Tue. May 21st, 2024

தமிழக அமைச்சரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்து பவர்ஃபுல் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிதான். கோயம்புத்தூரில் அமர்ந்துகொண்டே சென்னை தலைமைச் செயலகத்தை மட்டுமல்ல, தமிழகத்தையே ஆட்டிப்படைக்கிற அசகாய சூரர் வேலுமணிதான் என்பது அ.தி.மு.க. மேல்மட்ட தலைவர்களுக்கு மட்டுமல்ல, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மட்டுமே அறிந்த ரகசியம். எந்த மாவட்டத்தில் யார் கலெக்டராக இருக்க வேண்டும், யார் எஸ்.பி.யாக இருக்க வேண்டும் என்பதையெல்லாம் தீர்மானிக்கக் கூடிய சக்தி படைத்தவராக திகழ்ந்து வருகீறார் அவர். அதுமட்டுமின்றி, டெல்லியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. வின் அகில இந்திய தலைவர் நட்டா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என பவர்ஃபுல் வி.வி.ஐ.பி.க்களுடனும் நெருங்கிய நட்பை வைத்திருப்பவரும் அவர்தான். அவரின் கண் அசைவின்றி இ.பி.எஸ். ஆட்சியே இயங்காது என்பதுதான் இன்றைய யதார்த்தம். இப்படி சர்வ வல்லமை படைத்தவராக வலம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, 2021 மே மாதத்திற்குப் பிறகு சென்னை தலைமைச் செயலகத்திற்குள் அதிகாரமிக்க மனிதராக காலடி எடுத்து வைக்கக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருப்பவர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டுமல்ல, அ.தி.மு.க. உட்கட்சியிலேயே உள்ள முன்னணி தலைவர்கள் சிலருக்கும் கூட அந்த ஆசை, அடிமனதில் வேரூன்றி இருக்கிறது. அதற்காக, வேலுமணியை வரும் சட்டமன்றத் தேர்தலில் மண்ணைக் கவ்வ, அவரது தொண்டமூத்தூர் தொகுதியில் குழிப்பறி வேலைகள் கடந்தாண்டு இறுதியில் இருந்தே தொடங்கிவிட்டது.

வேலுமணி மீண்டம் எம்.எல்.ஏ. வாக தேர்வாகி சென்னைக்கு வரக்கூடாது என்று வெளிப்படையாகவே தி.மு.க.வினருக்கு கட்டளையிட்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின். அதன் முதற்கட்ட ஒத்திகை தான், அவரது தொகுதியில் கிராம சபைக் கூட்டத்தை கூட்டி தி.மு.க.வினருக்கும் உற்சாகத்தை கொடுத்ததுடன், அமைச்சருக்கும் சவால்விட்டு வந்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். இப்படி தி.மு.க. வரிந்துக் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கி வேலைப் பார்க்க தொடங்கிவிட்ட நிலையில், கோயம்புத்தூரிலேயே உள்ள அமைச்சர் வேலுமணியின் உட்கட்சி எதிரிகள், அண்டர்கிரவுண்டில் அவருக்கு குழிப்பறிக்கும் வேலைகளையும் தொடங்கிவிட்டார்கள். மீண்டும் அவர் தேர்தலில் வெற்றிப் பெற்றால், தங்கள் எதிர்காலமே இருண்டுவிடும் என்பதால், வேலுமணிக்கு எதிரானவர்களையெல்லாம் ஒன்றுதிரட்டி, மறைமுகமாக தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவையில் உட்கார்ந்து அரசியல் செய்து கொண்டே தலைமைச் செயலகத்தில் என்ன நடக்கிறது, முதல்வர் இ.பி.எஸ். வீட்டில் என்ன மாதிரியான அரசியல் நடக்கிறது என்று ஸ்மெல் செய்கிற அளவுக்கு ஒற்றர்களை வைத்துள்ள அமைச்சர் வேலுமணி, சொந்த தொகுதியிலேயே தனக்கு எதிரான பின்னப்படும் சதிவலைகளை பற்றி அறியாமலா இருப்பார். அவரின் விருப்பத்திற்கு ஏற்ப சேவை செய்ய, அவரை சந்தோஷத்தில் குளிப்பாட்ட, அ.தி.மு.க.வில் மட்டுமல்ல, அரசுத் துறைகளிலேயே ஆயிரக்கணக்கான விசுவாசிகள், அடிமைகள் போல இருக்கிறார்கள். அந்த அர்ப்பணிப்பிற்கான உண்மையான காரணம், அவரின் சமுக நல செயல்பாட்டை கண்டு வியந்து போயா என்றால், அதுதான் இல்லை. அவரை அண்டியிருந்தால் பணம் தாராளமாக கிடைக்கும். நினைத்த பதவியில் அமர முடியும் என்ற அற்ப ஆசைகள்தான். இப்படிபட்ட அடிமைகளை வைத்துக் கொண்டு, தனது தொகுதியில், வார்டு வார்டாக, ஒவ்வொரு வாக்காளர்களின் மனங்களையும் ஸ்கேன் செய்ய ஆரம்பித்துவிட்டார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தொண்டாமுத்தூர் தொகுதியில், அ.தி.மு.க. வேட்பாளராக முதல்முறையாக களமிறங்கிய எஸ்.பி. வேலுமணி, 99,886 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார். 2016 ஆம் ஆண்டு 1,09,519 வாக்குகள் பெற்று மீண்டும் எம்.எல்.ஏ.வானார். அதற்கு முன்பு பேரூர் தொகுதியில் வெற்றிப் பெற்று மூன்று முறை எம்.எல்.ஏ. என்று தொடர்ந்து பதவியில் இருக்கும்  அவர்,  கே.பி.முனசாமி புண்ணியத்தால், 2014ல் இருந்து அ.தி.மு.க. அமைச்சரவையிலேயே பவர்ஃபுல் ஆன  உள்ளாட்சித்துறை அமைச்சராக 8 ஆண்டுகள் தொடர்ந்து அதிகாரமிக்க மனிதராக உயர்ந்து நிற்கிறார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோதும், அதற்குப் பிறகும் கற்றுக் கொண்ட அரசியலை, முழுமையாக தனது தொகுதியில் செயல்படுத்தி மீண்டும் வெற்றிக் கனினையை பறிக்க, மெகா திட்டங்களுடன் களத்தில் குதித்துவிட்டார். அதற்காக அவர் செய்ய திட்டமிட்டுள்ள முதலீடுகளை கேள்விப்பட்டுதான் பிரதான எதிர்க்கட்சியாக தி.மு.க.வே வியர்த்து நிற்கிறது.

எதிர்க்கட்சிகளுக்கு கிலி கொடுக்கும் வகையில், தனது தேர்தல் சடுசடுகளை கடந்த ஆண்டே, அதுவும் கொரோனோவை வைத்தே அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கியிருந்தாலும், நேற்று முதல்தான் தேர்தல் பணி வேகமெடுத்துள்ளது.

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில், அவரது தொகுதியை உள்ளடக்கிய பொள்ளாச்சித் தொகுதியில் தி.மு.க.தான் வெற்றி பெற்றது. அமைச்சர் வேலுமணியின் சொந்த தொகுதியான தொண்டாமுத்தூர் தொகுதியில் மட்டும் 21,000 வாக்குகள் அதிகமாக தி.மு.க.வுக்கு விழுந்துள்ளது. இந்த வாக்குகளை மீண்டும் அ.தி.மு.க.வுக்கு மடைமாற்றும் மெகா திட்டத்தைதான் முதலில் கையில் எடுத்துள்ளாராம் அமைச்சர் வேலுமணி. ஒவ்வொரு தி.மு.க. ஓட்டையும் அ.தி.மு.க.வுக்கு மாற்ற குறைந்தபட்சம் 2000 ரூபாய் வழங்குவது என்றும், அதற்காக 5 கோடி ரூபாய் பணத்தை தயாராக பிரித்து, அந்தந்த பகுதியில் உள்ள நம்பகமான விசுவாகிளிடம் வழங்கிவிட்டாராம் அவர். நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் போல, தனது தொகுதிக்குட்பட்ட ஊராட்சி, வார்டு என ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு விசுவாசி என்ற அடிப்படையில் ஆயிரக்கணக்கான நபர்களை களத்தில் இறக்கிவிட்டுள்ளாராம் அமைச்சர் வேலுமணி.

மியூசிக்கல் சேர் மாதிரி, 100, 200 வாக்குகள் கொண்ட கிராமங்களில் கூட தன்னுடைய விசுவாசிகளை சுழற்றி முறையில் சுற்றிவர வைத்து, அ.தி.மு.க.வுக்கு எதிரான மனநிலையில் இருப்பவர்களின் மனதை கரைத்து, இரட்டை இலைக்கு ஓட்டுப்போடும் வகையில் அவர்களை தனது வலைக்குள் இழுத்துவிட்டாராம். அதற்கு ஏதுவாக கொரோனோ காலத்தை லட்டு மாதிரி பயன்படுத்திக் கொண்டதாக கூறும் தி.மு.க. நிர்வாகிகள், கடந்த 9 மாத காலமாக தனது தொகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கொரோனோ தடுப்பு மருந்துகளான கபசுர குடிநீர் பொடி உள்ளிட்ட தடுப்பு மருந்துகள் அடங்கிய தொகுப்புகளும் சென்று சேரும்படி செய்துவிட்டார். தொடர்ந்து, அந்த காலத்தில் வருமானம் இன்றி தவித்தவர்களுக்கு, மாதந்தோறும் தேவையான உணவுப் பொருள்களையும் வாரி வழங்கியுள்ளார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி என்றும் அவரது புகழ்பாடுகிறார்கள் எதிர்க்கட்சியினர்.

இப்படி தொகுதி மக்களோடு இரண்டற கலந்து நின்றபோதும், தனக்கு எதிரான தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினே களத்தில் குதித்த பிறகுதான், இன்னும் உஷாராகிவிட்டாராம் அமைச்சர் வேலுமணி. நேற்றைய தினம் தனது தொகுதி உட்பட மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க.நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி தேர்தல் பணிகளை முடுக்கி விட்டிருந்தாலும் கூட, தன்னுடைய தொகுதிக்குட்பட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு, கிளை கழகம் முழுவதும் ஒன்றியம் வரையிலான பகுதிகளின் நிர்வாகிகளுக்கு மாதச் சம்பளமும் பேசி முடித்துவிட்டாராம். அவரவர் பொறுப்புக்கு ஏற்ப, ஜனவரியில் இருந்து தேர்தல் முடியும் ஏப்ரல் மாதம் வரை ரூ, 25,000, ரூ.50,000, ரூ,75,000, ரூ.1,00,000 என்று சம்பளம் வழங்குவது என்றும் அதற்கென ஒரு சில கோடிகளை தயாராக எடுத்துவிட்டாராம்.

இதன் உச்சமாக, தனது தொகுதியில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் அரசின் அனைத்துச் சலுகைகளையும் பெற வேண்டும் என்பதற்காக, தாலிக்கு தங்கம், திருமண உதவி, முதியோர் உதவித்தொகை, விலையில்லா கால்நடை, மடிக்கணினி, மிதிவண்டி என அனைத்து நலத்திட்ட உதவிகளையும் வாரி வழங்கவும், அதுவும் வரும் 50 நாட்களுக்குள் விரைவாக வழங்கிட வேண்டும் என்றும் அனைத்துத்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்களாம். அவர்களும் அமைச்சர் மீதான அளவுக்கு மீறிய பாசத்தால், 24 மணிநேரமும் செயலாற்ற தங்களை தயார்படுத்திக் கொண்டு வருகிறார்கள் என்பதுதான் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியான விஷயம்…

இதையெல்லாம் விட, தன்னுடைய தொகுதிக்குட்பட்ட பகுதியில் ஆக்டிவ்வாக உள்ள தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சியில் உள்ள நிர்வாகிகளில் பணத்திற்கு அடிமையாகும் நபர்களை தேர்வு செய்து பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறதாம். ஒருவேளை ஆளும்கட்சியாக தி.மு.க.வே வந்தாலும் கூட அடுத்த ஐந்தாண்டுகளில் அவர்களால் ஆட்சியை வைத்து சம்பாதிக்க முடியாத அளவுக்கு, லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் பணத்தை கிப்ட்டாக கொடுக்க தயாராகி விட்டாராம். இப்படி எஸ்.பி.வேலுமணியின் தேர்தல் பிளானை கேட்டு  கோவை அரசியலில் பழம்தின்னு கொட்டையைப் போட்டவர்களே விக்கித்து நிற்கிறார்களாம். மொத்தத்தில் 25 கோடியே, 50 கோடியோ எவ்வளவு செலவானாலும், பரவாயில்லை. எப்படியாவது மீண்டும் எம்.எல்.ஏ.வாகி விட வேண்டும் என்பதுதான் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தேர்தல் பிளானாம்..

வெறும் எம்.எல்.ஏ., பதவியை கைப்பற்றவா இவ்வளவு மெனக்கெடுகிறார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி என்ற சந்தேகம் அரசியலில் ஆழமான பார்வைக் கொண்டவர்களுக்கு எழலாம். உண்மைதான்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆழ்மன ஆசையே வேற?

உரிய நேரம் வரும்போது அதையும் விரிவாக சொல்லுவோம்..