Sun. Nov 24th, 2024

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு….

தரமற்ற மடிக்கணினியை வழங்கிய சீன நிறுவனத்தை ‘ப்ளாக் லிஸ்ட்’ செய்து, அந்நிறுவனத்திற்கு மேலும் வழங்க இருக்கும் தொகையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விபரம்.
மடிக்கணினிகள் வழங்கும் திட்ட டெண்டரில் சீன நிறுவனம் பங்கேற்று – மடிக்கணினிகள் குறித்த இரு மாதிரிகளை (Model) அளித்து – அதன் சோதனை அறிக்கையையும் (Test Report) கொடுத்திருந்தது. ஆனால் இரு மாதிரி மடிக்கணினிகளுக்கும் ஒரே விலை என்று கூறியிருக்கிறது. இந்த டெஸ்ட் ரிப்போர்ட்டுகளை ஆய்வு செய்ததில் ஒரு மாடல் மடிக்கணினியின் செயல் திறனுக்கு 465 மதிப்பெண்களும் – இன்னொரு மாடல் மடிக்கணினியின் செயல்திறனுக்கு 265 மதிப்பெண்களும் என இரு வேறு செயல்திறன் கொண்டதாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கிய அரசு” என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் முதலமைச்சர் பழனிசாமி தனது அமைச்சரவை சகாவுடன் இணைந்து, 1921 கோடி ரூபாய் மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் நிகழ்த்தியுள்ள மாபாதக மெகா ஊழல் இது. மொத்த நிதி ஒதுக்கீட்டில் 1465 கோடி ரூபாய் அந்த சீனக் கம்பெனிக்கு தற்போது வழங்கப்பட்டு விட்டது என்றும், மீதியுள்ள 456 கோடி ரூபாயை “தேர்தல் நடத்தை விதிகள்” அமலுக்கு வருவதற்கு முன்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிய வருகிறது. அப்படி வழங்குவது – அரசு கஜானாவில் பகல் கொள்ளை நடத்துவதற்கு இணையானது.

எனவே, மாணவ மாணவியருக்கு தரமற்ற மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தில் இந்த மாபெரும் ஊழலுக்கு வித்திட்டுள்ள முதலமைச்சர் பழனிசாமி உடனடியாக மீதமுள்ள 465 கோடி ரூபாயைச் சீன நிறுவனத்திற்கு வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும்; சம்பந்தப்பட்ட சீன நிறுவனத்தை எவ்விதத் தயக்கமும் இன்றி “பிளாக் லிஸ்ட்” செய்து, தரக்குறைவான மடிக்கணினி வழங்கியதற்காகப் பெருந்தொகையினை அபராதமாக அந்த நிறுவனத்திடமிருந்து வசூலிக்க உத்தரவிட வேண்டும் என்றும்; பெற்றோரும், மாணவ மாணவியரும், ஆசிரியர்களும் எதிர்பார்க்கிறார்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.