தூத்துக்குடி மாவட்டத்தில் மறைந்த தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியனின் 9வது நினைவு தினத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதியன்று இவர் தனது மனைவியுடன் தூத்துக்குடிக்குச் சென்று கொண்டிருந்தார். எப்போதும் வென்றான் அருகே ஒரு பாலம் அருகே அவர் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் நிலைகுலைந்து விழுந்த இருவரையும் எதிர்தரப்பினர் அரிவாளால் வெட்டியதில், அவரது மனைவி ஜெசிந்தா பாண்டியன் உயிர் இழந்தார்.
பின்னர், 5 ஆண்டுகளுக்குப் பின்னர் 2012 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் நந்தவனப்பட்டியில் அவருக்கு சொந்தமான வீட்டில் புகுந்த எதிர்தரப்பினர் பசுபதி பாண்டியனை வெட்டிக் கொலை செய்தனர்.
இதனைத்தொடர்ந்து, அவரது சொந்த கிராமத்தில் ஆண்டுதோறும் ஜன. 9 ஆம் தேதி அவரது நினைவுத்தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, மேல அலங்காரதட்டில் பசுபதி பாண்டியன் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேல் அலங்காரதட்டு கிராமத்தின் முக்கிய நுழைவு வாயில் பகுதியில் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
2 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், 18 காவல் துணை கண்காணிப்பாளர்கள் உட்பட 1400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்