Mon. Nov 25th, 2024

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று காலை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில், அக்கட்சித் தலைவர் கேப்டன் விஜயகாந்தை சந்தித்துப் பேசினார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அமமுக, தேமுதிக, எஸ்டிபிஐ மற்றும் ஒவைசி கட்சியுடன் இணைந்துள்ளதால், வெற்றிக் கூட்டணியாக மாறியுள்ளது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, எல்.கே. சுதீஷ் ஆகியோரைச் சந்தித்துப் பேசினேன். கூட்டணியின் ஒட்டுமொத்த குறிக்கோள் தீய சக்தியான தி.மு.க ஆட்சிக்கு வரக்கூடாது, அதேபோல, அ.தி.மு.க.வும் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. தமிழகத்தில் நல்ல ஆட்சியை, ஊழலற்ற ஆட்சியை, தமிழக மக்களுக்கு நன்மை அளிக்கக்கூடிய ஆட்சியை அமைக்க அமமுக தலைமையிலான இந்தக் கூட்டணி உறுதியெடுத்துள்ளது.

தமிழகத்தில் துரோக கட்சிகள் வெற்றிப் பெற்றுவிடக் கூடாது என்பதே எங்களின் முதன்மையான குறிக்கோள். தொடர்ந்து 10 நாட்களாக கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது. நிறைவாக 60 தொகுதிகள் என முடிவு செய்வதற்கு எந்தளவு சிரமமப்பட வேண்டும் என்பது அரசியல் கட்சித் தலைவர்களுக்கு நன்றாக தெரியும்.

தே.மு.தி.க. வைத் தேடி அ.ம.மு.க. போனதா, தே.மு.தி.க வந்ததா என்பதெல்லாம் விவாதத்திற்குரிய விஷயமே அல்ல. இரண்டு துரோகக் கட்சிகள் வீழ்த்தப்பட வேண்டும் என்கிற ஒருமித்த கருத்து இருதரப்பிலும் இருந்ததால், கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்

மக்களை ஏமாற்றும் வெற்று வாக்குறுதிகளை திமுகவும், அதிமுகவும் கொடுத்துள்ளன என்று மக்களுக்கே தெரியும். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை திமுக, அதிமுக கட்சிகள் அறிவித்துள்ளன என்பது அனைவருக்கும் தெரியும். 7 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடனை வைத்துக்கொண்டு வெற்றிநடை போடுகிறது என்றால் மக்கள் காதில் பூ சுற்றும் செயல் அல்லவா?

தேமுதிக கூட்டணிக்குள் வந்ததால், 42 தொகுதிகளில் எங்கள் தொண்டர்கள் அவர்களாகவே விட்டுக் கொடுத்துள்ளனர். அப்படிப்பட்ட ராணுவக் கட்டுப்பாடு உள்ள கட்சி இது. நீங்கள் நினைப்பதுபோல் எங்கள் இயக்கம் டெல்டாவில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் உள்ளது. தலைமை மட்டும் பேசி உருவான கூட்டணி அல்ல. தொண்டர்களும் நிர்வாகிகளும் விரும்பிப் பேசி இணைந்த கூட்டணி இது.

தேமுதிகவைப் பக்குவமில்லாத கட்சி என்கிறார் முதல்வர் பழனிசாமி. இவர் நிரம்பப் பக்குவமானவரா? இவரே குருட்டு அதிர்ஷ்டத்தில் வந்தவர்தானே. விஜயகாந்த், தானே ஒரு கட்சியைச் சுயமாக உருவாக்கியவர். இவருக்கு அவர்களை விமர்சிக்க என்ன அருகதை உள்ளது?

கரோனா நோய்த்தொற்று அதிகரிக்கிறது என அரசு முடிவெடுத்தால் அதற்குக் கட்டுப்படவேண்டியது என் பொறுப்பு. அதிமுகவுக்கு வரவேண்டும் என சி.டி.ரவி அவரது விருப்பத்தைச் சொன்னார். எனக்கு நன்கு தெரிந்தவர் என்பதால் அவர் அப்படிச் சொல்லியிருப்பார். அதற்காக நான் பதில் சொல்ல முடியாது”.

இவ்வாறு தினகரன் தெரிவித்தார்.