்க்க உள்ளோம். அவை குறித்து பொறுமையாகவும், நிதானமாகவும், ஆழ்ந்தும் படிப்பதன் மூலமே வரலாற்றுக்கு முந்தைய இனக்குழு வாழ்க்கை குறித்த ஒரு தெளிவான புரிதலை நாம் அடைய முடியும். அவ்வாறான புரிதலைக்கொண்டு, அதனை நமது சங்க காலச் சமூக வாழ்க்கையோடு ஒப்பிட்டு ஆய்வுசெய்து, நமது சங்ககாலச்சமூகம் குறித்த ஒரு தெளிவை அடைய உள்ளோம்.இந்திய ஆரிய இனக்குழுச் சமூகம்:பண்டைய வடஇந்திய ஆரியச் சமூகம் குறித்து டாங்கே வடஇந்திய ஆரிய இலக்கியங்களான வேதங்கள், புராணங்கள், மகாபாரதம் போன்ற இதி காசங்கள் கொண்டு, அக்காலகட்ட இனக்குழு வாழ்க்கை பற்றிய சித்திரம் ஒன்றினை வழங்கியுள்ளார். வடஇந்திய ஆரிய இனக்குழுச்சமூகம் தன் ஆதிகாலச் சமூக வாழ்வின் நினைவுகளை இரிக்குகள் எனப்படும் வேதகால நாட்டார் பாடல்களில் பதித்து வைத்துள்ளன. யாகத்திற்கான சடங்கைச் செய்வதில் இந்த வேதகால நாட்டார் பாடல்களுக்கு முக்கியப் பங்கு இருந்தது. இந்த யாகச் சடங்கு என்பது, தொல்பழங்கால ஆரிய இனக்குழு வாழ்வைத் திருப்பிச் செய்து காட்டுவது என்கிறார் டாங்கே. பண்டைய ஆரிய இனக்குழுச் சமூகங்களின் தொல்பழங்கால வாழ்வு முழுவதையும் திருப்பிப் படைத்துக் காட்டுவதாகவே இந்த யாகச் சடங்குகள் உள்ளன என்கிறார் அவர்.பார்வை:1. குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம், பி. ஏங்கெல்சு, பாரதி புத்தகாலயம், 2008, பக்: 23.2. பக்: 38.சான்று: பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன் பாலன், எதிர்வெளியீடு, 2016, பக்: 181 – 258